என்கண்

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை



என்கண் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த ஊராகும். இங்குள்ள முருகன் கோவில் புகழ்பெற்றது.

அமைவிடம்

இது திருவாரூருக்கு மேற்கே 14 கி.மீ தொலைவில் உள்ளது. தஞ்சைச் சாலையில் முகுந்தனூருக்கு வடக்கே சுமார் 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது வெட்டாற்றிற்கு வடக்கே உள்ளது.

சிறப்பு

இவ்வூரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு கோவில் உள்ளது. இக்கோவிலில் பல கல்வெட்டுக்கள் உள்ளன. இது ஒரு சிவன் கோயிலாகும். இங்குள்ள முருகன் சன்னிதி மிகவும் புகழ்பெற்றது ஆகும். இங்கு தற்போது முருகன் வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது.

கல்வெட்டுக்குறிப்புகள்

கல்வெட்டுக்களில் இவ்வூர் “இங்கனான பவித்திர மாணிக்கச் சதுர்வேதி மங்கலம்” என்று குறிப்பிடப்படுகின்றது. இங்கன் ஒரு நாட்டுப்பிரிவாகச் சோழர் காலத்தில் இருந்ததை இராசேந்திர சோழனின் திருவாலங்காட்டுச் செப்பேடு வாயிலாக அறிகிறோம். இது அருண்மொழித்தேவ வளநாட்டில் இருந்தது. இங்கன் என்ற பெயர் பிற்காலத்தில் என்கண் என்றுதிரிந்துவிட்டது.

தொல்லியல் சான்றுகள்

இங்கு பெருங்கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் பல காணப்படுகின்றன. ஈமத் தாழிகள் இவ்வூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு வரலாற்றுத் தொடக்க காலத்திலும், இடைக் காலாத்திலும் தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.