நாயன்மார்கள்

முனைவர் கி.கந்தன்,
துறைத்தலைவர்,
சிற்பத்துறை.

தமிழகத்தில் கி.பி 5 மற்றும் 6ஆம் நூற்றாண்டில் பௌத்த மதத்தைப் புறம் தள்ளி சைவம் வளர்ச்சி பெற்றது. இவ்வளர்ச்சி சைவ பிரிவைச் சார்ந்த நாயன்மார்களின் பங்களிப்பு என்பது சிறப்புடையதாகும். நாயன்மார்கள் என்ற சொல் தலைவன் என்ற வகையில் பொருள் கொள்ளப்படுகிறது. சைவத்தில் நாயன்மார்கள் என்போர் கி.பி 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தர மூர்த்தி நாயன்மாரின் திருத்தொண்டர் தொகையின் அடிப்படையில் அறுபத்து இரண்டு பேர்கள் ஆவர் என்று விளக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் சுந்தரரின் பெயர் இணைக்கப்பட்டு அறுபத்து மூன்று நாயன்மார்களாகக் கருதப்பட்டனர். கி.பி 1132க்கும் கி.பி 1150க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆட்சி செய்த இரண்டாம் குலோத்துங்கனின் காலத்தில் சேக்கிழார் பெரிய புராணத்தை இயற்றினார். இப்புராணத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு அவர்களின் பதிகங்கள் தொடர்பான அனைத்துச் செய்திகளும் இடம்பெற்றுள்ளது. அறுபத்து மூன்று நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார் என்பவர் காலத்தால் முந்தைய நாயன்மார் ஆவார். இருப்பினும் அப்பர் என்றழைக்கப்பட்ட திருநாவுக்கரசர் மற்றும் சம்பந்தர் என்று அழைக்கப்பட்ட திருஞான சம்பந்தர் காலத்திற்கு முன்னர் பதினான்கு நாயன்மார்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

திருமுறைகள் :

சைவ சமயத்தில் பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தரால் இயற்றப்பட்டன. பார்வதி தேவியிடமிருந்து ஞானப்பால் அருந்தி தோடுடைய செவியன் என்ற தேவாரப் பாடலைப் பாடியவர் ஆவார். இவர் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனின் சம காலத்தைச் சேர்ந்தவர் ஆவார். பன்னிரு திருமுறைகளில் நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் திருமுறை எனப்படும் தேவாரம் அப்பர் எனப்படும் திருநாவுக்கரசரால் இயற்றப்பட்டதாகும். இவர் திருஞானசம்பந்தரால் அப்பர் எனப் பெயர் பெற்றார். தர்மசேனர் என்ற இயற்பெயர் பெற்ற இவர் சூலை நோயால் அவதியுற்ற போது தமது சகோதரி திலகவதி சிவனை வழிபட்டதால், நோய் குணமாகியது. அதன் தொடர்ச்சியாகச் சிவன் இவரை நாவுக்கரசர் என்று அழைத்து தேவாரம் பாடச் பணித்தாகப் புராணங்களில் காணப்படுகிறது. இவர் பாடிய பதிகத்தால் திருமறைக்காடு என அழைக்கப்படும் வேதாரண்யம் கோயிலின் கதவு திறந்ததாக அவ்வூரின் தல புராணத்தின் வாயிலாக அறியமுடிகிறது.

கி.பி 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் அறுபத்து மூவரில் புகழ்பெற்ற நாயன்மார் ஆவார். இவர் இயற்றிய திருத்தொண்டர் புராணம் நாயன்மார்களின் வரலாற்றைக் கூறிடும் ஓர் கருவூலம் எனலாம். இவரின் திருமணத்திற்கு சிவன் தூது சென்றார் என்றும். இவர் தம்பிரான் தோழர் என்றும் அழைக்கப்பட்டதாக புராணங்களில் காணப்படுகிறது. சுந்தரர் தமது திருவெண்ணை நல்லூர் பதிகத்தில் சிவனை ‘பித்தா” என அழைத்து இறைவனின் நெருக்கத்தைப் பெற்றார் என விளக்கப்பட்டுள்ளது. மேலும், இவரும் கேரள மன்னன் சேரமான் பெருமாளும் திருக்கயிலாயம் செல்ல சிவன் தமது ரிஷப ஊர்தியை அனுப்பியதாகப் புராண நிகழ்வின் பதிவுகளில் காணப்படுகின்றன. மேலும் இந்நிகழ்வு, முதலாம் இராஜராஜனால், தஞ்சை பெருவுடையார் கோயிலில் கருவறையின் உட்புறச்சுவர் பகுதியில் சுவரோவியமாகத் தீட்டப்பட்டுள்ளது.

படிமக்கலை் :

கி.பி 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகர் என்ற நாயன்மார் திருவாசகம் மற்றும் திருக்கோவையார் ஆகியவற்றைப் படைத்தார். இவ்விரண்டும் பன்னிரண்டு திருமுறைகளில் எட்டாவது திருமுறையாகும். மேற்கூறிய மாணிக்கவாசர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் நாயன்மார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். சைவ ஆலயங்களில் காணப்படும் நாயன்மார்களின் படிமங்கள் மாறுபட்ட கலை அமைதியுடன் காணப்படும். இதில் அப்பரின் படிமம் முற்றிலும் மழிக்கப்பட்ட தலையுடன் கைகளை உயர்த்தி கூப்பிய நிலையில் அமைக்கப்பட்டும் ஞானசம்பந்தரின் படிமம் குழந்தை வடிவத் தோற்றத்துடன் வலது கையில் தாளக்கட்டையும், இடது கையில் கிண்ணமும் அமைக்கப்பட்டிருக்கும். சுந்தரமூர்த்தி நாயனாரின் படிமம் தலையில் முடிகளைச் கற்றையாக வைத்து கையில் ஓர் குச்சியை ஏந்திய நிலையில் அல்லது மழிக்கப்பட்ட தலையுடன் இரு கைகளையும் மார்பின் மீது ஒன்றன் மீது ஒன்றாக கிடத்திய நிலையில் அமைந்திருக்கும். மாணிக்கவாசகரின் படிமம் மழித்த தலையுடனோ அல்லது சுருட்டப்பட்ட தலை முடியுடனோ அமைக்கப்படும். வலது கை உபதேசிக்கும் முத்திரையுடனும் இடது கை ஓலைச் சுவடியை ஏந்திய வண்ணமாக அமைக்கப்படும்.

கி.பி 1046 ஆம் ஆண்டைச் சேர்ந்த சோழ மன்னன் இராஜராஜனின் திருவொற்றியூர்க் கல்வெட்டில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் படிமங்கள் நிர்மாணித்த செய்தி காணப்படுகிறது. திருவெண்காடு கல்வெட்டிலும் நாயன்மார்களின் படிமம் நிர்மாணித்த செய்தி உள்ளது. தேவாரம் பாடிய மூவரின் படிமம் எத்தகைய அளவில் அமைக்கப்பட வேண்டும் என்ற செய்தி தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் கல்வெட்டில் காணப்படுகிறது. இத்தகைய பின்னணியின் அடிப்படையில் நாயன்மார்களின் படிமங்கள் கி.பி. 11ஆம் நூற்றாண்டில் தமிழகக் கலை வரலாற்றில் தோற்றம் பெறத்தொடங்கியது.