சம்புவராயர் காசுகள் சம்புவராயர்கள் (14 ஆம் நூற்றாண்டு): சோழப் பேரரசை உருவாக்குவதில் பெரும்பங்காற்றிய பல சிற்றரசுக் குடும்பங்களுள் சம்புவராயர் குடும்பமும் ஒன்றாகும். அதிராஜேந்திரன் (பொ.ஆ. 1070), மூன்றாம் இராஜராஜன் (பொ.ஆ. 1216-1257) காலம் வரையிலும் சோழர்களின் கீழ் அதிகாரிகளாகவும், படைத்தளபதிகளாகவும் நாடு காவல் செய்பவர்களாகவும், சிற்றரசர்களாகவும் விளங்கிய சம்புவராயர்கள் சோழப் பேரரசின் வீழ்ச்சிக் காலத்தில் தனியாட்சி நிறுவினர். அவ்விதம் முதல் தனியாட்சியை நிறுவியர் இராசகம்பீர சம்புவராயராவார் (பொ.ஆ. 1216-1268). இவர் வடாற்காடு மாவட்டம் போளூர் வட்டத்திலுள்ள படைவீடு என்ற இடத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார். இவர்களின் ஆட்சிப் பகுதி இன்றைய கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய படைவீட்டு இராச்சியமாகும். இவர்களது இராச்சியம் முதலில் விசயகண்ட கோபாலன் என்ற பாண்டிய மன்னனாலும் பிறகு படையெடுத்த குமாரகம்பண்ணனாலும் வீழ்ச்சியுற்றது. சம்புவராயர் காசுகள்:
இவ்வரசர்கள் காலத்தில் வெளியிடப் பெற்ற வாசிப்படா வீரசம்பன் குளிகை காசுகள் பற்றி சம்புவராயரின் ஒரு சில கல்வெட்டுக்களும் சில பாண்டிய விசயநகர காலக் கல்வெட்டுக்களும் பேசுகின்றன. கல்வெட்டுகளில் இடம்பெற்றிருக்கும் காசுகள் வென்று மண்கொண்ட சம்புவராயன் காலத்தில் (பொ.ஆ. 1332-1339) புழக்கத்திலிருப்பதால் இராச நாராயண சம்புவராயன் காலத்தில் வெளியிட்டிருக்க இயலாது (பொ.ஆ. 1337-1373). ஏனெனில் இம்மன்னனுக்கு வீரசம்பன் என்ற பட்டப் பெயர் ஒரு கல்வெட்டில் கூட காணப் பெறவில்லை என்று நடனகாசிநாதன் குறிப்பிடுகின்றார். அவ்விதம் வீரசம்பன் என்ற பட்டப் பெயர் ஒரு கல்வெட்டில் கூட இல்லை என்று முடிந்த முடிவாக வரலாற்றில் குறிப்பிட இயலாது. ஏனெனில் இவர்கள் வெளியிட்ட எல்லாக் கல்வெட்டுக்களும் நமக்கு கிடைத்துவிட்டனவா? என்ற ஐயப்பாடு தொடர்ந்த வண்ணமே உள்ளது. தமக்கு முந்தைய அரசர்களின் வெளியீட்டை அடுத்தடுத்து வரும் அரசர்களும் பின்பற்றுவது இயற்கையான நிகழ்வே. சோழ மன்னன் முதலாம் இராஜராஜனின் ஸ்ரீராஜராஜ என்று தேவநாகரியில் பொறிக்கப் பெற்ற காசுகளும் உத்தம சோழனின் காசுகளை இராஜேந்திரன் வெளியிட்டிருக்கக்கூடும் என்ற ஐயப்பாடும் இதற்குச் சான்றாகும். |