இஞ்சி/சுக்கு

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : zingiber officinale Rose.

குடும்பம் : Zingiberaceae

ஆங்கிலம் : Zinger

வளரிடம் : ஆசியாவினைச் சார்ந்தது, வெப்பமண்டலப் பகுதிகளில் பயிரிடப்படுகிறது. தரையடித்தண்டு மூலம் பரப்பப்படுகிறது. 10 மாதம் வளர்ந்த தாவரங்களைப் பிடுங்கி எடுக்கப்பட்டுத் தரையடித்தண்டுகள் (rhizome) சேகரிக்கப்படுகின்றன.

வளரியல்பு : ஒரு மீட்டர் உயரம் வளரக்கூடியது. பலபருவக் குறுஞ்செடி, தண்டு தரைகீழ்த்தண்டாகும். இலைகள் ஈட்டி வடிவானவை; நடு நரம்பு பெரியது; ஒரு போக்கு நரம்பமைப்பு; மலர்களின் காம்பு குட்டையானது; மஞ்சரியாக அமைந்தவை; பூவிதழ்கள் வெண்மை அல்லது மஞ்சள் வண்ணம் கொண்டவை.

மருத்துவப் பயன்கள் : ஜீரணத் தூண்டுவி; வாந்திக்கு எதிரானவை; இரத்த ஒட்டத்தை ஊக்கவிக்கும்; இருமலைத்தடுக்கும்; வீக்கங்களைப் போக்கும்; வாந்தியுடன் கூடிய மயக்கம் மற்றும் பயண நோய் போக்குகின்றது. சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் ‘பேசில்லஸ் பாக்டிரியா தோற்றுவிக்கும் வயிற்றுப் போக்கினைத் தடுக்கும் திறன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அஜீரணம், வயிற்று உப்புசம், குடல்வலி ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. காலை நோய் (morning sickness) எனப்படும் தலைச்சுற்றல் வாந்தி போக்கக்கூடியது. இரத்த ஒட்டத்தைத் தூண்டும். சளி ஃப்ளு காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சு விடுதல் தொடர்பான பல நோய்களுக்கு நல்ல மருந்தாகும். தலைவலி, பல்வலிக்கு (காய்ந்த தண்டு) தண்ணீர் இழைத்துப் பசையினை நெற்றியில் பற்றுப் போடப்படுகிறது.