அரசமரம்

முனைவர் கு.க.கவிதா,
உதவிப் பேராசிரியர்,
சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.

தாவரவியல் பெயர் : ஃபைக்கஸ் ரிலிஜியோசா (Ficus religiosa Linn.)
குடும்பம் : மோரேசியே (Moraceae)
ஆங்கிலப் பெயர் : பீப்பால் மரம் (Peepul free)

இந்தியா முழுவதும் இயற்கையாகவும் (wild), வளர்க்கப்பட்டும், சாலையோரங்களில் நிழல் தரும் மரமாகவும், ஆற்றங்கரையில் (ஆலயங்களில்) வழிபடுவதற்காகவும் இது வளர்க்கப்படுகின்றது. விரைவாக வளரக்கூடியது. விதைகள், போத்துகள் ஆகியவற்றின் மூலம் பரப்பப்படுகின்றது. எல்லா மரங்களுக்கும் தலைமையானதாகக் கருதப்படுவதால் இதற்கு அரசு என்று பெயர் ஏற்பட்டது.

அரச மரம் பரந்த கிளைகளுடன் காணப்படும். பட்டை சாம்பல் நிறம், இலைகள் மெல்லியவை, நுனி வால்போல் நீண்டது. இலைக்காம்பு நீளமானது. கனிகள் இலைக்கோணத்தில் ஜோடியாகக் காணப்படும். இளம் பருவத்தில் இது ஒட்டு வாழ் தாவரமாகத் தொடங்கி நாளடைவில் பெரும் மரமாவதுண்டு.

பயன்கள் :

இம்மரத்தின் இலைகளும் பசுங்கிளைகளும், கால்நடைகளுக்கும் யானைக்கும் தீவனமாகக் கொடுக்கப்படுகின்றன. இலைகளில், புல்லைவிட 2-3 மடங்கு கூடுதலாகப் புரசச்சத்தும் சுண்ணாம்புச்சத்தும் இருப்பதனால் அவை எளிதில் செரிக்கப்படுவதில்லை. ஆதலால் இலைகள் அவ்வளவு சிறந்த தீவனமாகக் கருதப்படுவதில்லை. இருப்பினும் அவற்றின் சக்கையைத் தீவனமாகப் பயன்படுத்தலாம்.

வட இந்தியாவில் இலைகள் பட்டுப் பூச்சிகளுக்கு உணவாகப் பயன்படுகின்றன. இம்மரத்தின் கனிகள் பறவைகளால் விரும்பி உண்ணப்படுகின்றன. இதன் பட்டையில் 4% டேனின் உள்ளது. இதன் காரணமாக முற்காலத்தில் தோல் பதனிடுவதற்கு இதன் பட்டை பயன்படுத்தப்பட்டு வந்தது. துணிகளுக்குச் சாயம் மாற்றுவதற்கும் பயன்படுத்தப்பட்டது.

இலை, பட்டை, கனி மற்றும் விதைகள் பயனுடையவை. துளிர் இலைகள் வெண்ணெய் சேர்த்து புண்களின் வீக்கத்தினைக் குறைக்க உதவுகின்றன. இம்மரம் இந்துக்களுக்குப் புனிதமான மரமாகும். சமயச் சடங்குகளில் இதன் காய்ந்த குச்சியைக் கொண்டு யாகம் வளர்க்கின்றனர்.