பூவரசு

முனைவர் கு.க.கவிதா,
உதவிப் பேராசிரியர்,
சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.

தாவரவியல் பெயர் : தெஸ்பீசியா பாபுல்னியா Thespesia poulnea (L.)
குடும்பம் : மால்வேசி (Malvaceae)

பூவரசு மரத்திற்கு கல்லால் பூப்பருத்தி, புவிராசன், அர்த்தநாரி, ஈஸ்வரம், பம்பரக்காய், பூளம் என்றும் குறிப்பதுண்டு. இம்மரத்தைக் குளக்கரைகளிலும் தோட்டங்களிலும் பூங்காக்களிலும் வளர்ப்பதுண்டு. பூங்காக்களில் இதன் அழகான பகட்டான மஞ்சள் நிற பூக்களுக்காக விரும்பி வளர்க்கின்றனர். இம்மரம் இந்தியாவின் வெப்பப் பகுதிகளிலும் கடற்கரையோரங்களிலும் அந்தமான் தீவுகளிலும் பெரும் எண்ணிக்கையில் காணலாம். இம்மரத்தை இந்தியாவில் தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் பெரும்பரப்பில் காணலாம். இம்மரம் எப்போதும் தழைத்து பசுமையான தோற்றத்தைத் தருகிறது.

அடர்த்தியாகக் கிளைத்து விரைவில் வளரக்கூடிய மரம் என்றும் பசுமையாக இருக்கும் இம்மரம் 18 மீ உயரமும் 1.2 மீ பருமனும் வளரக்கூடியது.

பயன்கள் :

பூவரசு மரத்தை அழகுக்காகவும் நிழலுக்காகவும் வளப்பதுண்டு. இம்மரம் மாதாக் கோயில்களிலும் வாய்க்கால் ஓரங்களிலும் விரும்பி வளர்க்கப்படுகின்றன. இலைகளைச் சேகரித்து நன்செய் நிலங்களுக்குப் பசுந்தழை உரமாகப் பயன்படுத்தப்படுகிறது. மரத்தைப் பலகைகளாக அறுத்துப் பெட்டி, வண்டிச் சக்கரம், படகு, நாற்காலி, வண்டி, துப்பாக்கிக் கட்டை, வேளாண் கருவி, இசைக்கருவி, விட்டம் ஆகியவற்றைச் செய்யலாம். மரத்தை விறகாகப் பயன்படுத்தலாம். உறுதியான இம்மரக்கட்டை நீரால் பாதிக்கப்படாது. இதன் நார் கயிறாகப் பயன்படுகிறது. பட்டையிலிருந்து சிவப்புச் சாயம் தயாரிக்கலாம். இதன் இலை, பூ, காய், விதை, பட்டை, வேர் முதலியவை மருந்தாக உதவுகின்றன. இம்மரப்பட்டைக்கு உடலை உறுதியாக்கும் தன்மை உண்டு. மேலும் குருதிச் சீதபேதிக்கும் இது உதவும்.

மரப்பட்டையை உலர்த்தி தீயிலிட்டு எரித்து அதன் சாம்பலைத் தேங்காய் எண்ணெயில் குழப்பிச் சொறி சிரங்கு, கரப்பான், உடல் அரிப்பு உண்டாகும் பகுதியில் தடவி வர விரைவில் குணம் தெரியும். பட்டைச் சாறை நாள்தோறும் இருவேளை அருந்தி வர காணாக்கடி நீங்கும்.