உழைப்பே ஆரோக்கியம்

முனைவர் வா. ஹஸீனாபேகம்
பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
சித்த மருத்துவத்துறை

உழைப்பு என்பதன் அறிவியல் விளக்கம் உடலின் தசைநார்களுக்கு வேலை கொடுத்தல் ஆகும். உடல் உழைப்பின் போது தசைநார்கள் / செல்கள் அதன் செயலாக்கத்திற்குத் தேவைப்படும் ஆக்க சக்தியை உடல் சேமிப்பு கொழுப்பிலிருந்து ஆக்க சிதை மாற்றத்தின் மூலம் பெறுகின்றன. அதாவது நாம் கடின உழைப்பு செய்யும் போது தசைநார்களில் மிகுந்துள்ள கொழுப்பு அமிலங்களைச் சிதைவடையச் செய்து அதனிலிருந்து சக்தி கிடைக்கச் செய்கின்றன. இதனால் உடலின் திசுக்களில் கொழுப்புத் தேக்கமடைவதோ அல்லது உடல்பருமன் ஏற்படுவதோ தடுக்கப்பட்டு உடல் வலிமை பெறுகின்றது.

அன்றைய நாளில் உழைப்பு தான் மனிதனின் கடமையாக இருந்தது. பெண்கள் வீட்டில் உட்கார்ந்து துணி துவைத்தல், அம்மியில் அரைத்தல், நீர் இரைத்தல் போன்ற வேலைகள் செய்து அவர்கள் உடல் ஆரோக்கியம் பெற்று வாழ்ந்து வந்தனர்.

ஆண்களும் நீண்ட தூரம் நடந்து சென்று வயல்களில் வேலை செய்து உடல் ஆரோக்கியம் காத்துவந்தனர்.

தசைத்திசுக்களுக்கு வேலை கொடுத்தல் உடல் ஆரோக்கியமான செயல் ஆகும்.

தசைத்திசுக்கள் நமது உடலின் மொத்த எடையில் 40% அளவு மிக அதிக எடை உடைய தனித்திசுக்களாக உள்ளன. இத்திசுக்களில் 75% அளவு நீராகவும், 20% புரதமாகவும் மற்றும் 5% தாதுக்களும் கொண்டுள்ளன.

தசைத்திசுக்கள் யூரியா போன்ற நச்சுப் பொருட்கள் வேர்வை மூலம் வெளியேற்றமடைய உதவுகின்றன. தசைத்திசுக்களுக்கான ஆக்க சக்தி அவற்றின் சேமிக்கப்படும் ‘கிளைக்கோஜன்’ என்ற பல் சர்க்கரை மாச்சத்திலிருந்து பெறப்படுகின்றன. மேற்படி மாச்சத்து குளுக்கோஸாக மாற்றமடைந்து உழைப்பின் போது தேவைப்படும் ஆக்க சக்தி அளிக்கின்றது.

மிதமிஞ்சிய கடின உழைப்பு அல்லது நீரிழிவு மற்றும் உடல் உழைப்பே இல்லாத நிலையில் ஆக்க சிதை மாற்றத்தினால் உற்பத்தியாகும். லேக்டிக் அமிலம் அதிகரித்து திசுக்களில் அமில நிலையை ஏற்படுத்தி சாதாரண நிலையிலிருந்து செல்களைப் புற்றுச் செல்லாக மாற்றமடையச் செய்கின்றது.

ஆனால் நல்ல ஆரோக்கிய நிலையில் தசைத்திசுக்களிலிருந்து லேக்டிக் அமிலம் கல்லீரலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு குளுக்கோசாக மாற்றமடையச் செய்து பின் செல்களின் பயன்பாட்டிற்கு உதவுகின்றது.

