திருவேங்கடப் பெருமாள் கோவில் - திருவேங்கடம்

வரலாறு

வேங்கடமெனில் பாவங்களைச் சுட்டெரிக்கக் கூடியது என்ற
பொருள்கொண்ட இத்தலத்தைப்பற்றி பிரம்மாண்ட புராணம், வராக
புராணம்ஸ்காந்த புராணம் பாத்ம புராணம், என்ற புராணங்கள்
வாயிலாக அறியப்படுகிறது. எண்ணற்ற நூல்களில் இத்தலம் பற்றிய
பல குறிப்புகள் கிடைக்கிறது. எண்ணற்ற மொழிகளில் இத்தல வரலாறு
எழுதப்பட்டுள்ளது. எழுத்து வடிவம்பெறாமல் ஒலிவடிவிலேயே இன்றும்
இருந்து கொண்டிருக்கும் சில மொழிகளில் எண்ணற்ற வருடங்கட்கு
முன்னால் இப்பெருமானைக் குறித்துச் செய்யப்பட்ட ஸ்தோத்திரங்கள்
இன்னும் ஒலிவடிவாகவே தொடர்ந்து பரம்பரை பரம்பரையாகச்
சொல்லப்பட்டு (ஸேவிக்கப்பட்டு) வருகிறது.

இத்தலம் பற்றி எழுதப்புகின் அல்லது அறியப்புகின் கிடைக்கின்ற
ஆதாரங்களும், விவரங்களும் ஏராளம் ஏராளம்.

இத்திருமலைக்கு ஒவ்வொரு யுகத்திலும் ஒரு சிறப்பான நிகழ்ச்சியால்
ஒவ்வொரு விசேடமான பெயர் வழங்கி வந்தது.

கிரேதாயுகத்தில்
    கருடாத்ரி அல்லது கிரிடாத்திரி
திரேதாயுகத்தில்
    வ்ருஷபாத்ரி
துவாபர யுகத்தில்
    அஞ்சனாத்ரி
கலியுகத்தில்
    வேங்கடாத்ரி(வேங்கடாசலம்)

இத்திருமலையில் வைகுண்ட வாசனான ஸ்ரீனிவாசப் பெருமாள்
மிகவும் விருப்பங்கொண்டு நேரில் வரவிரும்பி அவ்விதமே அவதார
ரூபத்தில் எழுந்தருளி வசித்துவருவதாகவும் கலியுகம் முடியும்வரை
பக்தர்களின்குறை தீர்க்க இங்கேயே வசித்து வருகிறாரென்றும் அதன்
காரணமாகவே முப்பத்து முக்கோடி தேவர்களும் சகல ரிஷிகளும்,
இத்திருமலைமேல் வந்த எம்பெருமானைத் துதித்தவண்ணம் வாழ்ந்து
வருகின்றனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. திருமலைக்குச் செல்ல
நினைப்பதும் செல்வதும் பாக்கியம். அங்கு சென்று ஸ்ரீனிவாசனைச்
சேவிப்பது பெரும் பாக்கியம்.கேட்ட வரங்களையெல்லாம் தரும் கலியுக
தெய்வம் இந்த வேங்கடத்தான் என்று வேதங்கள் அறுதியிடுகின்றன.

7 பர்வதங்களான வெங்கடாத்ரி, சேஷாச்சலம், வேதாசலம்,
கருடாசலம்வ்ருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, அனந்தாத்ரி என்னும்
பெயர்களுடன் ஏழுமலையாக இலங்கிவரும் இத்திருமலையில் 7
மலைகட்குமத்தியில் ஸ்ரீனிவாசன் எழுந்தருளியுள்ளார்.

ஸ்ரீனிவாசனாகப் பெருமாள் இங்கு எழுந்தருளுவதற்கு முன்பே
வராக மூர்த்தியாக இவ்விடத்து எழுந்தருளி வராகரூபியாய் காட்சி
தந்தருளினார். வராகச் சேத்திரம் என்றே ஒருகாலத்தில் இது புகழ்
பெற்றிருந்தது. தற்போதும் இங்குள்ள ஸ்வாமி புஷ்கரிணிக்கு அருகில்
அமைந்துள்ள ஆதிவராகரைச் சேவித்தபின்பே ஸ்ரீனிவாசனைச்
சேவிக்கச்செல்ல வேண்டுமென்பது நியதி.

