கானாப் பாட்டு

முனைவர் சி.சுந்தரேசன்
துறைத்தலைவர்
நாட்டுப்புறவியல் துறை

சென்னை நகரிலுள்ள குப்பங்களில் வாழும் மக்கள் இக்கலையை நடத்தி வருகின்றனர். குப்பத்தில் நடைபெறும் இறப்புச் சடங்கிற்காகப் பாடக்கூடிய பாட்டு கானாப் பாட்டு. இது அம்மக்களின் கூட்டு வெளிப்பாட்டை, படைப்பாற்றலை உணர்த்துகிறது.

இப்பாடல்கள் நிகழ்த்தப்படும் இடம் குடிசைப் பகுதிகள் என்பதால் அதற்கேற்ப இக்கலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் இழவு வீடுகளில் பத்து அல்லது பதினொறாவது நாள் அல்லது பதினாறாவது நாள் நடைபெற இருக்கும் சடங்குகளுக்காக இரவில் கண் விழித்துக்கொண்டு கானாப்பாட்டு பாடப்படுகிறது. தொழிலாக இருக்கக்கூடிய கானாப் பாடகரை அழைத்துச் சென்று, மேடை போட்டு, ஒலி எழுப்பி, நிகழ்த்தச் செய்தல் பரவலாகச் சென்னை நகரின் குடிசைப் பகுதிகளில் வழக்காக உள்ளது.

இக்கலைக்கு முக்கியமான கருவி டோலக். மேலும், தகர டப்பா, குடம் போன்று கையில் கிடைக்கும் பொருட்களில் தாளமிசைத்துக் கொண்டே பாடல்களைப் பாடுவார்கள் இக்கலைஞர்கள்.

இச்செயல்கள் மிக இயல்பாக நடக்கக்கூடியவை. பாடுபவர்கள் புதிது புதிதாகப் பாடல்களைப் புனைந்து பாடுவது கானாப் பாட்டின் தனித் தன்மையாகும். இறந்தவர்களின் வரலாற்றைத் திரைப்படப் பாடல்களோடு மெட்டெடுத்துப் பாடுவார்கள். தற்காலத்தில் கானாப் பாடல்கள் பல புது வடிவங்களைப் பெற்றுள்ளன.

குப்பத்து மக்கள் தங்களுடைய வாழ்க்கைச் சிக்கல் பற்றியும், உழைப்பு முறைகள் பற்றியும், தாங்கள் பயன்படுத்தும் போதைப் பொருட்கள் பற்றியும், தங்களுடைய அரசியல் தலைவர்கள் பற்றியும், தாங்கள் பார்க்கும் திரைப்படங்கள் பற்றியும், குடும்ப உறவுகள் பற்றியும், சிறைக் கொடுமைகள் பற்றியும் கானாப் பாடல்களில் அமைத்துக்கொள்வர்.

சென்னை நகரில் வாழ்ந்த தலைவர்களின் சிறப்புகளையும் அவர்களுடைய சமாதிகளையும் பற்றிய ஒரு கானாப்பாட்டு,

சென்னை நகரிலே சிறப்புடன் வாழ்ந்த
தலைவர்கள் நினைவாலயம் – நாம்
சென்று அதைப் பார்த்து வருவோம்
படிக்காத மேதை பாரில் உயர்ந்த தலைவர்
கர்மவீரர் காமராஜின் நினைவாலயம்
சென்னை பார்க்கிலே அவர் துயிலும் இடத்திலே
மலர்தூவி வணங்கிடுவோமே நாம்
ஈரோட்டு சிங்கம் வெண்தாடி வேந்தர்
பகுத்தறிவு தந்தையின் நினைவாலயம்

வாழ்க்கையில் கவலைப்படக்கூடாது, வாழ்க்கை மகிழ்ச்சியானது என்று போதிக்கப்படுகின்ற பாடல்.

அலோ நண்பர் அம்மா
எப்படி சவுக்கியம்
ஆமா கண்ணு நானும்
எப்பவும் சவுக்கியம்
காலம் நில்லாது கவலை கொள்ளாதே
வாழ்க்கை ஜாலிதான் வாழ்ந்து பாரடா
அழகான சிட்டபாத்து மனசு ஏங்கி நிக்காதே
அதுக்காக காசு பிராண்டி குடித்து போதை ஏத்தாதே
வேணா மச்சி சொன்னாக் கேளு
வீணாக மனசு கெட்டு போதையிலே ஆடாதே.

சாராயத்தின் சிறப்பினை வேறொரு பாட்டு.

சாராயண்ணா சாராயம் – இது
நாட்டுச் சரக்கு சாராயம்
வேலம்பட்ட வெல்லக்கட்டி
போட்டு காய்ச்சிய சாராயம்
குடிக்கும்போது பச்சதண்ணி போலிருக்கும் சாராயம்
தொட்டுக்கொள்ள ஊறுகாயும் மிளகாபச்சியும் தாராளம்
கொஞ்ச நேரம் ஆனவுடன் பூமி ஒலகம் சுழலுமே – நீ
நடக்கும் போது மனசெல்லாம் ஆசையிலே தவிக்குமே

காதலை மையப்படுத்தி பாடுகின்ற பாடல்.

“கண்ணிமைக்கும் நேரத்திலே
காதல் கொண்டேனடி
கற்கண்டு நீ கையில் வந்தா
கடிச்சே திம்பேனடி”

விவசாயி செய்யும் மக்கள் உழவு உழுவதைப் பற்றி ஒரு கானாப் பாடல்,

“நாடு சும்மா கெடந்தாலும் கெடக்கும்
பாலு நாகரிகம் ஓடி வந்து கெடுக்கும்
நாடு சும்மா ……..
காலையில் எழுந்தவுடன் உழவு உழ போனதெல்லாம் அப்போ
இப்போ காப்பியத்தா குடுச்சிபுட்டு பரக்குலையும் உழவுறாங்க இப்போ”

மீனவர்களின் திருமண நிகழ்ச்சிகளில் பாடப்படும் பாடல்,

“வாலை மீனுக்கும் விலாங்க மீனுக்கும் கல்யாணம்
அந்தக் கொன்னாஞ்சேரி கூட்டமெல்லாம் ஊர்க்கோலம்
நடுக்கடலில் நடக்குதப்பா திருமணம்
அந்த அசுரப்பொடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்”

இப்போது பொது மேடைகளில் கானாப் பாட்டு பாடும் வழக்கமும் காணப்படுகிறது. தமிழ்த் திரைப்படங்களில் கானாப் பாட்டு சிறப்பிடம் பெறுகிறது.