ஸ்பெஷல் நாடகம்

முனைவர் சி.சுந்தரேசன்
துறைத்தலைவர்
நாட்டுப்புறவியல் துறை

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய கலை வடிவமாக ஸ்பெஷல் நாடகம் காணப்படுகிறது. சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் குழு, ஆலந்தூர் இந்து டிராமா கம்பெனி, ஆரியகான சபா போன்ற குழுக்களால் தமிழகத்தில் நாடகக்கலை இருபதாம் நூற்றாண்டில் புத்துயிர் பெற்றது எனலாம்.

அந்தந்தக் குழுக்களில் பயிற்சி பெற்ற பிரபலமான நாடக நடிகர்கள் சேர்ந்து ஸ்பெஷல் நாடக வடிவத்தை உருவாக்கினார்கள். பின்பு நடிகர் நடிகையர்கள் ஒருவரோடு ஒருவர் வெவ்வேறு இடங்களில் மாறி மாறி இணைந்து நடிப்பது இந்நாடகத்தின் இயல்புகளுள் ஒன்றாகும்.

குறிப்பிட்ட ஊரில் நாடகம் நடத்துவதற்கு அவ்வூர் மக்கள் எந்தெந்த நடிகர்களை விரும்பி அழைக்கிறார்களோ அவர்களாக வந்து நாடகத்தில் நடிப்பார்கள். நாடகத்திற்கென்று தனியாக ஒத்திகை ஏதும் நடைபெறாது. கலைஞர்கள் பாடல்களையும் வசனங்களையும் சூழ்நிலைக்கேற்ப நிகழ்த்துவார்கள். நடிகர்கள் எல்லோருக்கும் எல்லா நாடகங்களும் தெரிந்திருந்தால் தான் ஸ்பெஷல் நாடகத்தில் நடிக்க முடியும். அவரவர்கள் கற்ற வித்தையின் மூலம் ஒருவரை ஒருவர் வெல்லும் நோக்கத்தில் நிகழ்ச்சியைப் பேசியும் பாடியும் நிகழ்த்துவார்கள்.

நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் ஸ்பெஷல் நாடகங்களுக்கு மிகுந்த செல்வாக்கு உண்டு. பிற நாடகங்கள் போல் அல்லாமல் ஸ்பெஷல் நாடகங்களில் திரைக்காட்சிகள் அதிகம் இடம் பெறுவதில்லை. முகப்புத் திரை, வீட்டுத்திரை, வீதித்திரை, காட்டுத்திரை என மிகக்குறைந்த திரைகளே பயன்படுத்தப்படுகின்றன.

மக்கள் எல்லரருக்கும் தெரிந்த கதைகளே ஸ்பெஷல் நாடகங்களில் இடம் பெறுகின்றன. வள்ளித் திருமணம், அரிச்சந்திரா, சத்தியவான் சாவித்திரி, கோவலன் கதை, அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி போன்ற கதைகள் இப்பொழுது மக்களிடையே செல்வாக்குப் பெற்றுள்ளன.

சிறந்த நாடகக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பாடல்களும் வசனங்களுமே ஸ்பெஷல் நாடகத்தில் இடம் பெறுகின்றன. மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தேச பக்திப் பாடல்கள், சீர்திருத்தப் பாடல்கள் ஆகியவையும் மேடையில் பாடுவதுண்டு. நடிகர்களுடன் இசைக்குழுவினர், அரங்க வடிவமைப்பாளர்கள், ஒப்பனைக்காரர்கள் ஆகியோர் குழுவாக இணைந்து செல்வார்கள்.