நாணயங்களின் தோற்றம்

முனைவர் மா.பவானி
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை

மனித இனத்தின் தேவை காலத்திற்கும் நாகரித்தின் வளர்ச்சிக்கும் ஏற்றவாறு மாறத்தொடங்கியது. மனிதனது செயல்பாடுகள் ஒரு குடும்பத்தை அல்லது குழுவைச் சார்ந்ததாக இருந்தபொழுது அவனது தேவைகள் குறைவாக இருந்தன. பின்னர் பிற குழுக்களுடன் போராடி தமது பலத்தை நிரூபித்து தனி அரசுகளை உருவாக்கினர். இதனால் அவர்களது நடவடிக்கைகள் விரிவடைய ஆரம்பித்தன. இதன் காரணமாகத் தமது தேவைகளுக்குப் பொருட்களை வாங்கவும், கொடுக்கவும் வேண்டியிருந்ததால் பண்டமாற்று முறையைப் பயன்படுத்தினர். தங்களது பகுதியில் உற்பத்தியாகும் பொருட்களில் தேவைக்குப் போக மிஞ்சியதைப் பிறப் பகுதிகளில் உற்பத்தியாகும் பொருட்களுக்காகப் பண்டமாற்று செய்தனர். இவ்வாறாகச் சில பகுதிகளில் சிறிது சிறிதாக நடைபெற்ற பண்டமாற்று மக்கள் பெருக்கம் காரணமாக வணிகப் பொருட்களுக்கு ஏற்பட்ட தேவையாலும் (demand) உபரி உற்பத்தியாலும் (Surpius production) பெருமளவில் நடைபெறத் தொடங்கியது. எடுத்துக்காட்டாக உப்புக்குப் பதிலாக அரிசியையும் நெய்யிற்கு மாற்றாக நெல்லினையும் பெற்றனர். நிலம், ஆபரணங்கள் போன்றவற்றைப் பரிமாற்றம் செய்யும் பொழுது சமமான மாற்றின்மையால் வணிக நடைமுறைகள் சிக்கலானது. இதனால் பொதுவானதொரு மாற்றுப் பொருளின் தேவையை உணரத் தொடங்கினர். எனவே தொடக்கக் காலங்களில் செல்வமாகக் கருதி வந்த “பசு”வை பண்டமாற்றுப் பொருளாகப் பயன்படுத்தியுள்ளனர். அஸ்டாத்யாயி என்னும் நூலில் “கோபுச்சம்” (gobuchcham) என்ற ஒரு நாணய வகை குறிப்பிடப்படுகிறது. (கோ என்பது மாடு என்றும் புச்சம் என்றால் வால் என்றும் பொருள்படும்). இந்தியாவில் மட்டுமின்றி ரோம் போன்ற நாடுகளிலும் கால்நடைகளை மாற்றுப்பொருளாகப் பயன்படுத்தியுள்ளனர். “கால்நடை” என்று பொருள்படும் “பெக்குனியா” (pecunia) என்ற சொல்லினை இவர்கள் செல்வம் என்பதற்கும் பயன்படுத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழிலும் “மாடு” என்ற சொல் செல்வத்தைக் குறிக்கப் பயன்பெற்றுள்ளது. இடைக்காலத் தமிழக நாணய வகைகளுள் இடம்பெறும் “மாடை” என்பதும் இச்சொல்லிலிருந்தே தருவிக்கப் பெற்றிருக்கலாம். இதுபோல் கிரேக்க நாட்டில் ஹோமர் காலத்தில் தட்டுகளும் கோடரிகளும் நாணயமாகப் பயன்பட்டு வந்தன. சீனாவில் விவசாயப் பொருட்கள், பண்டமாற்றுப் பொருளாகப் பயன்பெற்றுள்ளன. கிளிஞ்சல், சங்கு, ஆபரணங்கள் போன்றவை பொது மாற்றுப் பொருள்களாகப் பயன்பட்டுள்ளன.

கங்கைச் சமவெளி நாகரிகத்தைக் கொண்டிருந்த வேதகால மக்கள் தங்களது வாழ்க்கை முறையை மேய்ச்சல் பொருளாதாரத்திலிருந்து வேளாண்மைப் பொருளாதாரத்திற்கு மாற்றிக் கொண்டதனால் “தட்சிணை” “கொடை” என்ற முறையில் பொருள் பரிமாற்றங்களை அமைத்துக்கொண்டனர். இக்காலத்தில் ஆபரணங்களும் மாற்றுப் பொருட்களாகப் பயன்படுத்தப் பெற்றன. “நிஷ்கம்”, “சதமானம்”, “ஸ்வர்ணம்” போன்றவற்றை இவ்வகையில் கூறலாம். நிஷ்கம் என்பது ஒருவகைக் கழுத்தணியாகும். சங்க இலக்கியங்கள் சுட்டும் “காசு” என்பது கூட ஆபரணமே தவிர தற்பொழுது வழக்கில் உள்ளது போல் நாணயம் அல்ல என்பது ஆய்வுகள் மூலம் மெய்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக இவர்கள் பயன்படுத்தி வந்த மாற்றுப் பொருட்கள் சிறு சிறுப் பொருட்களை வாங்குவதில் சிக்கல்களைத் தோற்றுவித்தன. பொருட்களைக் கொடுப்போர், வாங்குவோர் என இரு தரப்பினருக்கும் நட்டமில்லாத “இணை மதிப்புள்ள மாற்று” (double co-incidence) தேவைப்பட்டுள்ளது. இதனால் பொருட்களுக்கு ஏற்றாற்போல் மதிப்புடைய உலோகத் துண்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர். இதுவே நாணயங்களின் தோற்றத்திற்கு வழி வகுத்திருக்கும் எனக் கருதலாம்.

