செஞ்சி

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

செஞ்சி வரலாற்று மற்றும் தொல்லியல் சின்னங்கள் உடைய ஊராகும். இராணுவ கட்டடக் கலைக்குச் சான்றாகச் செஞ்சியும் அதன் கோட்டையும் விளங்குகின்றன.

அமைவிடம்

இது திருவண்ணாமலைக்குக் கிழக்கே 37கி.மீ. தொலைவில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது.

சிறப்பு

செஞ்சி வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதியாகும். இப்பகுதியில் சமணசமயம் இடைக் காலத்தில் சிறந்து விளங்கியது. செஞ்சி நாயக்கர் ஆட்சியில் சிறந்து விளங்கியது. செஞ்சிக் கோட்டை 15 ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. இதன் மூன்று மேட்டுக்குடிப் (Citadel) பகுதிகள், வடக்கே கிருஷ்ணகிரி, மேற்கே ராஜகிரி மற்றும் தெற்கே சந்திரகிரி ஆகிய மூன்று மலைகளின் மேல், முக்கோணத் தரையமைப்பில் அமைந்துள்ளன. இந்தக் கோட்டை, பீஜப்பூர் சுல்தான்கள், மராட்டியர்கள், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேய அதிகாரத்தின் கீழ் இருந்தது. கோட்டையில் பல கோயில்களும், மசூதிகளும், குளங்களும், தானியக் களஞ்சியமும் இருந்தன.

வெளிக்கோட்டையின் அடிவாரத்தில் உள்ள வெங்கடரமணன் கோயில் 17ஆம் நூற்றாண்டில் முத்தியாலு நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. இந்தக் கோவிலில் இராமாயணம் மற்றும் விஷ்ணு புராணத்தை விளக்கும் சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரியில் உள்ள தர்பார் மண்டபம் உப்பரிகைகளைக் கொண்டு அழகாகக் காட்சி அளிக்கிறது.

மிகச் சிறப்பாகக் கல்யாண மஹால் என்ற அந்தப்புரப் பெண்களுக்காகக் கட்டப்பட்ட மாளிகை குறிப்பிடத் தக்கதாகும். எட்டடுக்குகள் கொண்டு பிரமிடு வடிவத்தில் அமைக்கப்பட்ட கல்யாண மஹால், ஒவ்வொரு தளத்திலும் ஒரு பெரிய அறையைக் கொண்டுள்ளது. செஞ்சியும், அதன் கோட்டையும், ராஜா தேசிங்கும் (தேஜ்சிங்) இன்றும் மக்கள் நினைவுகொள்ள கூடியனவாம்.