திருவரங்குளம்

முனைவர் வீ.செல்வகுமார்
உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை

பிற்காலச் சோழர் காலக் கோவிலும் பல கல்வெட்டுக்களையும் உடைய இடமாகும் திருவரங்குளம்.

அமைவிடம்

திருவரங்குளம் புதுக்கோட்டையிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.

சிறப்பு

இப்பகுதியில் தொல்பழங்காலத்தைய நுண்கற்கருவிகள் கிடைக்கின்றன. புதுக்கோட்டையிலுள்ள கோவில்களில் உயர்ந்த கோபுரத்தைக் கொண்ட பெருமையுடையது அரங்குளநாதர், பெரிய நாயகி கோவிலாகும். பிற்காலச் சோழர்களால் கட்டப்பட்ட இக்கோவிலில், மூன்றாம் குலோத்துங்கனின் கல்வெட்டு உள்ளது. நூற்றுக்கால் மண்டபம், நட்சத்திர மண்டபம் மற்றும் சபா மண்டபம் போன்ற மண்டபங்கள் உள்ளன. இக்கோவிலின் இரண்டாம் கோபுரம் கங்கையரையர்களாலும், இராஜகோபுரம் பாண்டியர்களாலும் கட்டப்பட்டவையாகும். இக்கோவிலில் சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள் மற்றும் தொண்டைமான் மன்னர்கள் காலத்தைச் சார்ந்த சுமார் 65 கல்வெட்டுகள் உள்ளன. இக்கோவிலிலிருந்த நடராஜர் சிலை ஒன்று தில்லி தேசிய அருங்காட்சியகத்திலும், மற்றவை புதுக்கோட்டை அருங்காட்சியகத்திலும் உள்ளன. இவ்வூரில் இரும்பு உருக்கப்பட்டதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

மேற்கோள் நூல்

ஜெ.இராஜாமுகமது, 2004. புதுக்கோட்டை மாவட்ட வரலாறு சென்னை, அரசு அருங்காட்சியகம்.