ஸ்ரீனிவாசன் ஈண்டெழுந்தருளியமைக்கு காரணம்

பாண்டவர்களின் நாயகன் தர்மபுத்திரனான யுதிஷ்ட மகாராஜனின்
ஆட்சிக்காலம் முடிவுற்றதும் இப்புவியில் கலியுகம் பிறக்கத்
தொடங்கியது. எங்கும் கலியின் கொடுமை தாங்கவொன்னாததாயிருந்தது.
உலகம் நாளுக்கு நாள் அழிவை நோக்கிச் செல்வதைக் காணப்
பொறாத முனிவர்கள், கலியின் கொடுமை குறைந்து உலக நன்மைக்காக
காஷ்யப மகரிஷியின் தலைமையில் ஒரு பெரிய யாகம் நடத்திக்
கொண்டிருந்த போது, அங்கு வந்த நாரதர் இந்த மகாயக்ஞத்தின்
பயனை எந்த மூர்த்திக்கு அளிக்கப் போகிறீர்கள் என்று கேட்க
அவர்களும் வழக்கப்படியான முறைப்படி பிரம்மா, விஷ்ணு ருத்ரன்
என்னும் மும்மூர்த்திகட்குத்தான் வழங்கப்போகிறோம் என்று சொல்ல
அதைக் கேட்ட நாரதர் மற்ற யுகங்களுக்குத்தான் அது பொருந்தும்,
கலியுகத்தில் மானிடர்களிடம் காணப்படும் சகல பாவங்களையும்
பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளும் மூர்த்தி யாரோ அவருக்குத்தான்
தரவேண்டும் என்றார்.

இதைக்கேட்ட முனிவர்கள் மும்மூர்த்திகளில் மிகப் பொறுமைசாலி
யார் என்பதைக் கண்டுபிடிக்கும் வல்லமை நம்மில் யாருக்குள்ளதென்று
ஆராய அனைவரும் ஒன்றுகூடி அந்த வல்லமை பிருகு
மஹரிஷிக்குத்தான்உண்டு என்று தீர்மானித்து அவரையே மூவுலகுக்கும்
அனுப்ப எண்ணினர். அவரும் அதற்கு இசைந்தார்.

பிருகு முதலில் பிரம்மாவின் சத்திய லோகத்திற்கு வந்தார். அங்கு
பிரம்மன் சரஸ்வதி தேவியுடன் ரிஷிகள் புடைசூழ கொலுவீற்றிருந்தார்.
தான் வந்ததை பிரம்மன் கண்டும் காணாததுபோல் இருக்கிறான் என்று
நினைத்த பிருகு பிரம்மதேவனுக்கு நேரில் வந்து கோபக்கனல் வீச
நின்றார். அப்போதும் பிரம்மன் இவன் நரன்தான் என்று எண்ணி
அலட்சியப்பார்வை பார்த்து வரவேற்காது இருந்தார். இதனால்
கோபத்தின்எல்லையை அடைந்த பிருகு ஏ பிரம்மனே நீ வந்தோரை
வரவேற்கும் பக்குவமறியாது, மமதை கொண்டுள்ளாய் எனவே உனக்கு
பூலோகத்தில் இனிமேல் பூஜைகள் இருக்காது. கலியுகத்தில் உனக்கு
பூவுலகில் கோவில்களும், வழிபாடுகளும் இல்லாமல் போகக்கடவது
என்று சபித்துவிட்டு கைலாயத்திற்கு வந்தார்.

