முதலாம் இராஜேந்திரசோழன் காசுகள்

முனைவர் மா.பவானி
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

காலம் - பொ.ஆ. 1012-1044
உலோகம் - கலப்புத் தங்கம், வெள்ளி, தங்கம் மற்றும் வெள்ளி கலந்த உலோகம், செப்பு.
வடிவம் - வட்டம்
எடை்- தோராயமாக 3.1 கிராம் முதல் 4.4 கிராம் வரை

முதலாம் இராஜேந்திரசோழன் (பொ.ஆ. 1012-1044)

முதலாம் இராஜேந்திரசோழன் முதலாம் இராஜராஜசோழனின் மகன் ஆவான். வடக்கே கங்கை நதி வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதன் மூலம் கங்கைகொண்டான் என்ற பெயர் பெற்றான். அவ்வெற்றியின் நினைவாக கங்கைகொண்ட சோழபுரம் எனும் பெயரில் ஒரு ஊரையும் கோயிலையும் நிர்மாணித்தான்.

முதலாம் இராஜேந்திரசோழன் காசுகள்

காசின் முன்புறம் வழக்கமான ராஜராஜன் காசுகளில் இருப்பதைப் போன்று நிற்கும் மனித உருவம், வெண்கொற்றக்குடையின் கீழ் வில் வலது பக்கம் நோக்கி நிற்கும் புலியின் முன் செங்குத்தான இரு மீன்கள், விளக்கு, வலது பக்கத்தில் "ஸ்ரீராஜேந்திரஹ" என்ற நாகரி எழுத்துப் பொறிப்பு ஆகியவை காணப்படும். காசின் பின்புறம் அமர்ந்த மனித உருவம் வலது பக்கத்தின் மேலே வெண்கொற்றக்குடையின் கீழ் புலி அமர்ந்த நிலையிலும் புலியின் முன்னும் பின்னும் விளக்கு, நாணேற்றப்பட்ட வில். செங்குத்தான இரு மீன் உருவங்களின் கீழ் "ஸ்ரீராஜேந்திரஹ", "கங்கைகொண்ட சோள", "யுத்தமல்ல" எனும் நாகரி எழுத்துப் பொறிப்பும், "கங்கைகொண்டசோளந்", "முடிகொண்டசொளந்" எனும் தமிழ் கிரந்த எழுத்துப் பொறிப்பும் காணப்படும். காசின் பின்புறம் வெண்கொற்றக்குடையின் கீழ் வலப்பக்கம் நோக்கி அமர்ந்திருக்கும் புலி உருவமும் சில காசுகளில் "ராஜேந்திர" எனும் எழுத்துப் பொறிப்பில் 'ராஜ' என்பது நாகரியிலும் 'ந்திர' என்பது தமிழிலும் உள்ளது.