நா.கதிரைவேற் பிள்ளை

(1844 – 1907)

முனைவர் த.கலாஸ்ரீதர்
உதவிப்பேராசிரியர்
ஓலைச்சுவடித்துறை

இவர் யாழ்ப்பாணத்துப் புலோலியூரில் பிறந்தவர். தந்தையார் பெயர் நாகப்பிள்ளை. இவர் வடமொழி தென்மொழி பயின்றவர். சொற்பொழிவாற்றுவதில் சிறந்து விளங்கினார். அட்டாவதானம் செய்தவர். அத்துவித சித்தாந்த மதோத்தாரணர் என்னும் பட்டம் சூட்டப் பெற்றார். இவரது மாணவரான திரு.வி.க. இவரைப் பற்றிய வரலாற்றை எழுதியுள்ளார்.

பதிப்பு நூல்கள்

கதிரைவேற் பிள்ளை கூர்மபுராண சிவபுராண விரிவுரை, பழநித் தல விரிவுரை முதலிய உரை நூல்களையும், சைவசந்திரிகை, சைவசித்தாந்தச் சுருக்கம், சிவாலய மகோற்சவ விளக்கம், கருவூர் மான்மியம், கதிர்காமக் கலம்பகம் முதலிய நூல்களையும் எழுதி அச்சிட்டுப் பதிப்பித்துள்ளார். இவர் தமிழ்ப் பேரகராதியைத் தொகுத்து அச்சிட்டுள்ளார். இதற்கு யாழ்ப்பாண அகராதி என்றும் பெயர்.

ஆறுமுக நாவலர்க்குப் பின் ‘அருட்பா’விற்கு மறுப்புத் தெரிவித்துக் கட்சி கட்டி ‘மருட்பா மறுப்பு’ என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். மேலும் புத்த மத கண்டனம் எனும் வெளியீட்டையும் அச்சிட்டுள்ளார். சுப்பிரமணிய பராக்கிரமம் (1910) என்ற இவர் நூலை பி.நா.சிதம்பர முதலியார் தமது வித்தியாரத்நாகர் அச்சுக்கூடத்தில் அச்சிட்டுள்ளார்.