4.0 பாட முன்னுரை
தமிழில் ஐம்பெருங்காப்பியங்களில் முதலில் வைத்து
எண்ணப்படுவது சீவக சிந்தாமணி. இது ஒரு
சமண சமயக் காப்பியம். இது, முதன் முதலில் விருத்தப்பாவில்
பாடப்பட்ட காப்பியம். கம்பர் ‘சிந்தாமணியிலிருந்து ஒரகப்பை
முகந்து கொண்டேன்’ என்று கூறியதாகப் பழைய பிரதி ஒன்று
குறிப்பிடுகிறது. இது இந்நூலின் சிறப்பினை
எடுத்துரைக்கும் அன்றோ? நூற்பொருளான அறம், பொருள்,
இன்பம், வீடுபேறு பற்றி இந்நூல் பேசுவதால் இதனை,
‘முடிபொருள் தொடர்நிலை’ என அடியார்க்கு நல்லார் என்ற
சிலப்பதிகார உரையாசிரியர் சிறப்பிக்கின்றார்.
சிந்தாமணியே கிடத்தியால் என்ற வரி இந்நூலில்
இடம்பெறுவதால் இதன் பெயர் சிந்தாமணி எனப் பெயர்
பெற்றது. பின் காப்பியத் தலைவன் சீவகன் பெயரையும்
இணைத்துச் சீவக சிந்தாமணி எனப் பெயர் பெற்றது. சீவகன்,
குணமாலை முதல் இலக்கணை ஈறாக எட்டுப் பெண்களை
மணந்ததாலும், மண்மகள் மற்றும் முக்தி மகள் ஆகியோரை அடைந்ததாலும் இந்நூலுக்கு
மணநூல் என்ற பெயரும் நிலை
பெறுவதாயிற்று.
|