நீர்வண்ணப்பெருமாள் கோவில் - திருநீர்மலை
வரலாறு

பிரம்மாண்ட புராணம் மற்றும் வடமொழி நூல்களில் இத்தலம்
பற்றிப் பேசப்படுகிறது.

இந்த தலம் அமைந்துள்ள பகுதியை காண்டவனம் என்றும்,இத்தலம்
அமைந்துள்ள மலையினை தோயத்தரி என்றும் புராணம் செப்புகிறது.
இத்தலம் “ஸ்வயம் வ்யக்த ஸ்தலம்” அதாவது தானாகவே தோன்றிய
தலமாகும். முக்தி அளிக்கும் 8 தலங்களுள் இதுவும் ஒன்றாகும். மற்ற
ஏழு ஸ்தலங்களின் விபரம் பின்வருமாறு

1. திருவரங்கம்    2. ஸ்ரீமுஷ்ணம்
3. திருப்பதி    4. சாளக்கிராமம்
5. நைமிசாரண்யம் 6. புஷ்கரம்
7. நாராயணபுரம்.

இத்தலங்களில் எல்லாம் பெருமாள் தாமாகவே உகந்து
எழுந்தருளியுள்ளார்.

இராமாயணம் இயற்றிய வால்மீகி இந்த ஸ்தலத்திற்கு வந்ததாக
ஒரு வரலாறு உண்டு. இங்குவந்த வால்மீகி மலைமீதேறி சயனத்
திருக்கோல அரங்கன் அமர்ந்த திருக்கோல நரசிம்மன், நடந்த
திருக்கோல திருவிக்ரமன் ஆகிய மூவரையும் வழிபட்டு கீழே
இறங்கலானார்.

ஏனோ தெரியவில்லை. இம்மூவரைச் சேவித்தும் வால்மீகிக்கு
பூரண திருப்தியுண்டாகவில்லை. உள்மனதை ஏதோ வருடியது போல
இருந்தது. கீழே இறங்கியதும் கீழ்த்திசை நோக்கி கரங்களை குவித்த
வால்மீகி என் பிரிய ராமன் இங்கு இல்லை. ரமனியமான ராமபிரானே
எங்கே உன் பேரழகுத் திருவுருவம் என்று ராமனைப் பிரிந்த
நெஞ்சு வேகுவதுபோல நீர்மல்கப் பிரார்த்தித்து நின்றார்.

அந்தர்யாமியான பரஸ்வரூப     நாராயணன்     வால்மீகியின்
பிரார்த்தனைக்கு இரங்கினார். இங்கு எழுந்தருளியுள்ள பெருமாள்கள்
மூலமாகவே வால்மீகிக்கு காட்சியளித்தார். அதாவது இங்குள்ள
ரெங்கநாதனே ராமனாகவும், லட்சுமி தேவியே ஜானகியாகவும்,
ஆதிசேடன் இலக்குமணனாகவும் சங்குச்சக்கரங்கள் சத்ருக்கனர்,
பரதராகவும்,விஸ்வக்சேனர் சுக்ரீவனாகவும் கருடன் ஆஞ்சநேயராகவும்,
ரம்மியமான நீர்வண்ண ரூபத்தில் காட்சி கொடுத்து வால்மீகியின்
கண்ணீரைத் துடைத்ததாக ஐதீஹம்.

ராமனின் பேரழகில் அதாவது நீர்வண்ணனாக ராமன் காட்சி
அளித்த தோற்றப் பொலிவை கண்டு மயங்கி நின்ற வால்மீகி இதே
திருக்கோலத்தை எல்லோருக்கும் காட்ட வேண்டுமென்று வேண்டி
நிற்க அவ்வண்ணமே ஆயிற்றென்பது வரலாறு. தாமரை மலர் பீடத்தில்
அஸ்த முத்திரை பொருந்திய அபயமளிக்கும் அழகிய திருக்கரத்துடன்,
திருமார்பை சாளக்கிராம மாலை அலங்கரிக்க நீர்வண்ண ரூபத்தில்
இங்குகாட்சி தருகிறார்.

இந்த மலைக்குத் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ய
வந்தபோது தொடர்மழை பெய்து அடைமழையாக மாறி மலையைச்
சுற்றிலும் அரண்போல் நீர் சூழ்ந்துகொண்டது. திருமங்கையால்
பெருமாளைத் தரிசிக்க முடியவில்லை. ஒன்றிரண்டு நான்கைந்து
ஆறேழுவென நாட்கள் கடந்து

வாரங்களாகி மாதங்களுக்குள் ஐக்கியமாகிவிட்டது.என்ன நேர்ந்தாலும்
சரி எத்தனை மாதங்களாயினும் சரி இப்பெருமானைச் சேவிக்காது
செல்வதில்லையென முடிவு செய்துவிட்டார்.

