முத்துத்தாண்டவர்

முனைவர் செ.கற்பகம்
உதவிப் பேராசிரியர்
இசைத்துறை

காவிரி வடகரைத் தலங்களுள் ஒன்றாகவும், திருஞானசம்பந்தர் அவதரித்து தலமாக விளக்குவது சீகாழியாகும். இத்தலம் சிறந்த பாடல் பெற்ற தலமாகும். இத்தகு சிறந்த தலத்தில் முத்துத்தாண்டவர் அவதரித்தார்.

பிறப்பு:

சீகாழி தலத்துள் கி.பி. 1525-1625க்கும் இடைப்பட்ட காலத்தில் இசை வேளாளர் குடியில் முத்துத்தாண்டவர் பிறந்தார். இவரது இயற்பெயர் தாண்டவர் என்பதாகும். இவருடைய பெற்றோரைப் பற்றிய குறிப்புக் காண இயலவில்லை. இசைக் கலையை நன்கு அறிந்தவராக விளங்கினார். இவர் மிருதங்கம் வாசிக்கும் கலையை அறிந்தவராக விளங்கினார்.

உடற்பிணி:

தாண்டவனுக்கு முற்பிறவியில் செய்த தீவினையின் காரணமாக தீராத வெப்பு நோய் என்ற தீராத வயிற்றுவலி ஏற்பட்டது. தன்னுடைய தொழிலையையும் விட்டு, நாள்தோறும், தோணியப்பர் ஆலயத்தில் இறைவனையும், அம்மனையும் இசையால் வழிபாடு செய்தார். ஒருநாள் மாலையில் உணவின்றிப் பசியால் களைப்புற்ற தாண்டவன் கோவிலில் உள்ள வாகன அறையில் படுத்து உறங்கிவிட்டார். நள்ளிரவில் விழித்தபோது கோவில் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தை அறிந்து, அம்மன் கருவறைச் சென்றார்.

முத்துத்தாண்டவன் ஆதல்:

அம்மனிடம் சென்று தேவார, திருவாசகப் பதிகங்களைப் பாடியபோது, அம்மன் கோவில் குருக்களின் பத்து வயது பெண் போல ஒரு கிண்ணத்தில் அமுது கொண்டு வந்தார். அவரின் துயரம் தீர இந்த அண்ணத்தை உட்கொள் என்றார். அதை வாங்கி உண்ட பிறகு, அவரது பசியும் நீங்கியது. முத்துத்தாண்டவர் அம்மையை நோக்கி என் உடற்பணி நீங்க வழிச்சொல்லுங்கள் என்ற போது, அம்மை நீ தில்லைக்குச் சென்று இறைவனைப் பாடி வழிபடு உன் உடற்பிணி நீங்கும் என்றாள். கல்வி அறிவு இல்லாத நான் எவ்வாறு இறைவனை வாழ்த்திப்பாடுவேன் என்றார். அதற்கு அம்மையார், அடியவர் கூட்டத்தில் பாடும் பாடலில் எந்தச் சொல் உன் காதில் விழுகின்றனவோ, அதையை முதற் சொல்லாகக் கொண்டு பாடு என்று கூறி மறைந்துவிட்டார்.
விடியற்காலையில் கோவிலைத் திறந்த போது, திருநிலைநாயகி ஆலயத்தில் முத்துத்தாண்டவர் முத்துப் போல நல்லொளி வீசுக்கொண்டிருப்பதைப் பார்த்தவர் இவரை “முத்துத்தாண்டவர்” என்று அழைத்தனர். அது முதல் “தாண்டவன்” முத்துத்தாண்டவன் ஆனார்.

தில்லை தரிசனம்:
முத்துதாண்டவர்

இறைவி கூறிய வாக்கிற்கிணங்க முத்துத்தாண்டவர் சீர்காழிக்கு வடதிசையில் உள்ள சிதம்பரத்திற்குச் சென்றார். அங்கு ஆடல் வல்லானை வழிபட்டுக் கொண்டிருந்த போது, அடியவர் கூட்டத்திலிருந்து “பூலோக கயிலாச கிரி சிதம்பரம்” என்ற சொல் ஒலித்தது. அதனையே முதற்சொல்லாகக் கொண்டு, “பூலோக கைலாச கிரி சிதம்பரம் அல்லால் புவனத்தில் வேறு உண்டோ?” எனத் தொடங்கும் பவப்பிரியா இராகக் கீர்த்தனையைப் பாடினார். இதுவே இவரின் முதல் பாடலாக விளங்கியது. இப்பாடலைப் பாடி முடித்ததும் இவரைப் பிடித்திருந்த வெப்பு நோயும் நீங்கியது. அது முதல் இறைவனது அடியார் கூட்டத்திலிருந்து வெளிப்படும் சொல்லை முதற்சொல்லாகக் கொண்டு பாடல் இயற்றினார்.

