நுணா
(மஞ்சணத்தி)

முனைவர் கு.க.கவிதா,
உதவிப் பேராசிரியர்,
சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.

சீமைக் கருவேலிற்கு அடுத்தப்படியாக, கரிசல் நிலங்களில் தன்னிச்சையாக வளரும் மரமே நுணா. எனினும் எருவிடத்தழை, எரிதுரும்பிற்கு நிறைய சுள்ளிகள், அழகிய மரப்பொருட்கள் செய்ய மரம்; உண்ணுவதற்குக்கூட சில பொருட்கள்; குழந்தைகளின் மாந்தத்திற்கு மருந்து எனப் பல பயன்களையும் கொண்டுள்ளது.

தாவரவியல் பெயர் : மொரிண்டா கொரியா (Morinda tinctoria Roxb)
தாவரக் குடும்பம் : ரூபியேசி ( Rubiaceae)

பல இடங்களில், நுணாவின் மற்றொரு இனம். மொரிண்டா சிட்ரிபோலியா உள்ளது. ஒரு காலத்தில் சிவப்பு சாயமெடுக்க, சிட்ரிபோலியா இனம் பயிரிடப்பட்டுள்ளது.

வளரியல்பு :

நுணா தமிழகமெங்கும் காணப்படும் மரமாகும். இது சுமாரான உயரமுடைய மரம். 6-10 மீட்டர் உயரம் வரை வளரும். இலைகள் 15 செ.மீ நீளமுடையவை. பூக்கள் 1.5 செ.மீ அளவுள்ள வெள்ளை நிறப்பூக்கள் மார்ச்சு-ஜூன் மாதங்களில் பூக்கும். காய்கள், பச்சை நிறந்தில் நான்கு முனைகளுடன் உருவாகும். பழுத்த நிலையில் கருப்பு நிறம் பெறும். 2 செ.மீ அளவுடையவை.
நுணா

பயன்கள் :

இலைச்சாறு, நாட்பட்ட புண்களையும் குணப்படுத்தும். இலையிலிருந்து ஒருவித உப்பு தயாரித்து, நாட்பட்ட புண்களுக்கு மருந்தாகவும் உபயோகிக்கலாம். நுணா பட்டை தைலத்தால் காய்ச்சல், முறை காய்ச்சல், குன்மம், புண், அரையாப்பு, கழலை முதலியவை போகும். நுணாக்காயை முறைப்படி புடம்போட்டுப் பொடித்து, பல்துலக்கினால், பல் சொத்தை, பல்லரணை ஆகியவை நீங்கும். காயைப் பிழிந்து சாறெடுத்து தொண்டையில் பூச, தொண்டை நோய் நீங்கும். பழத்தைப் பக்குவப்படுத்தி, சீதக்கழிச்சல் மற்றும் ஆஸ்துமாவிற்குக் கொடுக்கலாம். வேரிலிருந்து நீர் மூலமாக வடித்தெடுத்த சத்து, இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாகக் கண்டுள்ளனர்.