Primary tabs
பாடிய புலவர்களின் பெயர்களும் வரலாறுகளும் கிடைக்கவில்லை. அந்த நிலையில் புலவர் சிலர்க்குப் பெயர் குறிக்கவேண்டுமே என்று கவலைப்பட்டபோது, அந்தப் பாட்டுகளில் உள்ள இயற்கை வருணனைகள் அவர்களுக்கு உதவியாக இருந்தன. அந்த இயற்கைக் காட்சிகளைப்பற்றி விளக்கும் தொடர்களில் மிகக் கவர்ச்சியான ஒன்றைக் கொண்டே புலவரின் பெயர் அமைத்துக்கொண்டனர். செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் பற்றிய தொடரால் ஒரு புலவர் செம்புலப்பெயல்நீரார் என்று குறிக்கப்பட்டார். பாழடைந்த ஒரு சிற்றூரின் வீட்டு முற்றத்தில் விளையாடும் அணில் பற்றி காட்சியை விளக்கிய புலவர் அணிலாடுமுன்றிலார் எனப்பட்டார். குளத்தின் காட்சிகள் இரண்டை வருணித்த காரணம் பற்றி ஒரு புலவர் கயமனார் எனப்பட்டார். வெள்ளத்தின் நுரை ஒரு பாறையில் மோதி மோதிக் கரையும் காட்சியை ஓர் உவமையில் அமைத்த காரணத்தால், ஒருவர் கல்பொருசிறுநுரையார் என்று குறிக்கப்பட்டார். குப்பைமேட்டுக் கோழிகளின் சண்டையை உவமையில் அமைத்தவர் குப்பைக்கோழியார் எனப்பட்டார். காக்கையைப் பாடியவர், ஆந்தையை (கூகையைப்) பாடியவர், நிலவைப் பாடியவர் முதலானவர்கள் அவற்றால் பெயர் பெற்றார்கள். இரண்டு யானைகளின் துதிக்கையால் பற்றி இழுக்கப்படும் பழங் கயிறுபற்றிப் பாடியவர் தேய்புரிப் பழங்கயிற்றினார் எனப்பட்டார்.
நூறு பாடல்கள் கொண்ட பதிற்றுப்பத்து என்னும் நூலில் உள்ள ஒவ்வொரு பாட்டுக்கும் ஒவ்வொரு பெயர் தரப்பட்டிருக்கின்றது. அந்தந்தப் பாட்டில் உள்ள வருணனையின் சிறந்த தொடரே பாட்டுக்குப் பெயராக அமைக்கப்பட்டிருக்கிறது. நீண்ட பாட்டுகள் பத்துக்கொண்ட பத்துப்பாட்டில் முல்லைநில (காட்டுநில) வருணனையும் அந்த நிறத்திற்கு உரிய காதல் நிகழ்ச்சியும் உள்ள பாட்டு 103 அடிகள் உடையது. அதற்கு முல்லைப்பாட்டு என்பதே பெயர். அவ்வாறே மலைநில வருணனை நிறைந்த 261 அடிகள் உடைய மற்றொரு பாட்டுக்குக் குறிஞ்சிப்பாட்டு என்பது பெயர் (குறிஞ்சி என்பது மலைநிலத்தையும் அந்த நிலத்தின் காதலையும் குறிக்கும்.) 188 அடிகள் கொண்ட ஒரு பாட்டு வாடைக்காற்றால் (நெடுநல்வாடை எனப்) பெயர் பெற்றுள்ளது. 583 அடிகளால் ஆன மற்றொரு பாட்டில் மலையில் உள்ள பலவகை ஓசைகள்பற்றி வருணனைகள் உள்ளன. அந்தப் பலவகை ஓசைகளும் சேர்ந்து ஒலிப்பது, புலவரின் கற்பனையில் மலை என்னும் பெரிய யானை மதம் பிடித்து முழங்குவது ஆகின்றது. ஆகவே அந்த நீண்ட பாட்டுக்கு மலையின் மதம் என்னும் பொருள் தரும் ‘மலைபடுகடாம்’ என்று பெயர் குறிப்பிடப்பட்டது. ஐங்குறுநூற்றிலும் இயற்கைப் பொருட்கள் பல தலைப்புகளாக அமைந்துள்ளன.