ஆசியாமைனரில் பொ.ஆ.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்த “லிடியா” நாட்டு மன்னன் கிரிசஸ் என்பவரே முதன் முதலில் நாணயங்களை வெளியிட்டதாகக் கருதப்பட்டு வருகிறது. முதலில் விலை மிகுந்த பொன், வெள்ளி போன்ற உலோகங்களிலேயே நாணயங்களைச் செய்தனர். பின்னர் பெரும்பாலான அனைத்து உலோகங்களிலும் நாணயங்களை வெளியிட்டனர்.

இந்திய நாணயங்களின் தோற்றம்:

இந்தியாவில் நாணயங்களின் தோற்றம் எனப் பார்க்கும் போது அது பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்தே துவங்குகிறது. அதற்கு முன்னர் பண்டமாற்று முறையே நிகழ்ந்துள்ளன. கிட்டத்தட்ட இந்திய நாகரிகத் தொடக்கத்தின் மையமாக விளங்கிய ஹரப்பா, சிந்துவெளி பண்பாட்டினர், எகிப்து போன்ற நாடுகளுடன் வணிகம் செய்வதற்குச் சரியான எடை முறையையும் முத்திரைகளையும் பயன்படுத்தியதாக அறிகின்றோம்.

தேவ ஆரியர்களின் வருகை (பொ.ஆ.மு. 1500-600):

தேவகால ஆரியர்களின் நாகரிகம் கங்கை சமவெளியைச் சுற்றி அமைந்தது. இவர்கள் தங்களது வாழ்க்கையை மேய்ச்சல் பொருளாதாரத்திலிருந்து வேளாண்மை பொருளாதாரத்திற்கு மாற்றிக்கொண்டனர்.

வேத காலத்தில் “நிஷ்கா”, “சதமானா”, “ஸ்வர்ணா” போன்ற நாணயங்கள் வழக்கில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. இவை குறிப்பிட்ட எடையுடைய விலை உயர்ந்த உலோகங்களாகவும் ஆபரண வடிவிலும் கூட இருந்திருக்கலாம். பெரும்பாலும் இவை வேதம் ஓதும் அந்தணர்களுக்கு தட்சணையாக வழங்கப்பட்டுள்ளது.

பொ.ஆ.மு. 6 ஆம் நூற்றாண்டு:

பொ.ஆ.மு. 6 ஆம் நூற்றாண்டில் இரும்பின் பயன்பாடு அதிகமானதால் வரலாற்றில் சத்திரியர்களின் எழுச்சி, எழுத்து முறைகளின் தோற்றம் போன்ற பல புதிய திருப்பங்கள் நிகழ்ந்தன. அவற்றுள் நாணயங்களின் தோற்றமும் ஒன்றாகும்.

முத்திரை நாணயங்கள்:

இந்தியாவைப் பொறுத்தவரையில் இன்று வரை மேற்கொள்ளப் பெற்றுள்ள ஆராய்ச்சியின் அடிப்படையில் நோக்குகையில் “கார்ஷாப்பணம்” என்ற முத்திரை நாணயங்களே (punch marked coins) தொடக்கக் காலத்தில் வழக்கிலிருந்த நாணயமாகக் கருதப்படுகிறது. தங்கம், வெள்ளி, தாமிரம் போன்ற உலோகங்களில் இவை கிடைக்கப் பெறினும் இவற்றில் பெரும்பாலானவை வெள்ளியினாலானதே ஆகும்.

தமிழகத்தில் நாணயங்களின் தோற்றம்:

மேற்குறிப்பிட பெற்ற முத்திரை காசுகள் பரவலாகத் தமிழகத்திலும் கிடைத்துள்ளன. கரூர், கோயம்புத்தூர், மாம்பலம், தொண்டைமாநத்தம், போடிநாயக்கனூர் போன்ற பல இடங்களில் இக்காசுகள் கிடைத்துள்ளன. இக்காசுகளுடன் தமிழக வரலாற்றின் தொடக்கமான சங்ககாலத்தைச் (பொ.ஆ.மு. 300 – பொ.ஆ. 300) சேர்ந்த பாண்டிய, சேர, சோழர்களது நாணயங்கள் வைகை, கரூர், காவிரி ஆற்றுப்படுகைகளில் சிதறல்களாகக் கிடைக்கப் பெறுகின்றன. சங்ககாலப் பாண்டிய மன்னனின் “பெருவழுதி” எனும் பெயர் பொறிக்கப் பெற்ற நாணயமும், “கொல்லிப்புறைய்”, “கொல்லிரும்புறை”, “மாக்கோதை” எனும் சேர மன்னர்களின் எழுத்துப்பொறிக்கப் பெற்றுள்ள நாணயங்களும் முக்கியமானவைகளாகும். இதைத் தொடர்ந்து பல்லவர், இடைக்காலச் சோழர்கள், பாண்டியர், விஜயநகர, நாயக்க அரசுகளது எழுத்துப்பொறிக்கப் பெற்ற மற்றும் எழுத்துப்பொறிப்பற்ற நாணயங்கள் ஏராளமாகத் தமிழகத்தில் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளன.