|  
       துறையூர் ஓடைகிழார் துறையூர் ஓடைகிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். புறநானூறு 136 எண்ணுள்ள இவரது ஒரே ஒரு பாடலில் இவர் ஆய் வள்ளலைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இந்த ஆய் கடையெழு வள்ளல்களில் ஒருவன். ‘மரம் பிறங்கிய நளிச் சிலம்பில்,குரங்கு அன்ன புன்குறுங்கூளியர், பரந்து அலைக்கும் பகை’ என்னும் தொடர் கூளியர் யார் என்பதை விளங்கிக் கொள்ள போதுமானதாக உள்ளது. மரமடர்ந்த காடுகளில் கூளியர் வாழ்ந்தனர். அவர்கள் குரங்கு போல் குள்ளமானவர்கள் வழிப்போக்கர் கொண்டு செல்லும் பொருள்களை அவர்கள் கவர்ந்து கொள்வர். புலவர் உடுத்தியிருந்த உடை யாழின் பத்தரைப் போர்த்தியிருந்த துணிபோல் ஓட்டை பட்டிருந்ததாம். அதில் துணிப் பேன்கள் மேய்ந்து உடுத்தியவரைக் கடித்தனவாம். புலவரும் புலவரின் சுற்றத்தாரும் சரியாக உண்ணாமையால் உடல் மெலிந்து காணப்பட்டனராம். அவர்களின் கண்கள் நீர்க்குளமாகத் தோன்றியதாம். செல்லும் வழியில் கூளியரின் வழிப்பறிக் கொடுமையும் இருந்ததாம். ஆய் இத்தகைய எல்லாப் பகையும் அறிந்தவன் என்று எண்ணி அவனிடம் வந்து வாழ்த்தினாராம். ‘எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர், பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப’ என்று புலவர் ஆய் வள்ளலிடம் அறத்தின் விளைவை எடுத்துரைத்தார். எனக்கு ஒத்தது உனக்குத் தெரியும். அதை விடுத்து உன் தகுதிக்கு ஒத்தது எது என எண்ணிப் பார்த்து நல்க வேண்டும் என்றும் புலவர் வேண்டுகிறார். துறையூரில் பாயும் ஆற்றோடையில் படிந்துள்ள மணலின் எண்ணிக்கையைக் காட்டிலும் பல நாள் ஆய் வள்ளல் நலமுடன் வாழவேண்டும் என்று புலவர் வாழ்த்துகிறார் என்பன போன்ற கருத்துக்கள் துறையூர் ஓடைகிழாரின் பாடலில் இடம் பெறுகின்றன.  |