தஞ்சை நால்வர் – பொன்னையா முனைவர் செ.கற்பகம்
உதவிப் பேராசிரியர் இசைத்துறை கலை வளர்ச்சியில் தஞ்சைக்குத் தனி இடமுண்டு. தஞ்சையை ஆண்ட சோழ மன்னர்களும், நாயக்கர்களும், மராட்டிய மன்னர்களும் ஆடற்கலை வளர்ச்சிக்கு பேருதவி புரிந்தனர். மராட்டிய மன்னர் காலத்தில் வாழ்ந்தவர்கள் தஞ்சை நால்வர் ஆவர். இவர்கள் தற்காலத்தில் அரங்கில் ஆடப்படும் நாட்டிய வடிவங்களை வடிவமைத்துக் கொடுத்துள்ளனர். பிறப்பும், இசைக்கல்வியும்: தஞ்சையைச் சார்ந்த சுப்பராயன் என்பவரின் இரண்டாவது மகனாகத் தஞ்சை பொன்னையா 1804 ஆம் ஆண்டு தோன்றினார். இவர் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதரிடம் இசைப் பயிற்சி பெற்றார். இவர் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருத மொழிகளில் திறம் பெற்றவராக விளங்கினார்.
இசை அரங்கேற்றம்: பொன்னையாவுக்கும், அவரது சகோதரர்களுக்கும் முத்துசுவாமி தீட்சிதர் முன்னிலையில், சரபோசி முன் இசை அரங்கேற்றம் நடைபெற்றது. மாணவர்களின் இசைத் திறனைக் கேட்ட சரபோசி மன்னன் அவர்களுக்கு இசைக் கற்றுக்கொடுத்த தீட்சிதருக்கு ரூ 5000/= பணமுடிப்பை பரிசாகக் கொடுத்தார். பொன்னையாவும் சகோதரர்களும் இணைந்து, தம் குருவிற்குக் காணிக்கையாக “நவரத்தினமாலா” என்ற குருஸ்துதி இசைப் பாடலை அமைத்தனர். இப்பாடலில் “குருகுகா” என்ற முத்திரையை அமைத்து, தங்கள் குருவையும், குலத்தெய்வமான பெருவுடையாரையும் வணங்கி பாடினர். முத்திரை அமைப்புகள்: பொன்னையா தன்னுடைய பாடல்களில் குருகுகதாசன், குருகுக பக்தி, குருகுக மூர்த்தி போன்ற முத்திரைகளை கையாண்டுள்ளார். இவர் இயற்றிய “மாயாதீத ஸ்வரூபிணி” என்ற மாயாமாளவகௌளை இராகத்தில் அமைந்த பாடல் இவரின் முதல் பாடலாகத் திகழ்ந்தது. பொன்னையாவின் பன்மொழிப் புலமை: பொன்னையா இசை நாட்டியக் கலையில் சிறந்து விளங்கியதுடன் இயல் துறையிலும் சிறப்புப் பெற்றிருந்தார். இவர் மராட்டிய மன்னர் சரபோசியின் மீது பைரவி இராகத்தில் பதவர்ணம் இயற்றினார். அதில் “நீசாடி தொரலே தானி” என்ற பாடல் அடி மன்னர் மீது அறம்பாடுவது போன்றுள்ளது என்று ஒரு புலவர் கூற, பொன்னையா அவர்கள் தங்களுக்குச் சமமானவர் இல்லை என்ற பொருளை வெளிப்படுத்துவதாகக் கூறினார். இதன் மூலம் இவரின் இலக்கியப் புலமைப் புலப்படுகின்றது. நாட்டிய உருக்கள் அமைத்தல்: பரத நாட்டியத்தைப்பலரும் கற்றுணரும் வகையில் பயிற்சி முறைகளை அமைத்துத் தரும் பணியில் பொன்னையாவும், அவரது சகோதரர்களும் ஈடுபட்டனர். கர்நாடக சங்கீதத்திற்கான அடிப்படை முறைகளைப் புரந்தரதாசர் அமைத்துத் தந்தது போல, நாட்டியத்திற்கான அடைவு வரிசைகளை 120 ஆக வகுத்தனர். அரண்மனைக் கலைஞர்: தஞ்சை நால்வருக்கும் தஞ்சை சரபோசி மன்னருக்கும் ஏற்பட்ட மன வேறுபாட்டால் இந்நால்வரும் திருவனந்தபுரம் சுவாதி திருநாள் அரண்மனைக்குச் சென்றனர். பின்னர் சரபோசி மன்னர் அழைத்த போது பொன்னையாவும் சிவானந்தமும் தஞ்சை வந்தனர். வடிவேலு சுவாதி திருநாள் அவையிலே அரசவைக் கலைஞரானார். சிவபக்தர் : பொன்னையா ஒரு சிறந்த சிவபக்தர் ஒரு சமயம் சிவானந்தம் நோய் வாய்ப்பட்டு இருந்த போது, மனம் நொந்து தன் குலத்தெய்வமான பிரகன் நாயகி மேல், “ப்ருஹதம்பா” என்று தொடங்கும் சங்கராபரண இராகப் பாடலைப் பாடியவுடன் அவரின் நோய் குணமாகியது. இவரின் தெய்வ நம்பிக்கையும், இசைஞானமும் பொன்னையாவிற்குப் பெரும் புகழீட்டிக் கொடுத்தது. |