5.4 வளையாபதி
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாக எண்ணப்படுவது
வளையாபதி. 19ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த
இவ்விலக்கியம் பின்னர் எப்படியோ அழிந்துவிட்டது. இதன்
பிரதியைத் திருவாவடுதுறை ஆதினத்தில்
பார்த்ததாக உ.வே. சாமிநாதய்யர் குறிப்பிடுகிறார். பின்னர்
இதனைப் பதிப்பிக்கும் நோக்கத்தோடு தேடியபோது, எங்கும்
கிடைக்கப் பெறவில்லை என வருத்தத்துடன் உ.வே.
சாமிநாதய்யர் அவர்கள் குறிப்பிடுகிறார்.
5.4.1 நூல் வரலாறு
வளையாபதி காப்பிய ஆசிரியர் யார்? எப்போது இந்நூல்
இயற்றப்பட்டது? காவியத் தலைவன் பெயர் என்ன?
காவியத்தின் கதைதான் என்ன? இந்த வினாக்களுக்கு யாதொரு
விடையும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. இக்காப்பியத்தின்
சில செய்யுள்கள் மட்டும் கிடைத்துள்ளன. கிடைத்துள்ள
பாடல்களைக் கொண்டு நோக்குகிறபோது, இது ஒரு சமண
சமய நூல் என்பது மட்டும் உறுதியாகிறது.
சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு
நல்லார், யாப்பருங்கல விருத்தி உரையாசிரியர்,
நச்சினார்க்கினியர், இளம்பூரணர் முதலானோர் இந்நூலின்
பாடல்களை மேற்கோள் காட்டுகின்றனர். இந்நூற்பாடல்கள்
அறுபத்து ஆறு புறத்திரட்டு நூலில் தொகுப்பட்டுள்ளன.
எங்ஙனம், அங்ஙனம் என்ற சொற்கள் எங்ஙனே அங்ஙனே
என்று வந்துள்ளன. “இவர் வளையாபதியை நினைத்தால் கவியழகு வேண்டி” எனத் தக்கயாகப் பரணி உரையாசிரியர்
குறிப்பிடுகிறார். எனவே இந்நூல் கவியழகு மிக்கது என்பது
தெரிய வருகிறது. இந்நூற் பாடல்கள் மொத்தம் எழுபத்தி
இரண்டு கிடைத்துள்ளன.
5.4.2 நூலாசிரியர்
நூலைப் போலவே நூலாசிரியர் யார்? அவர் எந்த ஊரைச்
சார்ந்தவர்? எந்தக் காலகட்டத்தில் வாழ்ந்தவர் என்பதெல்லாம்
அறியப்படவில்லை. நூற்பாடலைக் கொண்டு இவர் சமண
சமயத்தைச் சார்ந்தவர் என யூகிக்கலாம். நூலாசிரியர் இலக்கிய
ரசனையுடன் பாடல் புனையும் ஆற்றல் மிக்கவர். அறத்தில்
சமண சமயக் கொள்கையில் ஆழ்ந்த பற்றும் பிடிப்பும்
கொண்டவர் என்பது கிடைத்துள்ள பாடல்கள் வழி அறிய
முடிகிறது.
5.4.3 கதை
வளையாபதி கதை இன்னதுதான் என்பது அறியப்படாத
ஒன்று. கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டும் கூட இதன்
கதையை அறிய முடியவில்லை. வளையாபதி கதை என ஒரு
கதை வழக்கில் உள்ளது. அதற்கும் வளையாபதி பாடல்
கருத்துகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை
உணரலாம். கதை வருமாறு:

நவகோடி நாராயணன் ஒரு வைர வாணிகன். அவன்
தன் குலத்தில் ஒரு பெண்ணையும், வேறு குலத்துப்
பெண்ணையும் திருமணம் செய்ததால், அவனைக் குலத்தை
விட்டுத் தள்ளி வைத்து விடுகின்றனர். இதனால் துன்பமுற்ற
நாராயணன், வேறு வழியின்றி வேறு குலத்துப் பெண்ணைத் தள்ளி வைத்து
விடுகிறான். அவளோ, தனக்கு மறுவாழ்வு அளிக்கும்படி
காளியை வேண்டுகிறாள். காளியின் அருளால் அவளுக்கு ஓர்
ஆண் குழந்தை பிறக்கிறது. அக்குழந்தை வளர்ந்து
பெரியவனாகிப் புகார் நகர் வணிகர் அவையில் ‘தன் தந்தை
நாராயணனே’ என்று நிறுவுகிறான். காளிதேவியும் சாட்சி கூறி
அதனை மெய்ப்பிக்கிறது. இதனால் குடும்பம் ஒன்றுசேர,
அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.
|