கைலாயத்தில் சிவன் உமையவளோடு அந்தப்புரத்தில் ஏகாந்தத்தில்
தனித்திருக்க, சிவன் எதிரிலே சென்று நின்றார் தான் ஏகாந்தத்தில்
இருக்கும் வேலையில் அனுமதியின்றி உள்ளே நுழைந்த பிருகுவின் மீது
தனது சூலாயுதத்தை ஏவினார். அதிலிருந்து தன்னைக் காத்துக்கொண்ட
பிருகு இவன் கோபக்காரன் அவன் அலட்சியக்காரன் இவ்விருவரும்
பொறுமைசாலிகள் இல்லை யென்று தீர்மானித்ததோடு சிவனை நோக்கி
என்போன்ற ரிஷிகள் எந்த நேரத்தில் எந்த நிலையில் வந்தாலும்
வரவேற்பதே உன்போன்றவர்களின் கடமை. அதைவிடுத்து என்மீது
கோபம் கொண்டாய். எனவே கலியுகத்தில் பூவுலகில் நீங்கள் இருவரும்
(சிவன், உமை)சேர்ந்தது மாதிரியான கோவில்கள் இல்லாமல் போகக்
கடவது என்று சபித்துவிட்டு வைகுண்டம் அடைந்தார்.

அங்கே திருமகள் பாதம் வருட அறிதுயிலமர்ந்த மணிவண்ணன்
சற்றேனும் இவரை ஏறெடுத்து பார்க்கவில்லை. மஹாவிஷ்ணு திருமகளை
நோக்க திருமகள் மஹாவிஷ்ணுவை நோக்கி அண்ணலும் நோக்கினான்.
அவளும் நோக்கினாள் என்ற வண்ணமிருக்க வெகுநேரம் காத்திருந்தார்.
கொஞ்சமும் பயனில்லை. மற்றிரண்டுலோகங்களில் கிடைத்த மரியாதை
கூடஇங்கு இல்லை. மூம்மூர்த்திகளில் எவனுக்கும் பொறுமையில்லை
என்று எண்ணி மிகவும் வெகுண்டார். எனவே மிக விரைந்த
நடையினராய் திருமாலை நோக்கிச் சென்றார். அப்போதும் அவர்
திரும்பிப் பார்க்கவுமில்லை.எனவே தனது காலால் திருமாலின் நெஞ்சில்
எட்டி உதைத்தார் (கலியுகமல்லவா, அங்கிருந்து வந்த முனிவரல்லவா)

திடீரென்று அறிதுயில் களைந்த திருமால் அம்முனிவரின் பாதத்தைப்
பற்றிக்கொண்டு ஐயோ பாறை போன்ற என் மார்பில்உதைத்த தங்கள்
பாதங்கள் எப்படி நோகிறதோ என்று அந்தப்பாதத்தை தமது
இருகரங்களால் தாங்கி நீவி விட ஆரம்பித்தார்.

தன் தவற்றை உணர்ந்த பிருகு கண்களில் தாரை தாரையாக நீர்
பெருக்கெடுக்க மன்றாடி மன்னிப்புக் கேட்டு மனம் பதைபதைக்கத் தான்
வந்த காரியத்தையும் தெரிவித்து விட்டு நடந்த உண்மைகளை நாவலந்தீ
வினில் உரைக்க திரும்பலுற்றார்.

என்னதான் இருந்தாலும் தன்முன்னே தனது மணாளனை முனிவர்
ஒருவர் உதைத்ததை பொறுக்கவியலாத மகாலட்சுமி வைகுண்டத்தை
விட்டுவிலகி பூவுலகுக்கு வந்து மறைந்திருந்து தவம் செய்து வரலாயினர்.
திருமகள் இல்லாத வைகுண்டம் களையிழந்தது.திருமாலுக்கு திருமகளின்
பிரிவு தாங்கவொன்னாத துயரைத் தந்தது. எனவே தாமும் பூலோகம்
புகுந்துதம் மனதிற்கு ரம்மியமான சூழ்நிலையில் இலங்கிய திருமலையில்
ஒரு புளியமரத்தின் புற்றில் எழுந்தருளி வசித்து வரலாயினர்.

இஃதிவ்வாறிருக்கதிரேதா யுகத்தில் குசத்துவசர் என்னும் மகரிஷியின்
தபோ வலிமையால் திருமகள் அவருக்கு புத்திரியாக அவதரித்து வேத
அலங்கார ரூபத்துடன் சகல வேதங்களின் சாராம்சம் அறிந்த
பேரொளியாய் வேதவல்லி (வேதவதி) என்ற பெயருடன் வளர்ந்துவரத்
தக்க பிராயத்தையடைந்த வேதவதிதான் ஸ்ரீவிஷ்ணுவுக்கே மாலையிட்டு
அவனையே மணம் முடிக்க வேண்டும் அதற்கு மார்க்கமுண்டோ என்று
தந்தையை வினவ அவரும் ஸ்ரீவிஷ்ணுவைக் குறித்தே தவமிருக்குமாறு
சொல்ல வேதவதி விஷ்ணு தியானத்தில் ஆழ்ந்தார்.