அர்ச்சாவதாரத்தில் அவருக்குள்ள ஈடுபாட்டிற்கு எல்லை காட்ட
முடியுமா.

கடல் நீர் கண்டு களிக்க முடியுமேயன்றி உண்டு உய்ய முடியாது.
ஆற்று நிரோவெனில் வற்றும், பெருகும். அதன் மருங்கேயே காலம்
முழுவதும் வாழ்தலுமரிது. குளங்குட்டைகளில் உள்ள நீரெனில்
பருவகாலம் முடிந்ததும் வற்றி போகும். அடுத்த பருவத்திற்கு அவை
காத்து நிற்கும். ஊற்று நீரெனில் எங்கு ஊற்றுள்ளது என்று
தேடியல்லவா கண்டுபிடிக்க வேண்டும். அதுவும் நன்னீர் ஊற்றாக
அமையுமென சொல்ல முடியாதே. கிணற்று நீரென்றால் வேண்டும்.
போதெல்லாம் முகந்து கொள்ளலாமே. கிணற்றில் நீர் வற்றினும்
ஆழப்படுத்திக் கொள்ளலாமே. அதுபோன்றதல்லவா எம்பெருமானின்
நிலைகள். அதாவது கடல்நீர் போன்றதே பரம். ஆற்றுநீர் போன்றதே
வ்யூகம். குளத்து நீர் போன்றதே விபவம் ஊற்று நீர் போன்றது
அந்தர்யாமித்வம். கிணற்று நீர் போன்றதல்லவா அர்ச்சாவதாரம்.

வேண்டிய பொழுதெல்லாம் சேவித்து ஆத்மதாகம் தீர்க்கப்
பெறலாமே. எம்பெருமான் கோபமாக இருந்தால் கூட பக்தி யென்னும்
கயிற்றால் கட்டி இழுத்து விடலாமே.

(அர்ச்சாவதாரமான அதிபோக்யமான வஸ்து நமக்கு எளிதில்
கிடைத்திருக்க, அதைவிட்டு கிட்டுதற்கரிய பரஸ்வ ரூபத்தை ஏன்
அனுபவிக்கத் துடிக்க வேண்டும்)

“ஏரார் முயல் விட்டு காக்கை பின் போவாரோ” அப்பேர்ப்பட்ட
அர்ச்சாவதார மூர்த்தியை நீர் சூழ்ந்து விட்டால் மட்டும் சேவிக்காது
சென்று விடலாமா என்று எண்ணி அங்கேயே தங்கி இருந்தார்.
தங்கியிருந்தார் 6 மாத காலம். பிறகு நீர்வற்றிப் போன பின்பு
பெருமாளைக் கண்குளிரக் கண்டு பாக்களை மங்களாசாசனமாய்
பொழிந்தார்.

திருமங்கையாழ்வார் வந்தபோது நீர் சூழ்ந்து நின்ற காரணத்தால்
திருநீர்மலை என்றாயிற்று. அதற்கு முன்பு காண்டபவனப் பெருமாள்
என்றும், காண்டபவன நாதன் என்னும் பெயர்களே வழக்கிலிருந்ததாக
அறிய முடிகிறது. திருமங்கை கூட தனது பாசுரத்தில்

காண்டா வன மென்பதோர் காடமரர்க்
கரையானது கண்டவன் நிற்க... (1079)
            என்றே கூறுகிறார்

இத்தலம் பற்றி பிர்ம்மாண்ட புராணம் கீழ்க்கண்டவாறு
வர்ணிக்கிறது.

இந்த தலத்தில் ஒரு நாள் செய்யும் புண்ணியகாரியம் மற்ற
ஸ்தலங்களில் 100 ஆண்டுகள் செய்வதற்கு சமம். வெகுதூரத்திலிருந்து
இந்த தோயாத்ரி மலையைத் தரிசித்த மாத்திரத்திலேயே பாவங்கள்
மறைகின்றன. சர்வேஸ்வரனின் மாயையே காண்டவ வனமாக
ஏற்பட்டதால் உலகத்தில் மாயையில் சிக்கியிருக்கும் அனைத்து
ஜீவராசிகளும் இத்தலத்தில் பெருமாளை சேவித்துக் கடைத்
தேறுகின்றன.

தோயம் என்ற சொல்லுக்கு பால் என்பது பொருள். ஒரு காலத்தில்
இம்மலை நீர்மலையாக விளங்கப்போகிறது என்பதாலோ என்னவோ
முதலிலேயே தோயாத்ரி என்றும் பெயர் ஏற்பட்டுவிட்டது.

முன் பின்