சபாஷ்கார்கி - அசோகரின் 13ஆம் பெரும்பாறைக் கல்வெட்டு்

முனைவர் மா.பவானி
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

அமைவிடம்:-பாகிஸ்தான் மாநிலம், பெஷாவர் மாவட்டம், சபாஷ்கார்கி என்ற ஊரின் பாறையில் உள்ளது
காலம் :பொ.ஆ.மு. 257 -256
எழுத்து்: கரோஷ்டி
மொழி்:பிராகிருதம்
அரசர்: அசோகர்
வம்சம் :மௌரியர்

கல்வெட்டுச் செய்தியும் முக்கியத்துவமும்

தேவனுக்கும் மக்களும் பிரியமான ராஜாவின் எட்டாவது ஆட்சியாண்டில் கலிங்கம் வெற்றிக்கொள்ளப்பட்டது. இதனால் லட்சத்திற்கு மேற்பட்ட மனிதர்களும் விலங்குகளும் உயிரோடு கொல்லப்பட்டனர். இதனால் வருந்திய அசோகர் தமக்கு பின்னர் வரும் தமது வழித்தோன்றல்கள் அனைவரும் தர்மத்தினால் வரும் வெற்றியையே வெற்றியாகக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகின்றார். இதுவே இக்கல்வெட்டின் சாரமாகும்.

இக்கல்வெட்டு அசோகரது 8ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பெற்றுள்ளது. அசோகர் புத்த மதத்திற்கு மாறியுள்ளார் என்பதை இக்கல்வெட்டுக்கொண்டு அறியலாம். அசோகர் கலிங்கப்போர் புரிந்த பிறகு அதனால் ஏற்பட்ட உயிர் இழப்புகளைக் கண்டு வருந்தி தர்மத்தினால் பெறும் வெற்றியே உண்மையான வெற்றி எனத் தாம் உணர்ந்து அதர்மத்திலிருந்து தர்மத்திற்கு மாறியதையே இக்கல்வெட்டுக் கூறுகிறது. இச்செய்தியை தமது நாட்டிற்கு மட்டுமின்றி பிற தேசங்களுக்கும் அறிவிக்கச் செய்துள்ளார். இவ்வகையில் இக்கல்வெட்டில் அசோகருக்குச் சமகாலத்தில் வாழ்ந்த இந்தியா மற்றும் பிற தேசங்களில் வாழ்ந்த அரசர்கள் குறிப்பிடப்பெறுகிறார்கள். அவ்வகையில் சங்ககாலத் தமிழக மன்னர்களான சேர, சோழ, பாண்டிய வம்சத்தினர் இதில் குறிப்பிடப்பெறுகின்றனர். அது மட்டுமன்றி மேற்கு ஆசிய மன்னர்கள் அன்டியோகஸ் (Antiochus II) தியோஸ் (261 - 46 B.CE), எகிப்தின் மன்னர்கள் டுரமாயா (Ptolemy II Philadelpus (285 - 47 BCE)), அந்திகினி, அன்டிகோனஸ், கோனாடஸ் போன்ற மசிடோனிய மன்னர்களும் (Antikini, - Antigonos, Gonatas (277 - 239BC)) தென் ஆப்பிரிக்கா - சைரினிலுள்ள மகர்கள் (yMaga - Magas 272 - 255 BC) அலிகசுதரா (அலெக்ஸாண்டர் - Alexander (272 - 255) of Epirus or of Corinth) போன்றோரும் குறிப்பிடப் பெறுகின்றனர்.

தாம்ரபணி (ஸ்ரீ லங்கா), யவனர்கள், காம்போஜர்கள், நாபகர்கள் நாபபங்க்திஸ், போஜர்கள், பைத்ரியனிகர்கள், ஆந்திரர்கள், புலிந்தர்கள் (இவர்கள் மஹாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் வாழ்ந்த வந்த மக்களினத்தவராவார்கள்) போன்றோரும் குறிப்பிடுப்பெறுகின்றனர். இவர்களையும் தாண்டி செய்தியை எடுத்துச் செல்பவர்கள் செல்ல இயலாத இடங்களுக்கும் தம்மம் போதிக்கப்பெறவேண்டும் என்று அசோகர் ஆணையிட்டுள்ளார்.