கருவேலம்

முனைவர் கு.க.கவிதா,
உதவிப் பேராசிரியர்,
சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.

தாவரவியல் பெயர் : அக்கேசியா அரேபிக்கா (Acacia Arabica (Lam) wild.)
குடும்பம் : மைமோசேசியே (Mimosaceae)

இம்மரப்பட்டையின் நிறத்தைக் கொண்டு கருவேல மரம் எனப்படுகிறது. இம்மரத்தைக் கருவேல், கண்டாலு என்றும் கூறுவதுண்டு.
கருவேலம் விதை

கருவேல மரத்தைப் பெரும்பாலும் கரிசல் மண் நிலங்களில் மிகுதியாகக் காணலாம். ஆனால் அனைத்து வகை மண்ணிலும், சரளை மண் நிலங்களிலும், மலைப் பகுதிகளிலும் கூட இம்மரம் வளர்ந்திருப்பதைக் காணலாம். இம்மரம் சாதாரணமாகத் தானாகவே முளைத்து வளர்ந்து கூட்டம் கூட்டமாகக் காணப்படும். வேலியோரங்களில் இம்மரங்கள் வளர்ந்திருப்பதைக் காணலாம். மரம் மிகவும் பயனுடையது. கடினமானது. தேவைப்படும் பொருட்களும் கலப்பைகளும் செய்ய இதைப் பயன்படுத்துவர். காற்றுத்தடை மரமாகவும், எரிபொருள் மரமாகவும் வளர்க்கப்பட்டு வரும் இம்மரத்தைத் தற்போது சமூக நலக்காடுகளில் வளர்த்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் அதிகமாகக் காணப்படும் இதன் உயரம் 10 மீ வரை வளரும். கிளையின் நுனியில் விரிந்து காணப்படும். பட்டை கருப்பு, வெடிப்புற்றது. தண்டின் வெளிப்புறம் வெண்மையானது. உட்கட்டை வயிரம் கொண்டது. இளஞ்சிவப்பு வண்ணம் கொண்டவை. இலைகள் இறகு வடிவ கூட்டிலை இலையடிச் செதில்கள் முட்களானாவை.

பயன்கள் :
கருவேலம் மஞசரி

இலைகள், பட்டை, பிசின் மற்றும் கனிகள் இலைச்சாறு வயிற்றுப்போக்கு மற்றும் சீதபேதிக்கு மருந்தாகிறது. பட்டையில் டேனின் உள்ளது. இதன் கசாயம் புற்றுநோய் மற்றும் தொண்டைக் கம்மல், பல்வலி போக்கும். பட்டையை உலர்த்திப் பல்தேய்த்து வந்தால் பல் ஆடுதல், பல் ஈறில் இரத்தம் வருதல் போன்றவை நலமாகும். பல் உறுதிப்படும். கருவேலங்கோந்து உடல் உறுதி பெறவும் இரத்தப்போக்கை நிறுத்தவும் பயன்படுகிறது. பூ மொட்டுகளைத் தொகுத்து உலர்த்திப் பொடி செய்து சர்க்கரையும் கலந்து தர இருமல் குணமாகும்.