கல் குருவி்

 

கல் குருவியை தெற்காசியாவின் பல பகுதிகளில் காணலாம். இந்தியாவில் கங்கை நதிக்கரைப் பகுதியிலும் ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் இந்தப் பறவை உண்டு.

ஸ்ரீலங்கா மற்றும் வங்காள தேசத்திலும் இந்தப் பறவை அதிகம்.

சற்றே நீண்டு வளைந்த சாம்பல் நிற அலகு. தலை உச்சியில் செம்பழுப்பு நிறம். அதன் பிறகு ஒரு வெள்ளைப் பட்டை. அதற்கும் கீழே கண் பகுதியை ஒட்டி ஒரு கரும்பட்டை. ஆரஞ்சு வண்ணக் கழுத்து. வெளிர் ஆரஞ்சு நிற உடல். சற்றே நீண்ட வெள்ளைக் கால்கள். இப்படிப் பார்ப்பதற்கு மிக அழகான பறவை.

சிறிய கூட்டமாக வாழும் பறவை. இந்தப் பறவைகளை விட உயரம் குறைவான புற்கள் உள்ள பகுதிகளில் வசிக்கும். புழு பூச்சிகளை விரும்பி உண்ணும். பறக்கும்போது சிறகுகளைப் படபடவென்று அடித்துக் கொள்ளும். சற்றுத் தாழ்வாகவே பறக்கும். தரையிறங்கும்போது சற்றே ஓடி நிற்கும்.

இவற்றின் கூடுகள் பெரும்பாலும் தரையிலேயே இருக்கும். புள்ளிகள் நிறைந்த 2 முதல் 3 முட்டைகள் வரை ஒரு சமயத்தில் இடும். குஞ்சுகள் வெளிவந்து ஒரு வாரம் வரை பெற்றோரின் கவனிப்பில் வளரும்.