4.1 சீவக சிந்தாமணி
சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய தமிழ்க்
காப்பியங்கள் தமிழ் மண்ணில் தோன்றிய பெண் மக்களைக்
காப்பியத் தலைமைப் பாத்திரமாகக் கொண்டிருக்க, இச் சீவக
சிந்தாமணி வடநாட்டு வேந்தனைக் காப்பியத் தலைவனாகக்
கொண்டு அமைகிறது. காப்பியக் கதை, கதை மாந்தர்கள்,
கதைக்களம் முதலானவை தமிழ் மண்ணுக்குச் சொந்தமல்ல;
இவை வடவர் மரபு; வடநாட்டார் மரபு; என்றாலும் காப்பிய
ஆசிரியர் தமிழர்; தமிழ் நாட்டைச் சார்ந்தவர். தம் சமயச் சார்பு
காரணமாக தன் சமயம் சார்ந்த வடமொழிக் கதையை எடுத்துக்
கொண்டு, கதைப் போக்கை மாற்றாமல், அதே நேரத்தில்
தமிழர் மரபு பிறழாமல் காப்பியத்தைப் புனைந்திருக்கின்ற திறன்
அருமையினும் அருமை. இதனால்தான் இக்காப்பியம், சோழர்
காலத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்ததாகச் சேக்கிழார்
புராணம் குறிப்பிடுகின்றது.
இன்றும் கூடத் தமிழ் அறிஞர்களால், தமிழ் ஆசிரியர்
மற்றும் மாணாக்கர்களால் பெரிதும் போற்றப்பட்டு
வருவதற்கான அடிப்படைக் காரணம் இதன் இலக்கியச்
சிறப்பும், தமிழ் இலக்கிய மரபுமே
என்றால் அது மிகையாகாது.
4.1.1 காப்பிய ஆசிரியர்
காப்பிய ஆசிரியர் திருத்தக்க தேவர். இவர், சமண
முனிவர். சோழர் குலத்தில் தோன்றியவர். வஞ்சி எனும் ஊரில்
இருந்த பொய்யாமொழிப் புலவரால் புகழப்பட்டவர். திருத்தகு
முனிவர், திருத்தகு மகா முனிவர், திருத்தக்க
மகாமுனிகள், தேவர் என்ற சிறப்புப் பெயர்களால்
சிறப்பிக்கப்பட்டவர். இவர், அகத்தியம், தொல்காப்பியம், சங்க
இலக்கியம் முதலான தமிழ் நூல்களைக் கற்றுத் தேர்ந்தவர்.
வடமொழிப் புலமை மிக்கவர். சமண சமய நூல்களைக் கற்றவர்.
அன்பு, அருள், வாய்மை, அடக்கம் ஆகிய நற்பண்புகளைப்
பெற்றவர். அறிவு முதிர்ச்சி அடைந்தவர். இளமையிலேயே
துறவு நெறியைப் பின்பற்றியவர். தம் நல்லாசிரியருடன் பாண்டி
நாட்டிலுள்ள மதுரையில் வாழ்ந்தவர். அங்குச் சங்கப்
புலவர்களுடன் இருந்து தமிழ்ச் சுவையைப் பருகியவர்.
அப்போது தமிழ்ப் புலவர் ஒருவர் ‘சமணர்களுக்குத் துறவை
மட்டுமே பாடத் தெரியும்; காமச் சுவைபட இலக்கியம்
படைக்க வல்லார் அல்லர்’ எனப் பழித்தார். இதனைக் கேட்ட
திருத்தக்க தேவர் ‘சமணர்கள் காமத்தை வெறுத்தனரே யன்றிப்
பாடத் தெரியாதவர்கள் அல்லர்’ என்றார். ‘அப்படி என்றால்
காமச் சுவைபட ஒரு நூல் இயற்றுக’ என்றார் புலவர். இதனைத்
தேவர் தன் ஆசிரியரிடம் கூற, அவர் தம் மாணாக்கரின்
புலமைத் திறத்தை உணர்த்த, எதிரே ஓடிய நரி ஒன்றைக்
காட்டி ‘இது பற்றிப் பாடுக’ என்றார். உடனே நரிவிருத்தம்
பாடினார் தேவர்.
