நுண்கற்கருவிகள்

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

நுண்கற்கருவிகள், மதுரை மாவட்டம்

நுண்கற்கருவிகள் உருவில் சிறியவை, செயல்பாட்டில் பெரியவை. நுண்கற்கருவிகள் microliths என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன. இக்கருவிகள் பொதுவாக 5 செ.மீ. அளவிற்கும் குறைவாக இருந்தால், இவ்வாறு அழைக்கப்படுகின்றன இலங்கைத் தமிழில் “குறுணி” கற்கருவிகள் என இவை அழைக்கப்படுகின்றன.

காலம்

இவை பொதுவாக இடைக்கற்காலத்தில் (Mesolithic Period) அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன. ஆனால் தற்போதைய ஆய்வுகளின்படி இத்தகைய கருவிகள் கடைப் பழங்கற்காலத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. இக்கருவிகள், புதியகற்காலத்திற்கு முன்னர் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டாலும், புதியகற்காலத்திலும், இரும்புக்காலத்திலும் இவை ஓரளவிற்குப் பயன்படுத்தப்பட்டன. இன்றிலிருந்து சுமார் 50,000 வருடங்கள் முதல் 1500 வருடங்களுக்கு முன்பு வரை இவை பயன்படுத்தப்பட்டன.

வகைகள்

இவை,

ஜியோமிதி வடிவக் கருவிகள் (Geometric)

ஜியோமிதி அல்லாத வடிவக் கருவிகள் (Non Geometric)

என வகைப்படுத்தப்படுகின்றன.

ஜியோமிதி வடிவக் கருவிகளில், முக்கோணக் கருவி, பிறைச் சந்திரன் வடிவக் கருவி, டிரபீசியக் கருவி ஆகியவை அடங்கும். கூர்முனை (point), அம்புமுனை (arrowhead) ஆகிய கருவிகளும் ஜியோமிதி வடிவமல்லாத நுண்கற்கருவிகளுள் அடங்கும். இக்காலத்தில் பிளேடுகள் எனப்படும் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

உருவாவதற்கான காரணம்

இந்தச் சிறு சிறு கருவிகள் பிலிஸ்டோசீன் காலத்தில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாறுதலால் உருவாயின என அறிஞர்கள் கருதுகின்றனர். இவை வேகமாக ஓடும் விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்தப்பட்டன. இந்தச் சிறு சிறு கருவிகள், மரக்கம்பு மற்றும் கொம்பு, எலும்புகளில், பதிக்கப்பட்டு, அம்பு, அறுவாள் மற்றும் பிற வெட்டும் கருவிகள் உண்டாக்கப்பட்டன. பழங்கற்காலக் கருவிகள் அளவில் பெரியதாக இருந்தன. நுண்கற்கருவிகள் சிறியதாக இருந்ததால், குறைந்த அளவு மூலப்பொருளே தேவைப்பட்டது.

வில் - அம்பு

அம்புமுனை, கூர்முனைகளைப் பயன்படுத்தி இடைகற்காலத்தில்தான், வில் அம்பு முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது எனக் கருதப்படுகின்றது.

காணப்படும் இடங்கள்

இந்தியா முழுவதும் இக்கருவிகள் காணப்படுகின்றன. தமிழகத்தில் மாங்குடி, மயிலாடும்பாறை, அத்திரம்பாக்கம் ஆகிய இடங்களில் மண்ணடுக்குகளில் கிடைத்துள்ளன.

‘மூர்த்தி’ சிறியதாக இருந்தாலும், இக்கருவிகளின் கீர்த்தி பெரியது. இவை நுண்ணிய வேலைகள் செய்ய மிகவும் பயன்பட்டன.