அருணாசலக் கவிராயர் முனைவர் இ.அங்கயற்கண்ணி
பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் இசைத்துறை அறிமுகம்: தமிழிசை மும்மூர்த்திகளுள் ஒருவராகத் திகழும் அருணாசலக் கவிராயர் இராமாயணத்தைக் கீர்த்தனை வடிவில் இயற்றித் தமிழிசைக்கு வளம் சேர்த்தவர். இவர் கி.பி. 1711 ஆம் ஆண்டு சிர்காழி வட்டத்தில் உள்ள தில்லையாடி என்ற சிற்றூரில் நல்ல தம்பிப் பிள்ளை - வள்ளியம்மை இணையருக்கு நான்காவது புதல்வராய் ப் பிறந்தார். இளமைப் பருவம்: இளமையிலேயே தருமபுர ஆதீனத்தில் தங்கி சமயக் கல்வியும், சைவ திருமுறைகளையும், தமிழ்ச் சாத்திரங்களையும், வடமொழியும் கற்றார். தம்முடைய முப்பதாவது அகவையில் திருமணம் செய்து கொண்டார். குடும்ப வாழ்க்கையை நடத்துவதற்குத் துணையாகக் காசுக்கடை தொழில் செய்து வந்தார். தாம் கற்ற கல்வியறிவைக் கொண்டு இலக்கியச் சொற்பொழிவுகள் ஆங்காங்கே நடத்தி வந்தார். குறிப்பாக கம்ப இராமாயணத்தையும், திருக்குறளையும் நன்கு ஆராய்ந்து இந்நூலின் பயனை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டி இசையுடன் சொற்பொழிவு நடத்தி வந்தார். இலக்கியப் படைப்புக்கள்: தருமபுர ஆதீனத்தில் அப்போதைய கட்டளைத் தம்பிரான் சிதம்பரநாத முனிவர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சீர்காழி மீது ஒரு பள்ளிப் பிரபந்தம் பாடினார். சீர்காழியிலேயே அதிக நாட்கள் தங்கி இருந்ததால் “சீர்காழி அருணாசலக் கவிராயர்” என்னும் பெயர் இவருக்கு நிலைத்தது. சீர்காழிப் புராணம், சீர்காழிக் கோவை, சீர்காழிக் கலம்பகம், காழியந்தாதி, அசோமுகி நாடகம், தியாகேசர் வண்ணம், சம்பந்தர் பிள்ளைத் தமிழ், அனுமார் பிள்ளைத்தமிழ், இராம நாடகக் கீர்த்தனை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். இவற்றுள் இராம நாடகக் கீர்த்தனையே இவருக்கு அழியாப் புகழை ஈட்டித் தந்தது. ஆதரித்த வள்ளல்கள்: தஞ்சையில் துளஜா மகாராஜர், புதுவை முதலியார், உடையார்பாளையம் யுவரங்க உடையார் ஆகியோர் இவரை ஆதரித்த செல்வந்தர்கள் ஆவார்கள். இவர்கள் முன்னிலையில் இராமநாடகச் சொற்பொழிவு செய்து பல பரிசுகளையும் சிறப்புகளையும் பெற்றார். மறைவு: இவ்வாறு தமிழுக்கும், இசைக்கும் அருந்தொண்டு செய்துள்ள அருணாசலக் கவிராயர் சீர்காழியில் கி.பி. 1778 ஆம் ஆண்டு இறைவனடிச் சேர்ந்தார். |