3.0 பாட முன்னுரை
தமிழில் சிலப்பதிகாரத்திற்கு அடுத்துத் தோன்றிய ஒரு
தனித்தமிழ்க் காப்பியம் மணிமேகலை ஆகும். சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
தமிழில் இரட்டைக் காப்பியங்கள் என்று சிறப்பிக்கப்
பெறுகின்றன. மணிமேகலையின் ஆசிரியர் சீத்தலைச்
சாத்தனார். இக்காப்பியம் தமிழில் தோன்றிய முதல் பௌத்த
சமயக் காப்பியம்; முதல் தருக்கக் காப்பியமும் இதுவே.
பல்வேறு சமயச் சிந்தனைகளை எடுத்துக் கூறுவதுடன், பௌத்த
சமயக் கொள்கைகளை மிகச் சிறப்பாகப் போற்றுவதும்
இக்காப்பியமே. காலத்தாலும் பழமையானது. பல்வேறு கிளைக்
கதைகளைக் கொண்டு இலக்கியச் சுவைபடப் புனையப்பட்டுள்ளது. இது, கி.பி. இரண்டு அல்லது மூன்றாம்
நூற்றாண்டைச் சார்ந்ததாகும். சிலப்பதிகாரத்தில் சிறப்பிடம்
பெற்ற கோவலன்-மாதவி இருவரின் மகள் ஆகிய
மணிமேகலையின் துறவை மையமாகக் கொண்டு, அவள்
ஆற்றிய சமூகத் தொண்டினை எடுத்துரைக்கிறது. பல்வேறு
சமூக-சமய அறக்கருத்துக்களைக் கதைப் போக்கில் சுவைபட
எடுத்துரைக்கிறது. மீஇயற்கைப் (Super-natural)
பாத்திரங்களும், கடவுளர்களும் மிகுதியாக இடம் பெறும் முதல்
தமிழ்க் காப்பியமும் இதுதான். இந்தப் பெருங்காப்பியம் பற்றி
இப்பாடம் விளக்குகிறது.
|