பேரரத்தை தாவரவியல் பெயர் : Alpinia galanga Sw. குடும்பம் : Zingiberaceae ஆங்கிலம் : Galangal வளரிடம் : தென்சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய புல்வெளிகளைச் சார்ந்த தாவரம், தற்சமயம் ஆசிய முழுவதும் இதனுடைய நறுமணக் கிழங்குகளுக்காகப் பயிரிடப்படுகிறது. நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளான தாவரத்திலிருந்து தரையடித்தண்டு (Rizome) சேகரிக்கப்படுகிறது. தரையடித் தண்டினைத் துண்டித்து அடுத்த ஆண்டு நடப்படுகிறது. வளரியல்பு : பல பருவம் வாழும் குறுஞ்செடி, இதன் தண்டு தரையடியுனுள்ளது. நறுமணத்தாவரம், இலைகள் நீளமானவை, ஈட்டி வடிவானவை, ஒரு போக்கு நரம்புடையவை, மலர்கள் பசு வெண்மை, சிவப்பு நரம்புகளுடையவை. மருத்துவப் பயன்கள் : தரையடித் தண்டிலுள்ள வேதிப் பொருள்கள் உடலைச் சூடாக்கிக் கிளர்ச்சியுறச் செய்வதுடன் ஜீரண வலுவேற்றி ஆகும். உடலியல் செயல்களைத் தூண்டுவது, அஜீரணம் போக்கும், வாந்தி எடுப்பதைத் தடுக்கும். தரையடித்தண்டின் பொடி, கசாயம் மற்றும் சாராயக் கரைசலில் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்திய மருத்துவத்தில் இதனை வயிற்றுவலி, வீக்கங்கள் நீக்கவும், சளி போக்கி நரம்புகளுக்கு வலுவேற்றவும் பயன்படுத்தப்படுகிறது. விக்கல், முடக்குவாத - மூட்டுவலி மற்றும் விட்டுவிட்டு வரும் காய்ச்சல் போக்கவும் பயன்படுகிறது. தரையடித் தண்டின் கசாயம் பல நோய்கிருமிகளுக்குக் குறிப்பாக ஆந்த்ராஸ் (Anthrax) கிருமிகளுக்கு எதிராகச் செயல்படும் திறன் கொண்டது. வடிச்சாறு வாய்புண் மற்றும் ஈறுகளின் வீக்கம் போக்க பயன்படுகிறது. |