திரேதாயுகத்தில்     இராமவதாரத்தின்    போது     இராவணன்
பஞ்சவடியிலிருந்து சீதா தேவியைத் தூக்கிச் செல்லும் போது
வேதவதியுடன் சென்ற அக்னி தேவன் ராவணனை நிறுத்தி ஏ,இராவணா
நீ கொண்டு செல்லும் சீதை போலிச் சீதை உண்மையான சீதையை
இதோ என்னிடம் ஒளித்து வைத்தார்கள் நின் கோபத்திற்கு ஆளாகி
பின்னால் துன்பப்படக்கூடாது என்பதற்காகவே உன்னிடம் உண்மையைக்
கூறுகிறேன். இந்த உண்மைச் சீதையை ஏற்றுக்கொள் என்று கூற அதை
நம்பிய ராவணன் வேதவதியைக் கொண்டு செல்ல, உண்மைச் சீதை
அக்னியிடம் சேர்ந்தாள்.

இராமன், இராவண வதம் முடித்து சீதையை அக்கினியில் இறக்க
கற்புக்கரசிகளான இரண்டு சீதைகளையும் அக்கினிதேவன் இராமனிடம்
ஒப்படைக்க உண்மைச் சீதையைஏற்றுக்கொண்ட இராமன், வேதவதியின்
தவத்தை மெச்சி இந்த அவதாரத்தில் நான் ஏகபத்தினி விரதன். எனவே
கலியுகத்தில் யான் திருமகளை விடுத்து பூவுலக வாசம் செய்யும் போது
நின்னை அடைவோம் என்று வரமீந்தார்.

அந்த வேதவதியே, கலியுகத்தில் சந்திரவம்சத்தைச் சார்ந்த ஆகாச
ராஜன் என்னும் மன்னன். புத்திரப்பேறு வேண்டி செய்த புத்திர
காமேஷ்டியாகத்தில் ஒரு பெண் மகவாகத் தோன்றி பத்மாவதி என்னும்
பெயரில் அம்மன்னனிடம் வளர்ந்து வந்தாள்.

இஃதிவ்வாறிருக்க ஸ்ரீகிருஷ்ணவதாரத்தில் கண்ணனை யசோதை
வளர்த்தாள். ஆயினும் கண்ணன் ருக்குமணியையும், சத்தியபாமாவையும்
திருமணம் செய்து கொண்ட சுப நிகழ்ச்சியை யசோதை காணவில்லை.
தன் குழந்தையின் திருமணக் கோலத்தைக் காணமுடியவில்லையே என்ற
மனக்குறையை கலியுகத்தில் தீர்த்துவைப்பேன் என்று ஸ்ரீகிருஷ்ணன்
தன் அன்னைக்கு ஆறுதல் வரம் தந்திருந்தார்.

இந்த யசோதையே வகுளமாலிகை என்ற பெயரில் திருமலையில்
இருந்தவராக மூர்த்திக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார்.
திருமலயில் புளியமரத்தடியில் ஒரு புற்றில் எம்பெருமான் எழுந்தருளி
நெடுநாள் அன்ன ஆகாரமின்றி இருக்க இந்நிலைகண்ட பிரம்மனும்
சிவனும் தாங்களே முறையே பசுவும் கன்றுமாக மாற பூமாதேவி ஒரு
இடைக்குல பெண்ணாக அவதரித்து அந்த பசுவினையும் கன்றினையும்
சோழ மன்னனிடம் விற்க, அவனதை மந்தையில் சேர்க்க தினந்தோறும்
பசுக்கூட்டம் மேய்ச்சலுக்குச் செல்லும்போது அந்த தெய்வப்பசு மட்டும்
மந்தையிலிருந்து விலகி ஸ்ரீனிவாசன் எழுந்தருளியுள்ள புற்றுக்
கருகாமையிற் சென்று பாலைச் சொரிய தெய்வப்பசு பால் கொடுக்காமல்
இருப்பதையறிந்த மன்னன் இதன் காரணத்தைக் கண்டுபிடிக்குமாறு
பசுமேய்ப்போரிடம் தெரிவிக்க தெய்வப்பசு புற்றருகே சென்று பால்
சொரிவதைக் கண்டு ஆத்திரமுற்று தன் கையிலிருந்த கோடாலியால்
பசுவை வெட்ட எத்தனிக்க எம்பெருமான் லேசாக எழுந்திருக்க
கோடாலி அவர் தலையில் பட்டு ரத்தம் சிந்த ஆரம்பிக்க
பசுமேய்ப்பவன் மூர்ச்சையாகி கீழே விழுந்தான்.

