ம.ப.பெரியசாமி தூரன் முனைவர் இரா.மாதவி உதவிப் பேராசிரியர் இசைத்துறை பெரியார் மாவட்டத்தில் ஈரோட்டை அடுத்துள்ள
மஞ்சக்காட்டுவலசு என்ற சிற்றூரில் 1908 ஆம் ஆண்டு செம்டம்பர் திங்கள் 26
ஆம் நாள் பழனி வேலப்பக் கவுண்டர் பாவாத்தாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப்
பெரியசாமி தூரன் பிறந்தார். தொடக்கக் கல்வியை மொடக்குறிச்சி என்ற சிறிய கிராமத்திலுள்ள
திண்ணைப் பள்ளியில் பயிலத் தொடங்கினார். உயர் கல்வியை ஈரோட்டிலுள்ள மஹாஜன
உயர்நிலைப் பள்ளியில் ஆறு முதல் பள்ளி இறுதி வரைப் பயின்று வந்தார். பின்பு
1926 ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை கணிதம் பட்டம் பெற்றவர்.
பள்ளி பருவத்திலேயே பாரதி பாடல்களையும், சுத்தானந்த யோகியார் பாடல்களையும்
மனப்பாடம் செய்து வந்தார். மணவாழ்வு : பெரியசாமி தூரன் அவர்கள் அருட்செல்வர் பொள்ளாச்சி
டாக்டர் நா.மகாலிங்கம் அவர்களின் சகோதரியான காளியம்மாள் என்பவரை மணந்தார்.
சாரதாம்பாள், வசந்தா, விஜயவல்லி ஆகிய மூன்று மகள்களும், சுதந்திரக்குமார்
என்ற மகனுக்கு நற்தந்தையானார். தூரனின் படைப்புகள் : கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் சிறுவர் நூல்கள், மரபியல் நூல்கள், உளவியல் நூல்கள், பாரதியார் நூல்கள், நாட்டுப்பாடல், தமிழிசைப் பாடல், மொழிபெயர்ப்பு நூல்கள் ஆகியவையாகும். இசை பங்களிப்பு : பெரியசாமி தூரன் பாடல்கள் இயற்றுவதில் தனித்திறன்
பெற்றதோடு, தென்னக இசைதனை அதற்கே உரிய சிறந்த பண்புகளைக் கொண்ட பாடல்களைப்
படைத்துள்ளார். பல்லவி, அநுபல்லவி, சரணம் முதலிய பகுதிகளைச் சிறப்பாக அமைப்பதில்
வல்லவர். இவருடைய பாடல் புதிது, சொல் புதிது, கவிதை புதிது, தத்துவம் புதிது,
கருத்துக்கள் புதிது, வளம் புதிது இவற்றைக் கேட்டு மக்கள் கனிவது இவருடைய
பாடலின் தனித்திறனாகும். கர்நாடக இசையில் முன்னணி வித்வான்கள் அனைவரும் தூரன்
பாடல்களைக் கச்சேரிகள் பாடுவதற்கான காரணங்கள் பக்தி சுவையும், உணர்ச்சி மிக்க
இராகங்களின் வெளிப்பாடும் ஆகும். இவருடைய கீர்த்தனைகள் சிவன், சக்தி, முருகன்,
கண்ணன் விநாயகப்பெருமான் போன்ற பல தெய்வங்களை நினைத்துருக பல பாடல்களை பாடியிருக்கிறார். இயற்றிய பாடல் வகைகள் : இசை உறுப்பு வகைகள் நூற்றுக்கணக்கான கீர்த்தனங்களையும், கீதம், வர்ணம், பதவர்ணம், பதம், ஜாவனி, தில்லானா, விருத்தம், காவடிச் சிந்து, இராகமாலிகை போன்ற இசை வடிவங்களில் பாடல்கள் இயற்றியுள்ளார். தூரன் பெற்ற விருதுகள் : 1968 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று “பத்மபூஷன்”
விருது, 1979 தமிழ்நாடு அரசு இயல் இசை நாடக மன்றம் “கலைமாமணி” விருது, தமிழக
அரசு அதே கண்டு “செந்தமிழ் செல்வர்” என்ற பட்டம் 1979 ஆம் ஆண்டு சென்னை எழுத்தாளர்
சங்கம் “பாரதி தமிழ்” என்னும் இவரது நூலுக்காகத் “தங்கப்பதக்கம்” மதுரை காமராசர்
பல்கலைக்கழகம் 1979 இல் “தமிழ் பேரவைச் செம்மல்” சென்னைத் தமிழிசைச் சங்கம்
“இசைப் பேரறிஞர்” பட்டம், 1971இல் தருமபுர ஆதினம் “செந்தமிழ்ச்செல்வர்” “தமிழ்ப்
பேரறிஞர்” என்ற வழங்கி சிறப்பித்தது. மறைவு : ம.ப.பெரியசாமி தூரன் அவர்கள் 1987 ஜனவரி திங்கள் 20 ஆம் நாள் இறைவனடி சேர்ந்தார். |