மதுரை – சுல்தான் காசுகள்

முனைவர் மா.பவானி
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

மதுரை – சுல்தான்கள் (14 ஆம் நூற்றாண்டு):

மதுரை பகுதியை பொ.ஆ. 15 ஆம் நூற்றாண்டு வாக்கில் ஆட்சி புரிந்த சுல்தான்கள் மதுரை சுல்தான்கள் எனப்பட்டனர். டெல்லியில் நடைபெற்ற அரசியல் கலகத்தால் கில்ஜி வம்சம் முடிவடைந்தது. துக்ளக் வம்சம் ஆட்சி செய்யத் தொடங்கியது. தென்னக இந்து அரசுகளை அழித்து இஸ்லாம் சமயத்தைப் பரப்பும் நோக்குடன் பொ.ஆ. 1321இல் முகமதுபின் துக்ளக் ஜலாலுதீன் அடில்ஷாவை மதுரை மீது படையெடுக்க அனுப்பினார். முகமது பின் துக்ளக்கை ஏமாற்றி ஜலாலுதீன் பொ.ஆ. 1334-1335இல் மதுரையில் சுல்தானியத்தை ஏற்படுத்தினார். இவரைத் தொடர்ந்து அலாவுதீன் உதாஜி, குதுப்புதீன் சியாசுதீன் தமகன்ஷா, நசுருதீன் போன்ற பல அரசர்கள் ஆட்சி நடத்தினர். முடிவில் பொ.ஆ. 1378 ஆம் ஆண்டு குமாரகம்பணனின் படையெடுப்புடன் மதுரை சுல்தானியம் வீழ்ச்சியடைந்தது. இவர்களுள் ஜலாலுதீன் அஷன்ஷா (பொ.ஆ. 1333-38) அலாவுதீன் உதௌஜிஷா (பொ.ஆ. 1338-1339) ஆகியோரின் பாரசீக எழுத்தில் பொறிக்கப் பெற்ற நாணயங்கள் மதுரையில் கிடைத்துள்ளன. அதே போன்று பிஜப்பூர் சுல்தான் அடில்ஷாவின் நாணயங்களும் கிடைத்துள்ளன.