கணியான் ஆட்டம்

முனைவர் சி.சுந்தரேசன்
துறைத்தலைவர்
நாட்டுப்புறவியல் துறை

தமிழகத்தின் தென் பகுதியில் பெரும்பான்மை மக்களால் பெரிதும் விரும்பி நிகழ்த்தக்கூடிய கலை கணியான் ஆட்டம்.

கோவில் திருவிழாவின் போது (கொடை விழா என்று தென் தமிழக மக்கள் சுட்டுவர்) நடைபெறும் சடங்கியல் சார்ந்த விழா.

கணியான் ஆட்டத்தின் தொடக்கத்தில் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. காப்புக் கட்டிக்கொள்ளும் கணியான் முதலில் எண்ணெய் தேய்த்து சாமியின் முன்பு அமர்ந்து மஞ்சள் நூலைக் கையில் கட்டிக்கொள்வார். இரண்டாம் நாள் கைவெட்டு நிகழ்ச்சி நடைபெறும். அன்று நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குக் திரளை வீசுதல் நிகழ்ச்சி நடைபெறும்.

திரளை என்பது விழா நடைபெறும் கோவிலிருந்து திரளை வீடும் கணியான் முரசு அடிப்பவர், சாமியாடி ஆகிய மூன்று பேரும் சுடுகாட்டை நோக்கிச் செல்வர். சோற்றில் பன்றி, ஆடு, கோழி இரத்தத்தை விட்டு பிசைந்து உருட்டி, ஆகாயத்தில் வீசுவர். இதற்குத் திரளை வீசுதல் என்பர்.

கோவில் (கொடை) விழாவில் கணியான் பாட்டு நிகழ்ச்சி அமைந்திருக்கும். கணியான் பாட்டுக் குழுவில் ஆறு முதல் ஏழு பேர் வரை இடம் பெற்றிருப்பர். தலைமைப் பாத்திரமாகவும் இருப்பர். அண்ணாவி அண்ணாவிப் பாடல்களைப் பாடி அதற்கு அவரே விளக்கமும் அளிப்பார். இரண்டு பேர் மகுடம் அடிப்பர். ஒருவர் பின் பாட்டுக்காரர் மற்றொருவர் சால்ரா போடுவார். ஏனைய இரண்டு பேர் பெண் வேடமிட்டு ஆடுவார்கள். கணியான் நிகழ்ச்சியை ஆண்கள் தான் நிகழ்த்துவர்.

கணியான் ஆட்டத்திற்கு மகுடம், சால்ரா ஆகிய இசைக்கருவிகள் பயன்படுகின்றன. மகுடத்தைத் தப்பட்டை என்றும் அழைக்கின்றனர். இது வட்டமாக இருக்கும்.

அந்த வட்டப்பகுதி வேம்பு, பூவரசு, மஞ்சளத்தி ஆகிய மரங்களினால் செய்யப்பட்டிருக்கும். கணியான் ஆட்டத்தில் இரண்டு வகை மகுடம் அடிக்கப்படுகிறது. அவை இரண்டும் ஒன்று போலவே இருந்தாலும் அதிலிருந்து வரும் ஓசை வெவ்வெறானது. ஓசையின் அடிப்படையில் ஒன்றை மந்தம் என்றும், மற்றொன்றை உச்சம் என்றும், மகுடம் இரண்டு பெயர்களில் சுட்டப்படுகிறது. உச்சத்தைத் தொப்பி என்றும், மச்சத்தை விளத்தலை என்றும் கூறுவார்கள்.

உச்சமானது மிகுந்த ஓசை கொண்டது. மந்தம் என்பது மெல்லிய தரும். கணியான் ஆட்டத்தில் பாடப்படும் பாட்டின் பாடுப்பொருளாகச் சுடலை மாடசாமியின் கதை அல்லது காளியின் கதை அமையும். எனவே, சுடலை மாடன், பன்றி, மான், பண்றான் மாடன், கருபாசி, இசக்கியம்மன், சந்தனமாரி, துர்க்கை ஆகிய கோயில் விழாக்களிலும் கணியான் ஆட்டம் நிகழ்த்தப்படுகிறது.

கோவில் வரலாற்றைப் பாடி முடிந்ததும் இராமாயணம், மகாபாரதம் தொடர்பான கதைகளையும் பாடுவார்கள். கணியான் ஆட்டத்தின் பாடப்படும் கதைப் பாடல்கள், ஆட்டங்கள் ஊன்றி கவனித்துப் பின் ஆர்வமுடையவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். மகுடம், ஜால்ரா அடிப்பவர்கள் தவில் அடிக்கும் கலைஞர்களிடம் தாளம் போடும் முறையினை கற்றுக்கொள்கிறார்கள்.

அண்ணாவி பாடும் போது இரண்டு ஆட்டக்காரர்களும் பாடலுக்கேற்ப ஆடுவார்கள். நேர்கோடு ஆட்டமாகவும் வட்ட வடிவ ஆட்டமாகவும் ஆடுவார்கள். கும்மி பாடல்களுக்கேற்ப கும்மியடித்தும் ஆடுவார்கள்.

ஆடுகிறவர்கள் கால்களில் சலங்கை கட்டிருப்பார்கள். வட்டம் போட்டிருப்பார்கள். கழுத்தில் ஆபரணங்கள் அணிந்து சேலை உடுத்திருப்பார்கள்.

கோவில் சார்ந்த கலை என்பதால் கோவிலுடன் கோவிந்த ஊருடனும் தொடர்பு கொண்ட கலையாகும்.