வெள்ளருக்கு

முனைவர் ந.நாகராஜன்
உதவிப் பேராசிரியர்
தொல்லறிவியல் துறை

தாவரவியல் பெயர் : Calotropis procera (Ait) Ar.Br.

குடும்பம் : Asclepiadaceae

ஆங்கிலம் : Fenugreek

வளரிடம் : இந்தியாவினைச் சார்ந்தது. கிழக்கு மற்றும் மேற்கிந்தியா தீவுகளிலும் இலங்கையிலும் வளர்கிறது. தரிசு நிலங்கள், ஆற்றங்கரைகளில் காணப்படும்.

வளரியல்பு : புதர்செடி, இலைகளின் கீழ்ப்புறம், இளம் தண்டு, மஞ்சரி, ஆகிய பகுதிகளில் மிருதுவான வெண்மை நிறமுடைய தூவிகள் மூடி காணப்படும். இலைகள் தடிப்பானவை. காம்புடனோ அல்லது காம்பற்றோ காணப்படும், லேடக்ஸ் (வெள்ளைப்பால்) கொண்டவை. அடிப்பகுதி இதய வடிவானது. மலர்கள் இலைத் தோற்றத்தில் காணப்படும். கருஞ்சிவப்பு அல்லது வெண்மை நிறத்தினைக் கொண்டது. Calotrepis procera வின் மலர்கள் நெடியுடன் கூடிய மணம் கொண்டவை. C.gigentea மலர்கள் மணமற்றவை. கனிகள் வளைந்தவை, வீக்கமடைந்தவை, ஆண்டு முழுவதும் மலரக்கூடியது.

மருத்துவப் பயன்கள் : இலைகளின் பொடியை எண்ணெயில் கொதிக்க வைத்து தோல் வியாதிகள், படை கொப்புளங்களுக்குப் பூச்சாகப் பயன்படுகிறது. வதக்கிய இலைகள் வீக்கமடைந்த மற்றும் வலியுள்ள மூட்டுகளில் மேல்வைத்துக் கட்டப்படுகிறது. வெள்ளை நிறப்பால் கருச்சிதைவினைத் தூண்டக்கூடியது. மலர்கள் ஜீரணத்தை தருபவை, வயிற்று வலி, பசியின்மை, சளி, இருமல் ஆகியவற்றைப் போக்கும் மலர்கள் உலர்த்தப்பட்டு சர்க்கரைச் சேர்த்து, தொழுநோய், பால்வினை நோய்களுக்கு மருந்தாகிறது. வேர்களும் இதுபோன்று பால்வினை, தொழுநோய், மூட்டுவலி, வயிற்றுப்போக்கு, தோல்வியாதிகள், வயிற்றுப்புழுக்கள் ஆகியவற்றிற்கு மருந்தாகிறது.