ஆடல்வல்லான் சிவனின் கோல அமைதிகள் அதன் இயல்பு நிலைக்கேற்ப மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன, இவை முறையே, சௌமியம் என்று கூறப்படும் அமைதி திருக்கோலம், சம்ஹாரம் என்று கூறப்படும் அழிவுத் திருக்கோலம், நிருத்தக்கோலம் என்று கூறப்படும் நாட்டியக் கோலங்கள் ஆகியவை ஆகும். இவற்றில் நிருத்தக்கோலம் என்று கூறப்படும் நாட்டியக்கோலம் என்பது இந்துமத நம்பிக்கையின் அடிப்படையில், வழிபாட்டு அடிப்படையில் கலை என்ற நிலையிலும் மிகவும் சிறப்புப் பெற்ற கோலமாகும். பொதுவாக நடராஜர் என்று அழைக்கப்படும் இக்கோலம் தமிழில் ஆடல்வல்லான் ( நாட்டியத்தில் திறன் பெற்றவர் ) என்ற வகையில் அழைக்கப்படுகிறது. பரதமுனிவர் எழுதிய நாட்டிய சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ள 108 கர்ணங்களுள் சிவனால் ஆடப்பட்டவை என்று கூறப்படுகிறது, சிவதாண்டவ நடராஜர் படிமம் கோபுர நுழைவாயில் இருபுறங்களிலும் 108 கர்ணங்களின் சிற்றுருவச் சிற்பங்கள் அக்கர்ணத்தின் பெயருடன் அமைக்கப்பட்டுள்ளன
வரலாறு: தமிழகத்தில் நாட்டியம் குறிப்பாகச் சிவனின் நாட்டியம் தொடர்பான இலக்கியச் சான்றுகள் என்பது கலித்தொகையிலும் சிலப்பதிகாரத்திலும் இடம்பெற்றுள்ளது. சிலப்பதிகாரத்தில் சிறுவன் ஒருவன் சேரமன்னன் செங்குட்டுவன் அவையில் கொட்டிச்சேதம், கொடுகொட்டி என்னும் நாட்டியப் பெயருடன் ஆடிய செய்தி இடம் பெற்றுள்ளது. இதில், நடனத்தை அரங்கேற்றிய அச்சிறுவன் தனது உடலில் வலப்பகுதியில் ஆண்களுக்கு உரிய அலங்காரமும், இடப்பகுதியில் பெண்ணுக்குரிய அலங்காரம் செய்து நடனம் ஆடினான். இது அர்த்தநாரி என்ற சிவனின் தோற்றத்திற்கு முன்னோடியாக அமைகிறது. இதுபோன்று பாண்டுரங்கன் என்னும் நாட்டியம் அந்நாளில் புகழ்பெற்று இருந்ததை இலக்கியச் சான்றுகள் வாயிலாக அறிய முடிகிறது. கி.பி 350-400க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த நல்லாத்துவனார் தமது படைப்பான கலித்தொகையின் முன்னுரைப் பகுதியில் முதன்முதலாக சிவ நடராஜரைப் பற்றிய செய்திகளைத் தந்துள்ளார். பக்தி இலக்கியங்கள் பட்டியலில் மூவரின் தேவாரத்திலும், திருமூலரின் திருமந்திரத்திலும் சிவனின் நாட்டிய கோலங்கள். ஆனந்த தாண்டவம் உள்ளிட்டவை விளக்கப்பட்டுள்ளன. ஆனந்த தாண்டவம்: உலகம் முழுவதும் கோயில் தொடங்கி வரவேற்பறை முதல் வியாபித்திருப்பது ஆனந்த தாண்டவ கோலமாகும். இக்கோலம் தனக்கே உரிய கலை நிகழ்வினை அடிப்படையாகப் பெற்று வடிவம் பெற்றதாகும். தாருகாவனத்தில் சைவத்திற்கு புறம்பான மீமாம்ச முனிவர்கள் பலரும் சிவனை அழித்திடும் நோக்கில் வேள்வி ஒன்றினை மேற்கொண்டனர். அவ்வேள்வி குண்டத்தில் இருந்து புலி ஒன்று சிவனை அழிப்பதற்காக