திருத்தக்க தேவரின் புலமைத் திறத்தை நரிவிருத்தம்
பாடியதன் மூலம் சங்கப் புலவருக்கு வெளிப்படுத்திக் காட்டிய
ஆசிரியர், மீண்டும் தம் மாணவரை நோக்கி ‘ஜீவகன்
வரலாற்றைப் பெருங்காப்பியமாகப் பாடுக’ எனப் பணித்தார்.
அதோடு நின்றாரா? இல்லை; ஒரு கடவுள் வாழ்த்துப் பாடலைப்
பாடியும் கொடுத்தார். பின் தேவரும் ஒரு கடவுள் வாழ்த்துப்
பாடிக் காப்பியத்தைத் தொடங்கினார். தான் பாடிய கடவுள்
வாழ்த்தினும் தேவர் பாடிய கடவுள் வாழ்த்து சிறந்ததாக
அமைந்ததை அறிந்த ஆசிரியர், தேவர் பாடிய பாடலை
முதலிலும், தான் பாடிய பாடலை அடுத்தும் வைத்துக்
காப்பியத்தைப் படைக்குமாறு பணித்தார்.
ஆசிரியரின் ஆணையைத் தலைமேல் ஏற்ற திருத்தக்க
தேவர், காவியம் முழுவதையும் பாடி முடித்து ஆசிரியரிடம்
சமர்ப்பித்தார். ஆசிரியரின் வேண்டுகோளின்படி, அதைச்
சங்கப் புலவர்தம் அவையில் அரங்கேற்றினார். புலவர்களும்
அரசனும் அதனை வெகுவாகப் புகழ்ந்தனர். காப்பியத்தில்,
காமச்சுவையும் இன்பச் சுவையும் மிகுதியாகவும் சிறப்பாகவும்
இருப்பதைக் கண்ட சில புலவர்கள், தேவரின் துறவில் சற்று
ஐயம் கொண்டனர். சிற்றின்ப அனுபவம் இல்லாத ஒருவரால்
இந்த அளவுக்குச் சிற்றின்பத்தைப் பாடமுடியுமா? என்பது
அவரது கேள்வியாக இருந்தது; தேவரின் துறவு வாழ்வில் கூட
இவர்களுக்குச் சந்தேகம். இவர் சிற்றின்ப அனுபவம்
உடையவராக இருக்க வேண்டும் எனப் பேசிக் கொண்டனர்.
அவர்தம் உள்ளக் கிடக்கையை அறிந்த தேவர், ‘நான் உண்மையான பாலசன்னியாசியாகின் இப்பழுக்கக் காய்ச்சிய
இரும்பு சுடாதிருக்க’ எனக் கூறிக் கையால் தொட்டும், காலால்
தீண்டியும், அது அவருக்கு எவ்விதத் துன்பமும்
கொடுக்கவில்லை. இதனால் தேவரின் தவ ஆற்றலை அறிந்து
அஞ்சிய புலவர்கள் தம்மை மன்னிக்குமாறு வேண்டினர்.
அவர்களது பிழை பொறுத்த தேவர், ‘நீவிர் எனது துறவைப்
பலரும் அறியச் செய்து, நன்மையே செய்தீர்’ எனக் கூறி
அவர்களது அச்சத்தைப் போக்கினார். இவ்வாறு கர்ண
பரம்பரைக் கதை ஒன்று கூறுகிறது. இதுவே இவ்வாசிரியர் பற்றி
நாம் அறியக் கிடக்கின்ற வரலாறாகும்.
இக்கதை வழி நாம் அறியும் செய்தி என்ன தெரியுமா?
