நம்பிகுட்டுவனார்

முனைவர் இரா.காமராசு
உதவிப்பேராசிரியர்
இலக்கியத்துறை

ஓரு புலவர். குட்டுவன் என்ற பெயர் கொண்டு இவரைக் குட்ட நாட்டு அரசரான சேரர் மரபினர் எனக் கருதுவர். உ.வே.சா.வும், பி.நா.வும் (குறு, நற். பாடினோர் வரலாறுகள்) நம்பி என்ற சொல் ஆடவரிற் சிறந்தானைக் குறிக்கும். அவ்வகையில் நம்பி நெடுஞ்செழியன் என்றவாறு இவரும் நம்பிகுட்டுவனார் எனப் பெயர் பெற்றிருக்கலாம் என்பர். குறுந்தொகையில் இரண்டும் (109 243) நற்றிணையில் மூன்றும் (145, 236, 345) ஆக ஐந்து பாடல்கள் இவருடையன. பெரும்பாலும் நெய்தல் திணையைச் சிறப்பித்துப் பாடிய இவர், ஒரு பாடலில் (நற். 236) குறிஞ்சித் திணையையும் பாடியுள்ளார். தலைவன் அளவளாவி உடனிருக்கும் போதும் தலைவியின் நெற்றி பிறர் கண்டு அலர் கூறுமாறு வேறுபட்ட தன்மையைத் தோழி, அவன் சிறைபுறத்தே நிற்கையில், தலைவிக்குக் கூறுவாள் போல் அவனை வரைவு கடாவுவதையும் பிரிவிடை ஆற்றியிருக்குமாறு தோழி வற்புறுத்தும் நிலையில் தலைவி, ‘சேர்ப்பனை இனி, யான் நினையேன்’ என் கண்கள் துயில்வனாக என்று நெஞ்சழிந்து கூறுவதையும் இவர் குறுந்தொகைப் பாடல்களில் அமைத்துள்ளார்.

இரவுக்குறிகண் வந்து சிறைப்புறமாக நிற்கும் தலைவன் கேட்டு விரைவில் வரையுமாறு தோழி தலைவியின் களவொழுக்கத்தை அன்னை அறிந்தாளாகப் படைத்துக் கூறி வருந்துவதையும் இவர் பாடலிற் காணலாம் (நற்.145). தலைவன் வரையாமல் வந்தொழுக ஆற்றாமை மீதூர்ந்த தலைவி, சிறைப்புறத்தானாய் நிற்கும் அவன் கேட்குமாறு, தோழியிடம் “எனக்கு நோயும் மிக்கது; மெய்யும் வெப்பமுற்றது; இனி உய்யேன். அதனால் நீ அன்னையிடம் சென்று ‘அவர் மலையினின்று வரும் காற்று மெய்யிற் படுமாறு இவளை முன்றிலிலே கிடத்தினால் இவள் ஒருகால் உய்வாள்’ எனக் கூறு” என்று வேண்டுவதாக இவர் பாடியுள்ள நற்றிணைப் பாடல் (236) நயமானது. சிறுவெண்காக்கை கொட்டாவி விட்டார்போல் ஆம்பல் மொட்டவிழ்ந்து மலர்வதாக இவர் கூறும் உவமையும் (நற். 345) உணர்ந்தின் புறத்தகுவதொன்றாகும்.