புங்கம்

முனைவர் கு.க.கவிதா,
உதவிப் பேராசிரியர்,
சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.

புங்கம் சோப்புச் செய்யவும் பூச்சிகளை விரட்டும் திறனும் கொண்ட எண்ணெய் ஒட்டுப்பசை தயாரிக்கப் பிண்ணாக்கு, மண்ணை வளப்படுத்தத் தழை, குழந்தைகளைக் காக்க மருந்துகள், இலை, விதை எனப் பலப்பலவும் அருளக்கூடியது. நிறைய ப்ளேவோனாய்டுகள் இதில் உள்ளன. இம்மரத்தின் தாவரயியல் பெயர்: பொங்கிமியா பின்னாடா (Pongamia pinnata (L) Pierre.) தாவரக் குடும்பம்: ஃபேபேசியே (Fabaceae) ‘பொங்கேமியா’ என்பது தென்னாட்டுப் பெயரான புங்கம் என்பதிலிருந்து உருவாகியதாகும்.
புங்க மஞ்சரி

வளரியல்பு :

நீர் செழிப்பின் காரணமாக மலைச்சரிவுகளில் ஓங்கி உயர்ந்து வளரும் மரமாக உள்ளது. பாலைவனப் பகுதியில் குறுமரமாகவும் காணப்படுகிறது. கடற்கரையோரங்களிலும் கூடம் பெரிய மரமாக வளருவதில்லை. எனினும் கடல்மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரப் பகுதி வரை காணப்படுகிறது. 15 மீட்டர் உயரம் வளரக்கூடியதாகும். நடுமரத்தில் பக்கக் கிளைகள் உருவாகி, படர்ந்து விரிந்திருக்கும். மார்ச்சு–ஏப்ரலில் பூத்துக் குலுங்கும் புங்க இலைகள் 20×15 செ.மீ அளவுடையவை. பூக்கள் அடர்ந்த 20 செ.மீ நீளம் உள்ளது. காய்கள் 4×3 செ.மீ அளவுள்ளது.
புங்க மரம்

பயன்கள் :

புங்கம் எண்ணெய் ஒரு பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுகிறது. புங்கம் எண்ணெய் ரோசின் சோப் தயாரித்து பின் இதைப் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உபயோகிக்கலாம். குழந்தைகளின் வயிற்று உப்பிசம், அசீரணக் கோளாறுகள், பேதி ஆகியவற்றிற்குப் புங்க இலைச்சாறு கைகண்ட மருந்தாகும். நீரிழிவு நோய்க்கும் மருந்தாகும். இதன் பூக்கள், இதன் விதை சரும நோய்களுக்கும் ஆறாத புண்களுக்கும் தேங்காய்ப் பாலுடன் இதன் வேரை அரைத்துப் பூச புண்கள் குணமாகும். இதன் காற்று மாசுபடுத்தலைக் கட்டுப்படுத்தும்.

நோக்கீட்டு நூல் :

‘வளம் தரும் மரங்கள்’ பி.எஸ்.மணி மற்றும் கமலா நாகராஜன், நியு செஙசுரி புக் ஹவுஸ், சென்னை (1992).