தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Ilakiya Varalaru

பக்கம் எண்: - 36 -

கூறுகிறாள். தான் எவ்வளவு துன்பத்திற்கு ஆளானாலும் கவலை இல்லை.  தன் காதலன் துன்பம் இல்லாமல் இருந்தால் போதும் என்கிறாள். தன்னலம் மறந்து காதலனுடைய நலமே நாடுகின்ற அன்பு நெஞ்சத்தை இங்கே காண்கிறோம்.

வீட்டிலே பல்லியின் ஒலி கேட்டால், அது ஏதோ செய்தியை அல்லது வருங்காலக் குறிப்பை உணர்த்துகிறது என்பது பழங்கால மக்களின் நம்பிக்கை. இன்ன திசையில் இவ்வாறு பல்லி ஒலித்தால் நன்மை என்றும், வேறு திசையில் வேறு வகையில் ஒலித்தால் தீமை என்றும், அவர்கள் அதன் ஒலிக்குப் பயன் காணும் முறை வைத்திருந்தார்கள். காதலனைப் பிரிந்து வாடும் காதலி மாலையில் தன் படுக்கையில் சோர்ந்து கிடக்கும் நிலையில் ஒரு பல்லி டிக் டிக் என்று ஒலிக்கிறது. அதைக் கேட்டதும் காதலியின் நெஞ்சம் திடுக்கிடுகிறது. ஒலி கேட்ட திசை நோக்கித் தொழுகிறாள். “என் காதலரைப்பற்றி நல்ல செய்தியாகச் சொல். அவர் நன்றாக இருக்கும் செய்தியாக இருக்கவேண்டுமே” என்று நடுங்குகிறாளாம்.

           மையல் கொண்ட மதனழி இருக்கையள்
           பகுவாய்ப் பல்லி படுதொறும் பரவி
           நல்ல கூறுஎன நடுங்கிப்
           புல்லென் மாலையொடு பொருங்கொல் தானே

   திருமணம் செய்துகொண்ட நாளில் இருந்த காலரின் அன்பு, அதே நிலையில் தொடர்ந்து பிற்காலத்தில் குன்றாமல் விளங்குவது அருமையாக உள்ளது. ஒருத்தி கூறும் கருத்தாக அமைந்த பாட்டில், “தோழி! அன்று நீ காதலரை எனக்கு அறிமுகப்படுத்தியபோது, அவருடைய நல்ல பண்புகளை எடுத்துச் சொல்லி நம்பிக்கை ஊட்டினாய். நீ சொன்னவை உண்மை. அவர் இன்றும் எனக்கு இனியவராக இருக்கிறார். யாழிசையில் வல்லவன் அமைத்துப் பாடும் பண்புகளைவிட இனியவராக இருக்கிறார். திருமண நாளைவிட இன்று எனக்கு இனியவராக இருக்கிறார்” என்று பாராட்டுகிறாள். அவளுடைய அன்பு நிறைந்த வாழ்க்கை இவ்வாறு ஓர் இனிய பாட்டாக மலர்ந்திருக்கின்றது :

                பாண்மகன்
              எண்ணுமுறை நிறுத்த பண்ணி னுள்ளும்
              புதுவது புனைந்த திறத்தினும்
              வதுவை நாளினும் இனியனால் நமக்கே.

காதல் காரணமாகத் தன் மகளின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதலை - அவளுடைய மனம் வளர்ந்த வளர்ச்சியைத் - தாய் எடுத்துரைக்கும் பாட்டு ஒன்று அழகாக உள்ளது : “தேன் கலந்த சுவையான பாலை ஒரு கையில்




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 11:17:31(இந்திய நேரம்)