கும்மி

முனைவர் சி.சுந்தரேசன்
துறைத்தலைவர்
நாட்டுப்புறவியல் துறை

கலை என்பது இயல்பாகத் தோன்றிய பொருளை இயற்கையாகவும் மக்களால் செயல்கையாக உருவாக்கப்பட்ட பொருளைக் கலையாகவும் அல்லது கலைப்படைப்பாகவும் கருதலாம்.

கும்மி

இந்த ஆட்டத்தைச் சுட்டுவதற்கு ‘கும்மி’ (கும்மி கொட்டுதல்) என்ற சொல் ‘கை கொட்டுதல்’ என்று பொருள்படும். கற்றவர்களிடையே பரவலாகக் காணப்படுகிறது. கும்முதல் என்ற சொல்லோடு தொடர்புடையது இது ‘கொம்மி கொட்டுதல்’ என்ற சொல் கும்மி இலக்கியங்களில் பயன்படுத்தப்படுகிறது.

கும்மியடிக்கும் முறை பற்றி குறிப்பிடுகையில்,

“மெல்ல நடந்து நடந்து அடித்தல்

நடந்து நின்று அடித்தல்

குனிந்து நிமிந்து அடித்தல்

குதித்துக் குதித்து அடித்தல்

தன் கையைக் கொட்டி அடித்தல்

எதிரில் உள்ளவர்கள் கைகளுடன் கொட்டியடித்தல்”

ஆகிய ஆறு நிலைகளில் கும்மியடிக்கப்படுகிறது என்கிறார்.

கால மாற்றத்தால் கும்மி பல்வேறு மாற்றங்களைக் கொண்டே வந்துள்ளது. வைகாசியில் கொண்டாடப்படும் மாரியம்மன் திருவிழாவின் போது முளைப்பாரி எடுத்துக் கும்மியடிக்கின்றனர்.

முளைப்பாரி வளர்க்கும் வீட்டின் முன் ஆறு நாளும் கோவிலில் ஒரு நாளும் கும்மியடித்து ஆடப்படுகிறது. இந்தக் கும்மியாட்டத்தில் பல்வேறு கருத்துகளைப் பற்றிய பாடலைப் பாடிக் கும்மியடித்து ஆடுகின்றனர்.

எந்த ஒரு மங்கல நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தாலும் விநாயகரை வணங்கியே மக்கள் அந்நிகழ்ச்சியை ஆரம்பிக்கின்றனர். அதுபோலக் கும்மி அடிக்க ஆரம்பிக்கும் பொழுது முதலில் விநாயகரை வணங்கியே ஆரம்பிக்கின்றனர்.

“முந்தி முந்தி விநாயகரே

முருகா நல்ல சரஸ்வதியே

பாட்டில் உள்ள சரஸ்வதியே

என் நாவில் வந்து உதிக்க வேணும்”

என்று விநாயகரை வணங்கி ஆரம்பித்துத் தொடர்ந்து முளைப்பாரியின் படிநிலைகளைப் பாடுகின்றனர்.

“வண்ணக் கொட்டான் சின்னக் கொட்டான்

வகை வகையா நாருக் கொட்டான்

நாருக் கொட்டான் கையிலெடுத்து வாங்க”

“ஆட்டாத் தொழுத் திறந்து ஆட்டெருவு ரெண்டெடுத்து

மாட்டாந் தொழுத் திறந்து மாட்டெடுவு ரெண்டெடுத்து

வட்ட வட்ட ஓடுடச்சு திட்டமுள்ள முளைப் பருவி”

என்றும் முளைப்பாரி பருவி வளர்ப்பது வரையில் வளர்ந்து கொண்டே செல்கிறது.

ஊர்வளம்

கும்மியின் இறுதியில் ஊரைப் பாடுவது மட்டுமல்லாமல் பாடியோருக்கு மாரியம்மன் பரிசு கொடுப்பதாகவும் பாடி முடிப்பார்கள்.

“ஆன வந்தெரங்கவே ஆயிரங்கல் நட்டவ

சேன வந்தெரங்கவே மங்கல்ரேவ் செல்வம் பொழியவே”

என்றும்,

“ஆறா சுழி பாஞ்சு வருகுதாம் காவிரி

ஆராறு அடச்சாலும் அடைபடா காவிரி

பள்ளமே பள்ளன் தெய்வேந்திரன் குடும்பம்

கொட்டுட்டு மண்ணெடுத்து கொளக்கரையின் போட்டா தாம் போயி வெள்ளம் தனியே அடைபட்டுச்சாம்”

என்று கும்மியில் தம் இனத்தைப் புகழ்ந்து பாடவும் தவறவில்லை. “இத்தனையும் படிச்சவளுக்கு என்னா தருவமென்று எண்ணினா மாரியம்மா உடையாத தேங்காயும் ஒரு மாலையும் கழுத்தில் போட்டாள்” என்கிறார்கள்.

நம் மக்களிடையே இன்று கும்மியடிக்கும் வழக்கம் குறைந்து வருகிறது. விநாயகரைப் பாடுவதுடன் துவக்கி விதை வாங்குவது முதல் முளை பருவி கலக்குதல் வரை பாடலாகப் பாடப்படுகிறது. முளைப்பாரி வளப்பவரின் வீட்டின் முன் பாடுதல் தற்போது இல்லை. முளைபரியைக் கரகத்துடன் கோயிலுக்குக் கொண்டு சென்று கோயிலில் பாடுகின்றனர்.

பள்ளிகளும், திருவிழாக்களாலும் சிறுமிகளும் மகளிரும் ஒரு சில இடங்களில் கும்மியடிக்கின்றனர். நாட்டுப் புறப்பாடல்களும் பாரதியார், பாரதிதாசன் பாடல்களும் கும்மியடிக்கும்போது பாடப்படுவதுண்டு.