அரளி

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Nerium oleander L.

குடும்பம் : Apocyanaceae

ஆங்கிலம் : Indian oleander

வளரிடம் : அரளி, அலரி, செவ்வரளி என அழைக்கப்படும். இத்தாவரம் இந்திய முழுவதும் தோட்டங்களில் அலங்காரமாக வளர்க்கப்படுகிறது. கோயிலில் அன்றாட பூஜைகளுக்குப் பயன்படுத்தவதற்கென வளர்க்கப்படுகிறது. மலர்கள் சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் போன்ற நிறங்களில் உள்ளன. இத்தாவரம் தற்கொலைக்கான முயற்சியுடனும் கருக்கலைப்புடனும் தொடர்புப் படுத்தப்பட்டதாகும்.

வளரியல்பு : உயரமான புதர்ச்செடி 5 மீ உயரம் வளரக்கூடியது. இலைகள் கத்தி போன்றுள்ளது; தடித்து தோல் போன்றது, மேல்புறம் ஒளிரும் பசுமை வண்ணம் கொண்டது. நடு நரம்பு எடுப்பானது. கனிகள் நீளமான உருளை வடிவான ஏப்ரல் - ஜூன் மாதங்களில் மலர்கள் தோன்றும்.

மருத்துவப் பயன்கள் : அனைத்துப் பகுதியும் மேல் பூச்சாகப் பயன்படுகிறது. இலைகளின் சாறு (இளஞ்சூடு) வீக்கத்தைக் குறைக்கப் பயன்படுகிறது. இச்சாறு பால்வினை நோய் புண்களுக்கு மேல் பூச்சாகப் பயன்படுகிறது. வேர்பட்டை மற்றும் இலைக் களிம்பு படை மற்றும் தோல் நோய்களில் பயன்படுகிறது. கருச்சிதைவினைத் தோற்றுவிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.