சாதாரணமாக நமது உடலில் இரண்டு லிட்டர் அளவு ஆக்சிஜன் உள்ளது என்றும், இதில் 0.5 லிட்டர் நுரையீரலிலும், 0.25 லிட்டர் திசுக்களின் இடையே காணப்படும் திரவத்தினுள்ளும், 1 லிட்டர் அளவு ஹீமோகுளோபின் உடன் பிணைத்தும், 0.3 லிட்டர் தசைத் திசுக்களினுள்ளும் காணப்படுகின்றன.

உடற்பயிற்சியின் போது கூடுதலான ஆக்சிஜன் சுவாசம் மூலம் பெறப்பட்டு உடலில் தேங்கும் லேக்டிக் அமில நிலையை வெகுவாகக் குறைக்கின்றன.

மேலும், விலங்கு உணவுகளில் உள்ள கார்னோசின் என்ற வேதிமப் பொருள் லேக்டிக் அமிலத்தின் அமில நிலையை மாற்றி உடலின் பொதுவான கார நிலையை அடைய உதவுகின்றது. எனவே சோம்பலாய் இருப்பவர்களுக்கு தசைத்திசுக்களில் மிகும் லேக்டிக் அமிலத்தின் மாமிச உணவில் உள்ள கார்னோசின் சீர் செய்து உடல் ஆரோக்கியம் காக்கும் கவசமாக விளங்குகின்றது.

வயதாகும் நிலையில் ஆண்கள் இன ஹார்மோன் ‘டெஸ்டோஸ்டீரோன்’ அளவு குறைகின்றது. இது இயற்கையாக நடக்கும் செயலாகும். இந்நிலையில் தசைத்திசுவில் உள்ள புரதம் வெகுவாகச் சிதைவடைந்து மெலிந்த தேகத்தை ஏற்படுத்துகின்றது. இது தசை வலுவிழத்தல் என்று அழைக்கப்படுகின்றது.

இதனைச் சீர் செய்ய புரதச் செறிவுடைய உணவு உட்கொள்ளுதல் அவசியமாகும். தசை வலுவிழத்தல் நிலையில் செல்களில் தனித்த அயனிகள் மிகுத்தலால் ஏற்படும் சிதைவைத் தடுக்க கரோட்டீன் மூலப்பொருட்கள் அடங்கிய நிறக் காய்கறிகள் உட்கொள்ளுதல் நல்ல பயனளிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் பச்சைக் காய்கறிகள் சாப்பிடும் போது அதிலுள்ள மெக்னீசியச் சத்து புரத வலுவிழத்தலைத் தடுத்து மனிதனுக்கு ஏற்படும் முதுமையின் தாக்கத்தைக் குறைக்கின்றது.

வயதாகும் நிலையில் ஏற்படும் தசை வலுவிழத்தலைச் சீர் செய்ய புரதச் செறிவு மற்றும் கரோட்டின் மிகுத்துள்ள வள்ளைக்கீரையை உணவாக உட்கொள்ளுவது, தசை வலுவிழத்தல் தாக்கத்தினைத் தடுக்கின்றது என்பது ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. குண்டானவர்களுக்கும் தசை வலுவிழத்தல் நிலை ஏற்படுகின்றது. அதாவது தசைநார் உறுதியில்லாமல் தொளதொளவென்று இருக்கும்.

இதனைச் சீர் செய்ய புளிக்க வைத்த உணவு உட்கொள்வது தசை மெலிதலைத் தடுத்துத் தசை இறுக்கத்தையும் வலுவையும் கொடுக்கின்றது என்றும் ஆய்வுகள் விளக்குகின்றன.

இவ்வாறாக உடல் உழைப்பு, தீய காரணிகளை உடலிருந்து எளிதாக வெளியேற்றுகின்றது. தசைநார்களுக்கு வலுவளிக்கின்றது. எனவே, தசைநார்கள் வலுவிழந்த நிலையில், புரதச் செறிவுடைய ஆரோக்கிய உணவுகள் அளித்து, உடலியக்கச் செயல்பாடுகளை சீராக வைத்துக்கொள்ளுதல் அவசியமாகும்.