ஆசிரியர் திருத்தக்க தேவர் ஒரு சமண சமயத்தைச் சார்ந்தவர்
என்பது புலப்படுகிறது; அதோடு அவர் சிறந்த இளந்துறவி
என்பதும், தவ ஆற்றல் பெற்றவர் என்பதும்
தெரியவருகிறது. மேலும், ஆசிரியர் சிறந்த தமிழ்ப் பற்றாளர்
என்பதோடு, சிறந்த தமிழ்நூல் கல்வியாளர் என்பதும் தெரிய
வருகின்றது.
4.1.2 காப்பியத்தின் காலம்
சீவக சிந்தாமணியின் காலம், ஆசிரியர் வரலாறு முதலானவை
அறியப்படவில்லை என இதன் பதிப்பாளர் உ.வே.சாமிநாதையர்
குறிப்பிடுகிறார். என்றாலும் இதன் காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு என்று சிலர் கருதுகின்றனர். கம்பர், இதில்
ஒரகப்பை முகர்ந்து கொண்டார் என்பதால் இதன் காலம்
கம்பராமாயணத்திற்கு முந்தியதாகலாம் என்பர். சேக்கிழார்
காலத்தில், இந்நூல் செல்வாக்குப் பெற்றிருந்தாகச் சேக்கிழார் புராணம் குறிப்பிடுகிறது. எனவே இந்நூலினது காலம்.
இவற்றிற்கு முற்பட்டதென்பது தெரிகிறது. கம்பராமாயணம்
கி.பி. 10ஆம் நூற்றாண்டு என்பது பொதுவான கருத்து. அதற்கு
முந்தியது என்பதால் இந்நூலினது காலம் கி.பி. 9ஆம்
நூற்றாண்டு எனக் கொள்ளலாம். இக்காப்பியத்தின் மொழிநடை,
விருத்தப்பா அமைப்பு ஆகியவை கொண்டு, இது பெருங்கதைக்
காப்பியத்திற்குப் பின்னர் எழுந்திருக்க வேண்டும் என்பதும்
இங்குக் குறிப்பிடத்தக்கது. தமிழ்க் காப்பியங்களில்
விருத்தப்பாவின் தொடக்கம் சிலம்பில் தோற்றம் பெற்றாலும்,
தொடக்க காலக் காப்பியங்களான சிலப்பதிகாரம்,
மணிமேகலை, பெருங்கதை ஆகியன நிலைமண்டில
ஆசிரியப்பாவில் அமைந்தனவே. முதன்முதலாக
விருத்தப்பாவில் அமைந்த காப்பியம் சீவக சிந்தாமணியே.
எனவே, விருத்தப்பாவின் தொடக்கம் சிந்தாமணியே எனலாம்.
தொடர்ந்து இதன் செல்வாக்கு சூளாமணி, கம்பராமாயணம்,
பெரிய புராணம் முதலானவற்றில் இருப்பதை அறியலாம்.
காப்பிய இலக்கணம் கூறும் தண்டியலங்காரம் (காவ்யா தர்சம்)
நூலில் கூறப்பட்டுள்ள இலக்கணம் முழுவதுமாகப்
பின்பற்றப்பட்ட முதல் தமிழ்க் காப்பியம் இதுவே.
4.1.3 காப்பியத்தின் கதை மூலம்
தமிழ்க் காப்பியங்களில் சிலம்பு, மேகலைக்கு அடுத்து
எழுந்தவை அனைத்தும் வடமொழிச் சார்புடையனவே. பெரிய
புராணம் காப்பிய அமைப்பில் பாடப்பட்டாலும், அதனைக்
காப்பியம் என்ற இலக்கிய வகையில் சேர்ப்பதா-வேண்டாமா?
என்ற ஆராய்ச்சி இன்னும் நடந்து வருகிறது. இந்திய மொழிகள்
அனைத்திலுமே தொடக்க காலக் காப்பியங்கள் வடமொழிச்
சார்புடனேயே அமைகின்றன.