தெய்வப்பசு கண்ணீர் சிந்திய கோலத்துடன் சோழ மன்னனின்
ஆராய்ச்சி மணியை அடிக்க என்னவென்று புரியாத மன்னன்
பசுவினைப் பின் தொடர்ந்து புற்றருகில் வரபசு மேய்ப்பவன் கீழே
விழுந்துகிடப்பதையும், ரத்தம் கொட்டியிருப்பதையும் புற்றுக்குள் யாரோ
இருப்பதையும் அறிந்து தனது உடைவாளால் வெட்ட முயற்சிக்கும்
வேளையில் எம்பெருமான் புற்றிலிருந்து முழுவதுமாக வெளிப்பட்டு
பசுவைக்கொல்லவந்தவனைத்தடுத்து தானே பசுவைக் காப்பாற்றியதையும்,
ஏவலன் செய்த குற்றம் மன்னனையே சாருமாதலால் நீ பிசாசாக
அலையக்கடவது என்று ஸ்ரீனிவாசன் சாபமிட நிலையுணர்ந்த மன்னன்
மன்னிப்புக் கேட்க நீ சில காலம் பிசாசாக அலைந்து பின்பு
ஆகாசராஜன் என்னும் பெயரில் மன்னனாகத் திகழ்வாய் என்றும்
அப்போது திருமகளே உனக்கு மகளாக வாய்த்து வளர்ந்துவர யாம்
வந்து மணம்புரிவோம் என்று கூறி பசுமேய்ப்பவனையும் உயிர்ப்பித்தார்.

திருமலையில் புற்றில் நடந்த அதிசயத்தைச் செவியுற்ற வகுளமாலிகை
ஸ்ரீனிவாசனை மகனாக வரித்து யசோதை கண்ணனை வளர்த்தவாறே
வளர்த்து வர ஒரு நாள் ஸ்ரீனிவாசன் வேட்டைக்குச் செல்லும் போது
தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த பத்மாவதியைக் கண்டு
இவளே திருமகளென தனது வளர்ப்புத் தாயான வகுளமாலிகையிடம்
தெரிவித்து ஆகாசராஜனிடம் பெண்கேட்டு அனுப்பிவைத்தார்.

ஆகாச ராஜனும் தனது மகள் மூலம் உண்மை நிலை உணர்ந்தும்
மந்திரா லோசனைகளை செய்து மகவு தர இசைந்து மணநாள் குறித்து
திருமால் திருமகள் திருமணம் இதுவென உள்ளுணர்வால் உணர்ந்து
வெகு விமரிசையாக இதுகாறும் யாரும் செய்திராவண்ணம் திருமணம்
நடத்த எண்ணி அதற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்ய பணம்
பற்றாக்குறையாக இருக்க குபேரனிடம் கடன் வாங்கி திருமலையில்
திருமணம் நடத்தி வைத்ததாக வரலாறு.