வெளிக்கொணரப்பட்டது. சிவன் தமது வல்லமையால் அப்புலியினை அடித்துப் புலித்தோலினைத் தமது இடை ஆடையாக்க் கட்டிக்கொண்டார். வேள்வி குண்டத்தில் இருந்து வெளிவந்த மானினை அடக்கித் தமதாக்கிக் கொண்ட சிவன் வேள்வியிலிருந்து வெளிவந்த மற்றொரு பொருளான சூலாயுதத்தைப் பூமியில் சொருகி அதன் வல்லமையை இழக்கச் செய்தார். வேள்விக் குண்டத்திலிருந்து மீமாம்ச முனிவர்கள் சிவனை அழிப்பதற்காக நிறைய பாம்பினை அனுப்பினர். சிவன் இந்நிலையில் பாம்புகளை அடக்கித் தம் அணிகலன்களாக மாற்றிக் கொண்டார். நிறைவாக அபஸ்மாறன் என்ற ஓர் அரக்கனை சிவனை அழித்திட வேகமாக அனுப்பியபோது, அவனைத் தமது காலால் மிதித்து, அவனை அழித்ததோடு மட்டுமின்றி அவன் மேல் நின்ற நாட்டியம் ஆடினார். இந்நாட்டியக் கோலமே ஆனந்த தாண்டவம் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கதை நிகழ்வு கோயில் புராணங்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. படிமக்கதை: ஆனந்த தாண்டவத்தில் படிமம் நான்கு கைகளுடன் அமைந்திருக்கும். இதில் இடதுகரம் தண்டஹஸ்தம் அல்லது கஜஹஸ்தம் என்ற அமைப்பில் உடலின் குறுக்காக கொண்டு வரப்பட்ட நிலையில் அமைந்திட வேண்டும். பின் இடது கரம் அக்னியை தாங்கியவாறு அமைக்கப்பட்டிருக்கும். முன் வலக்கை அபய முத்திரையுடன் பின் வலக்கை டமரு எனப்படும் உடுக்கையைத் தாங்கியவாறு அமைக்கப்பட்டிருக்கும். கைகளில் சர்ப்ப வளையம், கழுத்தில் சர்ப்பம் அமைந்திருக்கும். வலக்கால் சற்றே வளைந்து அபஸ்மாற புருஷன் மீது ஊன்றப்பட்ட நிலையில் இருக்கும். இடதுகால் உயர்த்தப்பட்டு வலது காலின் குறுக்காக அமைக்கப்பட்டிருக்கும். தலையில் ஜடாமகுடமும், கங்கையும் இடம் பெற்றிருக்கும். சில சிற்பங்களில் ஆடல்வல்லானின் இடது கால் நின்றநிலையில் உமாதேவி உருவம் அமைக்கப்பட்டிருக்கும். தத்துவப் பின்புலம்: ஆனந்த தாண்டவம் என்ற நடனம் தொடர்புடைய புராணப் பின்னணியை பெற்றுள்ள போதும் இத்தாண்டவத்தின் தத்துவ விளக்கங்கள் உண்மை விளக்கம் மற்றும் சிதம்பரம் மும்மணிக்கோவை ஆகியவற்றில் விளக்கப்பட்டுள்ளன. உண்மை விளக்கம் நூலி¢ல் ஆனந்த தாண்டவ கோலத்தில் பஞ்சகிருத்தியம் எனப்படும் ஐந்து வகைச் செயல்பாடுகளைத் தொடர்புபடுத்துகிறது. சிருஷ்டி என்றும் கூறப்படும் முதல் தொழில் ஆடல் வல்லான் படிமத்தில் மேல் கையில் இடம் பெற்றுள்ள உடுக்கையிலிருந்து உருப்பெற்றதாக விளக்குகின்றன. சம்ஹாரம் என்ற செயல்பாடு கையில் உள்ள அக்னியுடன் தொடர்புபடுத்துகிறது. காத்திடும் செயல்பாடு என்பது அபயமுத்திரையுடனும், மறைத்தல் என்னும் செயல்பாடு ஊன்றிய பாதத்துடனும், மீட்சி என்னும் செயல்பாடு தூக்கிய பாதத்தோடும் தொடர்புப் படுத்தப்படுகிறது. |