தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 35 -

காதலனை நெடுங்காலம் பிரிந்து, அவன் திரும்பி வருதலை எதிர்பார்த்து ஏங்கி ஏங்கி மெலிந்து வாடிய காதலி, தன் வாழ்வைப்பற்றிய நம்பிக்கையே இழந்துவிடுகிறாள். காதலனைக் காணாமலே தன் உயிர் நீங்கிவிடுமோ என்று நைந்து உருகுகிறாள். அந்நிலையில் அவள் கூறும் சொல்லாக நற்றிணையில் ஒரு பாட்டு உள்ளது. “தோழி! நான் சாவுக்கு அஞ்சவில்லை. ஆனால் வேறொன்றிற்காக அஞ்சுகிறேன். நான் இறந்துவிட்டால், பிறகு வேறு பிறப்பும் பிறந்தால் அந்த மறுபிறப்பில் என் காதலனை மறந்து விடுவேனோ என்றுதான் அஞ்சுகிறேன்” என்கிறாள்.

            சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவேன்
            பிறப்புப் பிறிது ஆகுவ தாயின்
            மறக்குவேன் கொல்என் காதலன் எனவே.

உடம்புக்கும் உயிர்க்கும் உள்ள தொடர்பு போன்றதாம் காதல். உயிர் உடம்பில் வாழ்தல் போன்றது காதல். உயிர் உடம்பைவிட்டுப் பிரியும் சாதல் போன்றது பிரிவு.

           யாக்கைக்கு
           உயிர்இயைந் தன்ன நட்பின் அவ்வுயிர்
           வாழ்தல் அன்ன காதல்
           சாதல் அன்ன பிரிவரி யோளே.

இந்தக் கருத்தையே இந்த நூற்றாண்டின் பெரும் புலவராகிய பாரதியார் குயில்பாட்டு என்னும் நூலில் வளர்த்திருப்பதுபோல் தோன்றுகிறது :

           காதல் காதல் காதல்
           காதல் போயின்
           சாதல் சாதல் சாதல்.

“காதலருடைய நெடுங்காலப் பிரிவால் யான் மெலிந்து வாடுகிறேன். துன்பப்படுகிறேன். ஆயினும், அவர் சென்ற நாட்டில் மேற்கொண்ட கடமையை முடித்து வருவராக. அதுவே என் ஆவல்” என்கிறாள் ஒரு காதலி (அகநானூற்றில்). மற்றொரு பாட்டில், “நீ ஏன் இவ்வளவு துயருற்றுக் கலங்குகிறாய்?” என்று கேட்ட தோழியை நோக்கி அவள் கூறும் சொல்,  அவளுடைய உயர்ந்த பண்பாட்டை விளக்குகிறது. தன் பிரிவாற்றாமைத் துன்பம் பெரிது அல்ல என்று உணாந்தவள் அவள். “சென்றுள்ள வெளிநாட்டில் ஒரு துன்பமும் இல்லாமல் அவர் நலமாகத் திரும்புவார் என்று தெரியுமானால், என் கண்கள் இவ்வாறு கலங்கி அழவேண்டிய நிலை இல்லையே” என்கிறாள். காதலர் சென்றுள்ள தொலைநாட்டிலிருந்து அவரைப்பற்றி ஒன்றும் அறிய முடியாத காரணத்தாலேயே கலங்குவதாகக்




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 11:17:14(இந்திய நேரம்)