கற்திட்டை

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

கற்திட்டை ஆங்கிலத்தில் “Dolmen” என்று அழைக்கப்படுகின்றது. இது மேசை போன்று காணப்படுகின்றது. கற்பலகைகளால் இது உருவாக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் செதுக்கப்படாத கற்பாறைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அமைப்பு

நான்கு புறமும் ஒவ்வொன்றாக நான்கு கற்பலகைகள் செங்குத்தாக நிறுத்தப்பட்டு அவற்றின் மீது ஒரு கற்பலகை மூடு கல்லாக வைக்கப்படுகின்றது.
ஒரு கல் திட்டையின் தோற்றம்,

இந்தக் கற்பலகைகள் சற்று சரிவாக ஒன்றின் மீது ஒன்றாக வைக்கப்படுகின்றன. எனவே, இவற்றின் ஒருமுனை அதன் அடுத்துள்ள கற்பலகையின் முனையைக் காட்டிலும் சற்று நீண்டு காணப்படுகின்றது. இதை “ஸ்வஸ்திகா” அமைப்பு என்றும் கூறுவர். கற்திட்டைகள் கற்பதுக்கைகள் போலவே உள்ளன. இவை தரையின் மேல் காணப்படும்.

கற்திட்டைகளில் சில, மூன்று பக்கங்களில் மட்டும் கற்பலகைகளைக் கொண்டு, ஒரு பக்கம் திறந்தவாறு காணப்படும்.

சில கற்திட்டைகளின் ஒரு பலகையில், வட்ட அல்லது நீள்வட்டவடிவில் துளை ஒன்று காணப்படுகின்றது. இது இடுதுளை எனப்படுகின்றது.

காணப்படும் இடம்

இவை தருமபுரி மாவட்டத்தில் மல்லசந்திரம், மற்றும் தமிழகத்தில் கொடைக்கானல், நீலகிரி உள்ளிட்ட பல ஊர்களில் காணப்படுகின்றன. பொதுவாக இவை, மலைகள், பாறைகள் ஆகியவற்றின் மீது காணப்படுகின்றன.

தற்காலத்தில் தருமபுரி, வட ஆற்காடு மாவட்டங்களில் கற்பலகைகளைக் கொண்டு எழுப்பப்படும் நாட்டுப்புறக் கோவில்களும், கற்திட்டைகளின் அமைப்பை ஒத்துள்ளது குறிப்பிட தக்கதாகும். இவற்றில் மெருகேற்றப்பட்ட கற்கோடரிகள் வழிபாட்டிற்காக வைக்கப்படுகின்றன. சிலவற்றில் நடுகற்கள் வைக்கப்பட்டுள்ளன.

மேற்கோள் நூல்

Leshni,L.S 1974, South Indian Megalithic Burials, The Pandukal Complex. Wesbaden.