உடற்சூடு

முனைவர் வா. ஹஸீனாபேகம்
பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
சித்த மருத்துவத்துறை

நாம் உண்ணும் உணவு செல்களில் ஆக்கச் சிதை மாற்றமடைந்து, உடல் இயக்கத்திற்குத் தேவைப்படும் ஆக்கச் சக்தியை அளிக்கின்றது. உடலின் உணவு ஆக்க சிதை மாற்றமடையும் நிலையில் 40% மட்டும் ‘ஏடிபி’ (ATP) ஆக்கச் சக்தியாகவும், மீதம் 60% உடலில் வெப்பமாகவும் மாறுதல் அடைகின்றது. இவ்வாறாக உற்பத்தியாகும் வெப்பம், நுரையீரல் வழியாகவும் தோல் மூலம் வியர்வையாகவும் வெளியேற்றம் அடைந்து உடலில் சீரான வெப்ப நிலை இருக்க உதவுகின்றது.


ஆனால் கடின உழைப்பு, அளவிற்கு அதிகமான உணவு உட்கொள்ளும் நிலை, தைராய்டு சுரப்பு மிகுந்த நிலையிலும் உடலில் சூடு அதிகரிக்கின்றது. இவ்வாறாக மிகு வெப்பம், சுற்றுப்புறச் சூழலுக்கேற்ப வெளியேற்றம் அடைகின்றது. வெயில் காலத்தில் வெளிப்புற வெப்பம் அதிகமாக இருக்கும் நிலையிலும், வியர்வையாக வெளியேறினாலும், முழுமையாகச் சூடு வெளியேறுவதில்லை.


இவ்வாறான நிலையில் உடலில் வெப்பம் மிகுந்து உடலுக்குச் சோர்வையும் அசதியையும் தரும். இதனைச் சரி செய்ய குளிர்ச்சி தரும் உணவுப் பொருட்கள் உட்கொள்ளுவது மிகவும் அவசியம். இதில் இளநீர் மற்றும் நீர் சத்து கொண்ட பழங்கள் காய்கறிகள் உட்கொள்ளுவது நல்லது.


உடற்சூடு குறைவதற்கு, நல்லெண்ணெய் சிறந்த உணவாகப் பயன்படுத்தப்படுகின்றது. எண்ணெய் தேய்த்துக் குளித்தல் உட்சூட்டைக் குறைக்கும் என்றும், உணவில் நல்லெண்ணெய் சேர்த்தல் உடல் வெப்பத்தைத் தணித்து, குளிர்ச்சி அளிக்கும் என்பதை மிகுந்த நம்பிக்கையுடன் நம் மக்கள் பயன்படுத்தி வந்தனர்.


ஆனால், இன்று இவ்வாறான பழக்கவழக்கங்கள் குறைந்து விட்டதால் உட் சூட்டில் ஏற்படும் பிணியின் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாகப் பெண்களுக்கு இதன் பாதிப்பு அதிகம். எனவே, நல்லெண்ணெய் பயன்படுத்துவது மிகவும் அவசியமாகும்.


எள்ளெண்ணெய் மிகச் சிறந்த காய கல்பமாகச் செயல்படுவதை அறிவியலார் கண்டறிந்டுள்ளனர். இதற்குக் காரணம் இவ்வுணவுப் பொருளில் உள்ள வேதிமப் பண்புகள் ஆகும். தனித்த அயனிகளை அழிக்கும் ஆற்றல் கொண்ட எள்ளெண்ணெய் ஆரோக்கியம் காக்கும் சிறந்த உணவாகும். எள்ளெண்ணெய் பயனுள்ள நுண்ணுயிரிகளைப் பெருக்கமடையச் செய்கின்றது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.


மேற்படி நுண்ணுயிரிகள் சீரான உடல் ஆரோக்கியம் காக்கவல்லன என்பது தெளிவு. மேலும் பெண் உள்ளங்கால், உள்ளங்கைகளில் மருதாணி இட்டுக் கொண்டால், உடல் சூட்டைத் தணிக்கப் பெரிதும் உதவும். எனவே உடலில் வேதிமச் செயல் மாறுபாட்டில் ஏற்படும் உஷ்ணத்தைக் குறைக்கக் குளிர்ச்சி தரும் உணவு மற்றும் பழக்கவழக்கங்களைப் பயன்படுத்தி மகிழ்வது அவசியமாகும்.