உமிழ்நீர்

முனைவர் வ.ஹசீனாபேகம்
பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
சித்த மருத்துவத் துறை

நமது வாயில் தினமும் 1.5லி அளவு உமிழ்நீர் சுரக்கப்படுகின்றது. இது உணவுப்பொருளான மாச்சத்தைச் சிதைக்க உதவும் ‘அமைலேஸ்’ நொதி கொண்டுள்ளது. உணவை மென்று தின்னும் போது சிறு மூலக்கூறுகளாகச் சிதைக்கப்பட்டு எளிதில் உறிஞ்சும் தன்மையை ஏற்படுத்த உதவுகின்றது. ‘நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்பதற்கான காரணப் பொருளாக ‘உமிழ்நீர்’ அமைகின்றது. உண்ணும் உணவு எளிதில் செர்மானமடையும் தன்மையை ஏற்படுத்துவதால் உடலுக்குத் தேவையான உணவு மூலப்பொருட்கள் கிடைக்கச் செய்து உடலின் சீரான செயல்பாடுகளுக்கு உதவுகின்றது.

உமிழ்நீரில் நோய் எதிர்ப்புக் காரணி மற்றும் நுண்ணுயிர் அழிப்பான்களாகச் செயல்படும் IgA, லேக்டோபெரின் மற்றும் லைசோசைம் லேக்டோபெர் ஆக்சிடேஸ் போன்ற நொதிகளும் உள்ளன.

நமது முகத்தில் தோன்றும் பருக்களுக்கு உமிழ்நீர் (எச்சில்) தொட்டு வைக்கச் சொல்லுவது பழமையான மரபு ஆகும். காரணம் மேற்படி வேதிமக் காரணிகள் அல்லது நொதிகள் பருக்களிலுள்ள சிதைவடைந்த புரதத்தை அழிக்கும் தன்மையுடையதால் எச்சில் தொட்டுத்தடவும் போது முழுவதுமாக மறைந்து விடுகின்றது. சுண்ணாம்புடன் எச்சில் சேர்த்து தேனீ அல்லது எறும்பு கடித்த இடத்தில் தடவினால், தேனீ கடித்ததால் ஏற்படும் எரிச்சல் மற்றும் வீக்கம் குறையும். காரணம் புரதச் சிதைப்பான்கள் இதில் இருப்பதே ஆகும். உமிழ்நீரில் 99.7% நீர் உள்ளது. இது 1.002 முதல் 1.008 அடர்த்தி கொண்டுள்ளது.

உமிழ்நீர் சுரப்பு நரம்பு மண்டலத் தூண்டுதலால் ஏற்படுகின்றது. உணவின் சுவை, அதன்மேல் ஏற்படும் பிரியம் உணவைப் பார்த்தவுடன் மிகுதியாகச் சுரக்கத் தூண்டப்படுகின்றது.