சீனக்கனகம்

முனைவர் பா.ஜெயக்குமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறைஅறிமுகம்

தமிழ் இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகளில் காணப்படும் பல சொற்களுக்கு பொருள் கொள்வது என்பது இன்றும் கூட எளிதானதன்று. இதில் ‘சீனக்கனகம்’ என்ற சொல்லும் அடங்கும்.

பெயர்ச்சிறப்பு

சீனக்கனகம் என்ற சொல் நாகப்பட்டினம் அருள்மிகு காயாரோகணசுவாமி கோயிலில் காணப்படும் முதலாம் இராஜேந்திரச் சோழனின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது. இக்கல்வெட்டுகள் ஸ்ரீவிஜயம் அல்லது கடாரம் நாட்டு மன்னரின் (முதலாம் இராஜராஜ சோழன் அனுமதியுடன் கி.பி 1006இல் நாகப்பட்டினத்தில் புத்தவிகாரைகளைக் கட்டியவன் இம்மன்னன் என்பதை ஆனைமங்கலம் செப்பேடுகளின் வாயிலாக அறிகிறோம்) பிரதிநிதிகள் மேற்படிக் கோயிலுக்கு 87 ¾ கழஞ்சு எடையுள்ள சீனக்கனகத்தைக் கொடையாக அளித்தமை குறிப்பிடப்படுகிறது. சீனக்கனகம் என்பதை, சீனம்+கனகம் எனப் பிரித்துப் பார்த்தால் ‘சீனம்’ என்பது சீன நாட்டையும் ‘கனகம்’ என்பது பொன் (நா.கதிர்வேற்பிள்ளை, தமிழ்மொழி அகராதி, பதிப்பு-10,1998, ப.417) குறிக்கும். இதன் அடிப்படையில் சீனக்கனகத்தைச் சீன நாட்டைச் சேர்ந்த பொன் அல்லது தங்கம் எனக் கொள்வதே சிறந்தது. கழஞ்சு என்பது எடை அளவாகும். பொதுவாக அக்காலங்களில் பொன்னை நிறுப்பதற்கு இந்த எடை அளவே பயன்படுத்தப்பட்டுள்ளது. 1 கழஞ்சு = 4 கிராம் ஆகும். 87 ¾ கழஞ்சு = 351 கிராம் எனில் இன்றைய மதிப்பில் 44 பவுன் எனக் கொள்ளலாம். ஆக, ஒரு ஆவணத்தின் வாயிலாக மட்டும் அறியப்பட்ட கொடையின் அளவு இது எனில் அக்காலத்தில் சோழப் பேரரசுக்குச் சீனாவிலிருந்து அந்நியச் செலாவணியாக எவ்வளவு பொன் அக்காலத்தில் தமிழகத்திற்கு வந்திருக்க வேண்டும் என்பதை ஊகிக்கலாம்.

ஆய்வாளர்கள் கருத்து

சீனக்கனகம் என்பதற்குச் சீனப்பொன் நாணயம் என வரலாற்று ஆய்வாளர்கள் பொருள் கொள்கின்றனர். “இந்நாணயம் சீனாவிலிருந்து ஸ்ரீவிஜயா மற்றும் கடாரம் வழியாகத் தமிழ்நாட்டின் சிறப்புமிகு வணிகத் துறைமுகமாக விளங்கிய நாகப்பட்டினத்திற்கு வணிகர்கள் மூலமாக வந்திருக்க வேண்டும்” என முனைவர் கே.ஜி.கிருஷ்ணன் கருதுகிறார். இக்கருத்துக்கு மேலும் துணை சேர்க்கும் வகையில் சோழமண்டலக் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள விக்ரமம் மற்றும் ஒலையகுன்னம் (தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ளது) மற்றும் தளிக்கோட்டை (திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்தில் உள்ளது) போன்ற இடங்களில் சீன நாணயங்கள் குவியல்களாகக் (hoard) கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்குவியல்களில் கிடைத்துள்ள பெரும்பாலான நாணயங்கள் கி.பி 11-13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். “இடைக்காலத்தில் தமிழ்நாடு கீழ்த்திசை நாடுகளுடனும் மேற்கத்திய நாடுகளுடனும் சிறப்பான முறையில் வணிகத்தொடர்பு கொண்டிருந்தது. அவ்வகையில் இரண்டு நாடுகளின் வணிகத் தொடர்பினால் தான் இத்தகைய சீன நாணயங்கள் சோழ மண்டலத்திற்கு வந்திருக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியாது எனப் பேராசிரியர் நொபொரு கராசிமா கருதுகிறார

விளக்கம்

மேற்சுட்டிய ஆய்வாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் நோக்கினால் சீனக்கனகம் பொன் நாணயமாகக் கருதப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் தங்கத்தாலான சீன நாணயம் இதுவரை கிடைக்கவில்லை. தமிழகத்தில் இதுவரை உருவமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நாணயங்கள் எதுவும் சீனக்கனகத்துடன் பொருந்தவில்லை என்பதும், சீனக்கனகம் என்ற குறிப்பு நாகப்பட்டினம் சோழர் கல்வெட்டுகளைத் தவிர வேறு எதிலும் காணப்படவில்லை என்பதாலும் இது நாணயமாக அக்காலத்தில் புழக்கத்தில் இல்லை என்பது தெளிவாகிறது. கி.பி 12-13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீனமொழிக் குறிப்பான (Chinese Text) சௌ-சு-குவா தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து தங்கக் கட்டிகள் வணிகர்களால் சோழ மண்டலக் கடற்கரைக்கு வந்ததாகவும் குறிப்பாக, வெளிநாட்டு வணிகர்களை ஈர்ப்பதற்காகக் கடல்சார் வணிகத்தில் பெரும் நாட்டம் கொண்டிருந்த சீன மன்னன் தனது நாட்டு வணிகர்கள் மற்றும் தூதுவர்கள் வாயிலாகப் பெருமளவில் தங்கக் கட்டிகளைச் சோழ மண்டலக் கடற்கரைக்கு அனுப்பியதாகவும் குறிப்பிடுகிறது. மேற்சுட்டியவற்றை நோக்கும்போது வடமொழியில் கனகம் என்பதற்குச் சுத்தத்தங்கம் (தமிழில்: நிறை பொன்) எனப் பொருள்படும் சீனக்கனகம் என்பது நாணயம் அல்ல என்பதும் பணத்திற்கு மாற்றாகப் பயன்படுத்தப்பட்ட தங்கக்கட்டிகள் என்பதும் புலப்படுகிறது.