கடுக்காய்

முனைவர் கு.க.கவிதா,
உதவிப் பேராசிரியர்,
சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.
கடுக்காயுந் தாயுங் கருதிலொன்றென் றாலும்
கடுக்காய்த் தாய்க்கதிகங் காண் நீ

என அகத்தியர் குணபாடத்தில் போற்றப்பட்டுள்ள கடுக்காய், மருத்துவரின் காதலி எனவும் உயிர் கொடுக்கும் மருந்தெனவும் வடமொழியில் பாராட்டுப் பெற்றுள்ளது.

இதன் தாவரவியல் பெயர். டெர்மினாலியா செடிபுலா (Terminalia chebula Retg.) தாவரக் குடும்பம். காம்பிரெட்டேசி (Combretaceae).
கடுக்காய் மரம்

மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, ஒடிசா, ஆந்திரம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் அதிகம் காணப்படுகிறது. அதிலும் பஸ்தர் பகுதியில் மிக அதிக அளவில் இருப்பதால், மத்தியப் பிரதேசத்தில் மட்டுமே நாட்டின் மொத்த மரங்களின் எண்ணிக்கையில் 75% அளவில் உள்ளன. தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய காடுகளில் அதிகம் உள்ளன. என்னும் சேலம் மாவட்டத்தில் உற்பத்தியாகும். கடுக்காயே மிகவும் உயர்ந்த தரமுடையவை.
கடுக்காய்

கடுக்காய் இலையுதிர்க்கும் மரமாகும். குளிர்க்காலத்தில் இலையுதிர்த்து, பிப்ரவரி-மார்ச்சு மாதங்களில் துளிர் இலைகளை உருவாக்கும். இத்துளிர் இலைகள் பட்டுப் போன்ற தன்மையுடையவை. துளிர்கள் உருவாகிக்கொண்டிருக்கும் சமயம் மார்ச்சு-ஏப்ரல் மாதங்களில் பூங்கதிர்கள் உருவாகும்.

கடுக்காயில் பல வகைகள் உண்டு. கடுக்காய் விளையும் பகுதியைப் பொறுத்து விசயன், அரோகிணி, பிருதிவி, அமிர்தம் சேதகி, சிவந்தி, திருவிருத்தி, அபயன் என மருத்துவத்தில் பாகுபாடு செய்துள்ளனர். மற்றும் நிறம், வடிவம் ஆகியவற்றைப் பொறுத்து, கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிகடுக்காய், பால்கடுக்காய் எனவும் பிரித்துள்ளனர்.

பயன்கள் :

அஸ்ஸாம், மகாராஷ்டிரம், ஒரிசா, உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கால்நடைகளுக்குத் தீவனமாக உபயோகிக்கப்படுகிறது. கடுக்காய் இலையில் ஷிகிமிக் (Shikimic) டிநைட்ரோ ஷிகிமிக் (dehydroshikimic) மற்றும் குயினிக் (quinic) அமிலங்கள் உள்ளன.

கடுக்காயின் பட்டையில் டானின் உள்ளது. பட்டைப் பொடியுடன் பாரா பார்மால்டிநைட் அல்லது பர்பியூரால் கலந்து நல்லதொரு மோல்டிங் மாவு (molding) தயாரிக்கலாம்.
பூக்களில் நிறைய தேன் திரவம் உள்ளது. சில பகுதிகளில் கடுக்காய் மரமே பிரதான தேன் உற்பத்தி மரமாகவும் உள்ளது.

பல்வேறு தொழில்களுக்கு ஒரு உபமூலம் பொருளாக விளங்கும் டானின் சத்து, கடுக்காய்த் தோலிலிருந்து பெறப்படுகிறது. காயின் மொத்த எடையில் தோட்டுப் பகுதி 30-32% அளவில் இருக்கும். தோல் பதனிட டானின் அதிக அளவில் உபயோகிக்கப்படுகிறது. துணிகளுக்குச் சாயமேற்றிட துணைப் பொருளாகவும் டானின் பயன்படுகிறது. எண்ணெய் கிணறுகளில் எண்ணெய் எடுக்கும் பொழுது, அரிமானம் ஏற்படாமல் காக்கும் திறனும் டானிக்கு உள்ளது.

கடுக்காயினால் உதட்டு நோய், கண் நோய்கள், இருமல், காமாலை, புழு நோய்கள், குன்மம், குட்டம், கைகால் எரிச்சல், தலை நோய்கள், சோபை, இரைப்பு, தொண்டைக் கம்மல், நீர் வேட்கை, ஆண்மையின்மை, ஈரல் நோய், வெள்ளை, பெருவயிறு, நா வறட்சி ஆகிய நோய்கள் தீரும்.

இந்திரிய மார்க்கங்களிலும், மலம் முதலியவை வெளிப்பட வேண்டிய மார்க்கங்களிலும் அடைபடுதல், அசீரணம், அழலை, இளைப்பு, பவுத்திரம், புகைச்சல், வயிற்றுக்கட்டி, வயிற்றுப்புண் ஆகிய நோய்கள் தீரும். கடுக்காய் சத்தில், இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் செய்கை, நத்தைகளுக்கு நஞ்சாகும். பின்பு கிருமிகளைக் கட்டுப்படுத்தும் செயல் ஆகியவை இருப்பதாகச் சமீபத்தில் தெரிய வந்துள்ளது.

கடுக்காயைக் கொண்டு பலவித மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. கடுக்காய்ச் சத்து, கடுக்காய் நெய், கடுக்காய் லேகியம், கடுக்காய் வடகம், கடுக்காய் கற்பம் ஆகியவை இவற்றில் சில. மற்றபடி வீடுகளிலே, கடுக்காய் கஷாயம், கடுக்காய் துவையல், கடுக்காய்ப் பொடி, குடிநீர் எனப் பல முறைகளில் மருந்துகளாகத் தயாரிக்கப்படுகின்றன.