கரிமக் காலக்கணிப்பு

 

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை


இது ஓர் அறிவியல் பூர்வமான காலக்கணிப்பு முறை தொல்பொருட்களில் உயிர்மப் பொருட்களைக் (Organic) காலக்கணிப்பு செய்ய இம்முறை பயன்படுகின்றது. கரித்துண்டுகள் இம்முறையில் காலக்கணிப்பு செய்யப்படுகின்றன. இம்முறையை வில்லர்ட் லிப்பி என்பவர் 1949இல் கண்டுபிடித்தார். இது “C-14”, “Radiocarbon” காலக்கணிப்பு என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றது.

இந்த முறையின் அடிப்படை ஐசோடோப்புகளின் அரைஆயுட்காலத்தைச் சார்ந்துள்ளது. கார்பன் 14 ஐசோடோப்பு 5730 வருடங்கள் கழித்து கதிரியக்கச் சிதைவால், அதில் முதலில் இருந்த அளவிலிருந்து பாதியாகக் குறைகின்றது(half life).

விண்வெளியிலிருந்து வரும் கதிரியக்கத்தால் வளிமண்டலத்தில் கார்பன் 14 என்ற ஐசோடோப்பு உருவாகின்றது. இது ஒளிச்சேர்க்கையின் விளைவாகத் தாவரங்களுக்குள்ளும், விலங்குகளுக்குள்ளும் செல்கின்றது. தாவரங்கள் இறந்தபிறகு, அவற்றில் உள்ள கார்பன் சிதைய ஆரம்பிக்கின்றது. ஒவ்வொரு 5730 வருடங்களுக்கும், முதலில் இருந்ததில் பாதி அளவாகக் கார்பன் 14 குறைகின்றது.

ஒரு தொல்லியல் இடத்தில் கிடைக்கும் தாவரப்பகுதிகள் அல்லது விலங்குகளின் எலும்புகள், கரித்துண்டு ஆகியவற்றை ஆய்வகங்களில் பகுப்பாய்வு செய்து, உயிர்மப் பொருட்களின் வயது கண்டுபிடிக்கப்படுகின்றது. உயிர்மப் பொருட்களை மட்டுமே இம்முறையில் காலக் கணிப்பு செய்யமுடியும். எலும்புகளை விட தாவரப்பொருட்களே இம் முறையில் காலக்கணிப்பு செய்ய உதவியாக உள்ளன. இம்முறையில் காலம் கணக்கிடும்போது பிழைகள் ஏற்படுவதால் காலக்கணிப்பு உத்தேசமாக “+” (+அல்லது-) என்ற முறையில் தெரிவிக்கப்படுகின்றது.

மரவளையக் காலக்கணிப்பு வழியாக, இம்முறையில் உள்ள பிழைகள் திருத்தப்படுகின்றன. இது calibration என்று அழைக்கப்படுகின்றது.

அண்மைக்காலத்தில் Accelerator Mass Spectrometry என்ற AMS காலக்கணிப்பு முறை கார்பன் -14 காலக்கணிப்பிற்குப் பயன்படுத்தப்படுகின்றது. இம்முறையில் காலக்கணிப்பு செய்ய 2 - 3 கிராம் எடையுள்ள கரித்துண்டுகள் போதுமானது. பழைய மரபுவழிக் காலக்கணிப்பு முறையில் 20 முதல் 30 கிராம் கரித்துண்டுகள் தேவைப்பட்டன.

மேற்கோள் நூல்

Renfrew,C and Paul Bahn. 1994. Archaeology: Theory & Methods.