வேதவதியான     பத்மாவதியினை     ஏற்று     யசோதையான
வகுளமாலிகையின் குறைதீர்த்த ஸ்ரீனிவாசன் ஏதோ மனக்கிலேசம்
உள்ளவர் போலவே தோற்றமளிக்கஎம்பெருமானின் உளக்கிடைக்கையை
அறிந்த பத்மாவதி, தாங்கள் வைகுண்டத்திலிருந்து வந்த திருமகளைத்
தானே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்க ஸ்ரீனிவாசன்,
ஆம் என்பது போல தலையசைக்க அவ்வாறாயின் போய்
மகாலெட்சுமியை அழைத்து வாரும் என்று அனுப்பிவைக்க திருமகள்
லட்சுமி தேவியென பெயர்கொண்டு கோல்ஹாப்பூரில் (இங்கு லட்சுமி
சேத்திரமுண்டு) இருப்பதை அறிந்து அங்கு எழுந்தருள லட்சுமி
தேவி ஹோல்காப்பூரில் இல்லாததைக் கண்டு மிகவும் வாடிய
எம்பெருமாள் என் செய்வது என்று சிந்தித்திருக்கும் வேளையில்
கீழ்க்கண்டவாறு வானிலிருந்து அசரீரி ஒலித்தது.

பகவானே, இவ்வூருக்குத் தெற்கே ஓடும் கிருஷ்ணவேணி
ஆற்றிலிருந்து 22 யோசனை தூரத்தில் பொன்முகலியென்று ஒரு நதி
ஓடுகிறது. அதன் அருகில் நின்று சுவர்க்க லோகத்தில் உள்ள ஆயிரம்
இதழ் உடைய தாமரை மலரை வரவழைத்து ஒரு குளத்தில் அம்மலரை
பிரதிஷ்டை செய்து அதன் நேர் கிழக்கில் சூரிய பகவானை பிரதிஷ்டை
செய்து 12 வருட காலம் லட்சுமி மந்திரத்தை ஜெபித்து வந்தால்
திருமகளை அடையலாம் என்று கூறியதைக் கேட்டு, எம்பெருமான்
வாயுபகவானை அழைத்து ஆயிரம் இதழ் தாமரையைக் கொண்டுவர
உத்தரவிட வாயும் அம்மலரைக் கொணர அசரீரி ஒலித்த வண்ணமே
தவமிருக்க இம்மந்திரம் லட்சுமி தேவியை பிடித்து இழுத்தது.

அப்போதும் எம்பெருமானைச் சேர மனமில்லாத திருமகள்
பரமபதத்தின் நித்ய சூரிகளை அழைத்து என் செய்வது என்று கேட்க
தாயே தாங்கள் அறியாதது ஒன்றுமில்லை, பிருகு மும்மூர்த்திகளில்
யார் சாந்தவான் என்று அறியவே அவ்வண்ணம் செய்தான். சகல
ஜீவாத்மாக்களுக்குத் தாயாக விளங்கும் தாங்கள் பிருகு முனிவனுக்கும்
தாயன்றோ. அவன் உங்கள் குழந்தையல்லவா. குழந்தையின்
குற்றங்களைத் தாய் பொருட்படுத்தலாமோ. பகவானின் தவம்
வீணாகலாமோ. தாங்கள் எம்பெருமானைச் சேர்வதே அழகானதன்றோ
என்று கூற மனந்தெளிந்த லட்சுமி தாமரை நாளத்தின் வழியே
பிரவேசித்து பேரழகு பொருந்தி நிற்க, எம்பெருமான் களிபேருவகை
கொண்டு ஏற்றுக்கொண்டார்.

பிருகு முனிவர் ஓடிவந்து பிராட்டியின் கால்களில் வீழ்ந்து
மன்னிப்புக் கோரி கதற அருள்புன்னகை புரிந்த லட்சமி தேவி,
குழந்தாய் பிருகுவே உன்னிடம் ஒரு குற்றமுமில்லை எல்லாம்
பகவானின் லீலைகள் என்று கூறியருள, ஸ்ரீனிவாசன் மகாலட்சுமியை
அழைத்துக் கொண்டு திருமலைக்கு வர வகுளமாலிகையும் பத்மாவதியும்
எதிர் கொண்டழைக்க எம்பெருமான் ஸ்ரீனிவாசன் என்னும் திருநாமத்
தோடு லட்சமி பத்மாவதி சமேதராக திருமலையில் ஆனந்த
நிலையத்தில் எழுந்தருளியதாக வரலாறு.

ஆதிவராஹ சேத்திரம் என்னும் இந்த திருவேங்கடம் மொத்தம் 3
பிரிவுகள் கொண்டது.

முன் பின்