காளி இந்து மதத்தின் செவ்வியல் இறை குழுப்படிமங்களிலும் நாட்டுப்புற மத வழிபாட்டுகளிலும் காளி என்பது புகழ்பெற்ற ஓர் பெண் தெய்வமாகும். காளி என்ற பெண் தெய்வம் இந்து மதத்தில் நிலையான ஓர் பெண் சக்தி என்று கருதப்படுகிறது. காளி பெரும்பாலும் சிவனின் இணை என்ற நிலையில் வழிபடப்பட்டு வருகிறது. ஏனெனில் காளி என்பது காலா என்று அழைக்கப்படும் சிவனின் துணையாகும். காலா என்பது காலம் அல்லது இறப்புடன் தொடர்புபடுத்தப்படுகிறது. அவ்வகையில் நோக்கும் போது பொதுவாக காளி அழிவினைச் செய்திடும் சக்தி பெற்ற ஓர் பெண் இறை உருவமாகி கருதப்படும் போதும் காளன் என்ற பெயருடன் தொடர்புபடுத்தப்படும் நிலையில் காளி என்பது காலன் மற்றும் மாற்றங்களுக்குரிய ஓர் பெண் தெய்வமாகக் கருதப்படுகிறது.
தொன்ம மற்றும் வரலாற்று பின்னணி : கி.பி 7 ஆம் நூற்றாண்டைச்
சேர்ந்த பாணபட்டர் என்பவர் காதம்பரி என்ற நாடகத்தில் இந்தியாவின் தொன்மைக்
குடிகளான சபரர்கள் என்பவர்கள் காளியை வழிபட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வழிபாட்டில்
ஓர் வனத்தில் உயிர்ப்பலி கொடுக்கப்பட்டதாகக் குறிக்கப்பட்டுள்ளது. இது போன்று
பவபூதி என்பவரின் ‘மாலதி மத்வம்’ என்ற நாடகத்தின் நாயகியான மாலதியைக் காளி
அழைத்துச் சென்றதாக நாடகம் அமைக்கப்பட்டுள்ளது. அந்நாடகத்தில் பலியிடுவதற்கான
வழிபாட்டுச் செயல்முறைகளை விளக்கிடும் பவபூதி காளியின் உருவ அமைதிகளை தொகுத்துத்
தந்துள்ளார். தமிழ் இலக்கியங்களில் காளி : தமிழகத்தின் சங்க இலக்கியங்களில் காளி தொடர்பான செய்திகள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. திருமுருகாற்றுப்படையில் கூறப்பட்டுள்ள ‘பழையோள் குழவி’ என்பது காளியைக் குறித்திடும் சொல்லாக அமைகிறது. நச்சினார்கினியர் காளியைப் “பழையோள்’ என்று குறிப்பிட்டுள்ளார். அகநானூற்றில் இடம்பெற்றுள்ள “கானமர் செல்வி”யும் கலித்தொகையில் கூறப்பட்டுள்ள “பெருங்காற்று கொற்றை” என்ற சொல் காளியுடன் இணைப்படுத்தப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் கொற்றவை, அமரி, குமரி,கௌரி, அய்யை, சூலி, நீலி, கலையமர் செல்வி, விண்ணோர் பாவை போன்ற பெயர்கள் துர்க்கை மற்றும் காளியைக் குறிப்பிடுவதாகும். இருப்பினும் வழக்குரை காதையில் மதுரை மாநகர் சென்றடைந்த கண்ணகி, பாண்டியனின் அரண்மனையில் நின்ற காட்சியை வாயிற் காப்போன் கூறிடும் போது கண்ணகி என்ற பெண், துர்க்கை மற்றும் காளியைவிடச் சினம் கொண்டவளாக உள்ளாள் என்று கூறுவதாக அமைகிறது. இதன் வாயிலாக துர்க்கை மற்றும் காளி ஆகிய இரண்டிற்கும் ஒரு வேறுபாடு அமைந்துள்ளது என்பது புலப்படுகிறது. காளி என்பவள் சப்தமாதர்களில் இளையவள் என்றும், வனத்தில் உறைபவள் என்றும் சிலப்பதிகாரக் குறிப்புகளில் அறியமுடிகிறது. மேலும், இதில் சக்கரவாளக் கோட்டம் தொடர்பான செய்திகள் விளக்கப்படும் போது இடுகாட்டில் காளிக்காக ஓர் கோயில் அமைக்கப்பட்டிருந்தது என்றும், ‘காடமர் செல்வி’ என்ற பெயரும் சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது. பெரும்பாலும் இலக்கியங்களில் காளி, ‘மயான வாசினி’ என்று விளக்கப்படுகிறாள். கி.பி 11ஆம் நூற்றாண்டு மற்றும் கி.பி 12ஆம் நூற்றாண்டில் ஜெயங்கொண்டாரால் எழுதப்பட்ட கலிங்கத்துப்பரணி காளி புகழ் பாடும் இலக்கியமாக அமையப்பெற்றுள்ளது. கலையில் காளி : பல்லவர் மற்றும் சோழர் கலாத்தில் காளி மற்றும் துர்க்கைக்கு எனத் தனிக் கோயில்கள் உருவாக்கப்பட்டன. குறிப்பாக முதலாம் ஆதித்தன் காலத்தில் பழுவேட்டரையர்களின் பழுவூர் என்ற ஊரின் தென் பகுதியில் காளிக்கென்று தனிக்கோயில் உருவாக்கப்பட்டது. இதில் காளி எட்டு கைகளுடன் பீடத்தின் மீது அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. படிமத்தில் ஓர் கால் அரக்கனின் மீது ஊன்றப்பட்டு ஜீவாலா கேசத்துடன் காணப்படும் இப்படிமத்தின் கையிலுள்ள திரிசூலம் வீசப்படும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய சமகாலத்தில் திருவக்கரையில் காளியின் படிமம் வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக விஜயாலயன் காலம் தொடங்கி சோழர் கால ஊர்களின் எல்லைப் பகுதியில் காளிக்கென்று தனிக்கோயில்கள் எடுப்பிக்கப்பட்டு வந்துள்ளன. |