இந்நூலுக்கான முதல் நூல் இன்னதென்று ஆசிரியர்
குறிப்பிடவில்லை. இதனால் இந்நூலின் மூலநூல் எது என்பது
அறியப்படவில்லை என்பார் உ.வே.சாமிநாதையர். ஆயினும்,
வடமொழியில் சத்திர சூடாமணி, கத்திய சிந்தாமணி,
ஜீவந்தர நாடகம், ஜீவந்தர சம்பு என நான்கு நூல்கள்
உள்ளன. இவை சீவகன் சரித்திரம் கூறுவனவே. சமண
சமயத்தின் வேதாகமமாகக் கருதப்படும் ஸ்ரீபுராணத்திலும்,
மகாபுராணத்திலும் இக்கதை சொல்லப்பட்டுள்ளது. இவை,
இக்காப்பியத்தின் மூலமாகலாம் என்ற கருத்து நிலவுகிறது.
தமிழில் சிந்தாமணி மாலை என்ற நூலொன்றும்
அறியப்படுகிறது. சமணர்கள் இந்நூலுக்கான மூலநூல் சத்திர
சூடாமணியே என்கின்றனர். என்றாலும், மேற்கண்ட நூலின்
கதைக்கும் சீவக சிந்தாமணி கதைக்கும் அடிப்படையில் சில
வேறுபாடுகளும் உண்டு என்கிறார் உ.வே.சாமிநாதையர். இதற்கான காரணம் தமிழ் மரபுக்கு ஏற்பச் சிந்தாமணி ஆசிரியர்
செய்து கொண்ட மாற்றமே எனலாம். வால்மீகி
ராமாயணத்திற்கும் கம்பராமாயணத்திற்கும் உள்ள வேறுபாடு
போன்றதே இதுவும் எனலாம். சமண சமயச் சிந்தனைகளைத்
தமிழ் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்ற நோக்கில்
இக்கதை தமிழ்க் காப்பியமாகப் பாடப்பட்டிருக்க வேண்டும்
என்று கருதலாம். சோழர் காலத்தில் சமண சமயம்
அரசர்களாலும், ஆழ்வார்-நாயன்மார்களாலும் நசுக்கப்பட்ட
சமூகச் சூழலில் அதன் எழுச்சியைச் சீவகனின் அரசுருவாக்கம்
மூலம் மீட்டுருவாக்குவதே இக்கதையை - வடமொழி
வரலாற்றை எடுத்தாண்டதற்கான நோக்கமாவும் கொள்ளலாம்.
சமணர்கள் இசைக்கு எதிர்ப்பு, இன்பத்திற்கு எதிர்ப்பு என்ற
பிரச்சாரம் ஓங்கியிருந்த சூழலில் தாங்கள் இவற்றிற்கெல்லாம்
எதிர்ப்பாளர்கள், மறுப்பாளர்கள் அல்ல என்பதை
எடுத்துரைக்கவே இக்கதையை அருமையான விருத்தப்பாவில்
பாடியுள்ளார் திருத்தக்க தேவர் எனக் கருதலாம். பக்தி
இயக்கத்தின் உச்ச கட்டக் காலத்தில், தம் சமயக் கொள்கையை
நிலை நிறுத்த ஆசிரியருக்குச் சீவகன் வரலாறு ஒரு
நிலைக்களனாக அமைந்ததில் வியப்பில்லை. தம் சமயத்தை
நிலை நிறுத்துவதில், சமயக் கொள்கைகளைப் பரப்புவதில்,
தாங்கள் இசைக்கோ, சிற்றின்பத்திற்கோ எதிர்ப்பாளர்கள்
அல்ல என்பதை உறுதி செய்வதில், தேவர் மிகப்பெரிய
சாதனை புரிந்துள்ளார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
இந்நூலின் ஏட்டுப் பிரதிகள், தமிழகத்தின் அனைத்துப்
பகுதிகளிலும் கிடைத்துள்ளமை இதனை உறுதி செய்யும்.
|