படிக்காசு பெறுதல்:

இறைபுகழ்பாடி ஆலயவழிபாடு செய்பவர்களுக்கு இறைவன் இக உலகத் துன்பங்கள் நீங்கிட படிக்காசு வழங்கும் வரலாறுகள் பல உள்ளன. திருவீழிமிழலையில் திருஞானசம்பந்தருக்கும், திருநாவுக்கரசருக்கும் பஞ்சம் நீங்கிட இறைவன் படிக்காசு வழங்கினார். இவ்வாறு, முத்துத்தாண்டவர் முதல் கீர்த்தனையைப் பாடி முடித்ததும் திருக்களிற்றுப் படியில் ஐந்து பொற்காசுகளை இறைவன் வழங்கினார். அதேபோல் நாள்தோறும் இறைவன் இவருக்குப் படிக்காசு வழங்கியது சிறப்புடைய தொன்றாகும்.

இறைவன் தந்த சோதனை:

முத்துத்தாண்டவர் அடியார் கூட்டத்திலிருந்து எழும் முதல் சொல்லைப் பாடலாகப் பாடி வந்தார். ஒரு நாள் அடியவர் கூட்டத்திலிருந்து எந்த சொல்லும் வராததால் துடித்த தண்டவர், இது இறைவனின் செயல் என்று எண்ணி, “பேசாதே நெஞ்சமே” என்ற சூரியகாந்தம் இராகப் பாடலைப் பாடினார். அன்று முதல், அடியார் கூட்டத்திலிருந்து முதலடி பெறாமல், தானே பாடலைப் பாடினார். இதனை இவருக்கு உணர்த்தவே இறைவன் இத்திருவிளையாடலை நிகழ்த்தியுள்ளார்.

கொள்ளிடம் வழிவிட்டமை:

முத்துத்தாண்டவர் சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும்போது, கொள்ளிட ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது, இறைவனை நினைத்து, “காணாமல் வீணிலே காலம் கழித்தோமே” என்ற தன்யாசி இராகப் பாடலைப் பாடிய போது, கொள்ளிடம் அவருக்கு வழிவிட்டது.

அவரம் தீண்டுதல்:

முத்துத்தாண்டவர் நாள்தோறும் சிதம்பரம் சென்று வரும் பொழுது ஒரு நச்சுப்பாம்பு அவரைத் தீண்டியது. பாம்பையே அணிகலன்களாகக் கொண்டு விளங்கும் இறைவனை நினைத்து, “அருமருந்தொரு தனிமருந்து” என்ற பாடலைப் பாடியவுடன், அந்நஞ்சு நீங்கியது.

முக்திபேறு:

நாயன்மார் நால்வருள் மாணிக்கவாசகர் மீது பெரும் பக்தி கொண்டு வாழ்ந்தார். முத்துத்தாண்டவர் நாள்தோறும் சீகாழியிலிருந்து சிதம்பரத்திற்குச் சென்று இறைவனைப் பாடி வழிபடுவதை மேற்கொண்டிருந்தார். இத்தகைய நிலையில் தனது எண்பது வயது வாழ்வு முடிவடைய வேண்டும். யாரும் தன்னை வயதானவர் என்று இழிவுப்படுத்தக்கூடாது. அதனால், மாணிக்கவாசகர் ஆடல்வல்லானின் சோதியில் ஐக்கியப்பட்டது போல், தானும் ஐக்கியமாக வேண்டும் என்று “மாணிக்கவாசகர் பேறெனுக்குத் தரவல்லாயோ” என்ற பாடலைப் பாடினார்.

கீர்த்தனைகள்:

முத்துத்தாண்டவர் பல கீர்த்தனங்கள் இயற்றி இருந்தாலும் இவரின் 60 கீர்த்தனைகளே தற்காலத்தில் கிடைத்துள்ளன. இதனை அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் இசைத்துறைத் தலைவர் திருப்பாம்புரம் ந.சுவாமிநாத பிள்ளை இவற்றை சுரதாளக்குறிப்புடன் வெளியிட்டுள்ளார். அவற்றில் சில,

1. ஆராராசை – சங்கராபரணம் – மிச்ரசம்பை
2. ஆடிக்கொண்டார் – மாயாமாளவகௌளை – ஆதி
3. தெரித்தளவில் – லதாங்கி – மிச்ரசம்பை

நாட்டிய பதத்தின் தந்தை:

நாட்டிய உருப்படிகளில் வர்ணத்திற்குப் பிறகு ஆடப்படும் உருப்படியாகப் பதம் விளங்குகிறது. இது சிருங்காரச் சுவையை மையமிட்டு படைக்கப்பட்ட உருப்படியாகும். முத்துத்தாண்டவர் ஆடல்வல்லான் மீது காதல் கொண்ட நிலையில் தலைவி கூற்றாகவும், தோழிக்கூற்றாகவும் பல பதங்களை உருவாக்கியுள்ளார். அவற்றில் 25 பதங்கள் மட்டுமே தற்காலத்தில் கிடைத்துள்ளன. அவற்றில் சில,

1. அப்படி இப்படி செய்ததற்கு ஒப்பினன் – கல்யாணி – ஆதி
2. தெருவில் வாரானோ – கமாசு – ஆதி (திச்ரநடை)

இவ்வாறு, முத்துத்தாண்டவர் தமிழ்க் கீர்த்தனை ஆசிரியர்களில் முன்னோடியாகவும், தமிழ் பதங்களின் தந்தையாகவும் விளங்குகிறார். இவரின் பாடல்கள் இன்றும் இசைக் கல்லூரி, பல்கலைக்கழகங்களிலும், அரங்குகளிலும் முக்கிய இடத்தை வகித்து வருகின்றன.