1.4 பெரியபுராணமும் காப்பியக் கொள்கையும்

வடமொழி இலக்கிய மரபில் பெருங்காப்பியத்திற்கு என்று சில இலக்கண வரையறைகள் உண்டு. தமிழில் தண்டி அலங்காரம் என்ற நூல் இந்த இலக்கணத்தை விரிவாகக் கூறி உள்ளது. இதில் கூறும் இலக்கணங்கள் அனைத்தும் பொருந்தி வருவது பெருங்காப்பியம் என்றும், ஒரு சில குறைந்து வருவது சிறு காப்பியம் என்றும் வகை செய்வது உண்டு. அந்த இலக்கண வரையறைகளை இனிக் காண்போம்.

1.4.1 காப்பிய இலக்கணம்

1) வாழ்த்து, தெய்வ வணக்கம், நூலின் பாடுபொருள் ஆகியன நூலின் தொடக்கத்தில் அமைதல் வேண்டும்.

2) அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றின் பயனைத் தருவதாக நூல் அமைதல் வேண்டும்.

3) காப்பியத்தின் தலைவன் தனக்கு நிகர் யாரும் இல்லாதவனாக இருக்க வேண்டும்.

4) காப்பியத்தில் நாடு, நகர், கடல், மலை, காடு ஆகியவை பற்றிய வருணனைகள் இடம் பெற்றிருக்க வேண்டும்.

5) திருமணம், முடிசூட்டுதல், நீர் விளையாட்டு, காதல் நிகழ்ச்சிகள் முதலியன இடம் பெற்றிருக்க வேண்டும்.

6) தூது செல்லுதல், போர் செய்தல், வெற்றியடைதல் முதலிய நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருக்க வேண்டும்.

7) சருக்கம், இலம்பகம், படலம் முதலியவற்றில் ஏதாவது ஒன்றின் பெயரில் காப்பியம் பல பிரிவுகளைக் கொண்டிருக்க வேண்டும்.

மேலே கூறப்பெற்ற இலக்கணத்தின்படி காப்பியங்கள் அமைந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இக்காப்பிய மரபு தமிழில் சில காப்பியங்களுக்குப் பொருந்தியும் சில காப்பியங்களுக்குப் பொருந்தாமலும் உள்ளது. இதனால் தமிழ் ஆராய்ச்சியாளர்கள் இடையே பெரும் விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. சேக்கிழார் என்னும் நூலை எழுதிய சி.கே சுப்பிரமணிய முதலியார் மேலே கூறிய காப்பிய இலக்கணங்களைப் பெரியபுராணத்தில் பொருத்தி ஆராய்ந்துள்ளார்; பெரியபுராணம் ஒரு காப்பியமே என்று நிறுவி உள்ளார். வேறு சிலர் பெரியபுராணம் ஒரு தொகுப்பு நூலே தவிரக் காப்பியம் அன்று என்று கூறி உள்ளனர். அடியார் பலரின் வரலாற்றைத் தொகுத்துத் தருவதே பெரியபுராணம். எனவே அது காப்பியம்தான் என்று ஏற்றுக்கொள்வர் சிலர்.

சேக்கிழார் வகுத்த காப்பியம் அதற்கு முன்னர்த் தோன்றிய காப்பியங்கள் போல் அல்லாமல் தனித்துவம் உடையது என்று அ.ச.ஞானசம்பந்தன் கூறுகின்றார். காப்பியங்களுக்கு இலக்கணம் கூறுகின்ற நூல்கள் ஒன்று கூடத் தமிழில் உள்ள காப்பியங்களை முன் உதாரணமாகக் கொள்ளவில்லை. வடமொழிக் காப்பிய அடிப்படையைத்தான் கொண்டுள்ளன என்று அவர் விளக்கி உள்ளார். எனவே பெரியபுராணக் காப்பியக் கொள்கையை, தண்டியின் காப்பிய இலக்கணம் கொண்டு ஆராயக் கூடாது என்பது இவரது முடிவு.

சேக்கிழார் அவருக்கு முன் தோன்றிய எந்த ஒரு காப்பியத்தையும் பின்பற்றவில்லை என்பதும் அவரது முடிவு. சுந்தரரின் வாழ்க்கை வரலாற்றைக் காப்பியமாகக் கூறும் சேக்கிழார், இடையிடையே ஏனைய அடியார்களின் வரலாற்றையும் இணைத்துப் பாடியுள்ளார். இது தமிழ்க் காப்பிய மரபில் ஒரு புது மரபாகும். இக்காப்பியத்தில் தனக்கு நிகரில்லாத தலைவனாகச் சுந்தரரைச் சேக்கிழார் காட்டுகிறார் என்கிறார் அ.ச.ஞா.

1.4.2 பெரியபுராணத்தில் காப்பிய இலக்கணம்

பெரியபுராணம் தனித் தனியாகப் பல வரலாறுகளைக் கூறுவது என்று சிலர் கருதுகிறார்கள். அது தவறு. இப்புராணம் பெருங்காப்பியமாக ஒரு பழைய சரித்திரத்தைச் சொல்வது என சி.கே. சுப்பிரமணிய முதலியார் கருதுகிறார். திருக்கயிலாய மலையில் (சிவனுக்குரிய மலை/இருப்பிடம்) உள்ள ஆலால சுந்தரர், தென்திசையில் வாழ்வதற்காகவும், திருத்தொண்டத் தொகை என்னும் நூலைப் படைப்பதற்காகவும் பூவுலகில் பிறந்தார். அவருடன் கமலினி, அநிந்திதை என்னும் இரு பெண்மணிகளும் பிறந்தனர். இவர்களே பெரியபுராணத்தில் சுந்தரமூர்த்தி நாயனாராகவும், பரவை நாச்சியாராகவும், சங்கிலியாராகவும் இடம் பெற்றுள்ளனர். 

சுந்தரமூர்த்தி இந்த இரு பெண்களையும் மணந்து கொண்டார். திருத்தொண்டத் தொகை பாடினார். பல்வேறு கோயில்களுக்கும் சென்று சிவனை வழிபட்டுப் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தினார். அக்கோயில்களைப் பற்றியும், சிவபெருமான் புகழையும் பாடினார். அப்பாமாலைகள் திருப்பாட்டு என வழங்கப்பட்டன. பின்னால் அப்பர், சம்பந்தர் ஆகியவர்களின் பாடல்களோடு சேர்த்துத் தேவாரம் என்னும் பொதுப் பெயர் பெற்றன. பின்னர் இறைவன் ஆணையால் வெள்ளை யானை மீது ஏறிக் கயிலாயம் சென்றடைந்தார். இந்திரன், பிரம்மன், திருமால் முதலிய தேவர்களும், முனிவர்களும் அவரை எதிர் கொண்டு அழைத்தனர். அவரின் வருகை கயிலாயம் முழுவதும் பேரொளியாய் வீசியது.

இவ்வாறாகச் சுந்தரர் வரலாறு பெரியபுராணத்தில் பாடப் பெற்றுள்ளது. இதன் வழிச் சுந்தரரே காப்பியத் தலைவன் என்று கொண்டனர். பரவை நாச்சியாரும், சங்கிலியாரும் தலைவியர் ஆவர். இவர்களின் வரலாற்றின் இடையே ஏனைய அடியார்களின் வரலாறுகள் கூறப்பெற்று ஒரு முழுக் காப்பியமாகப் பெரியபுராணம் விளங்குகிறது என்று அறிஞர்கள் கூறுவர். காப்பிய இலக்கணம் பெரியபுராணத்தில் அமைந்துள்ளதைப் பின் வருமாறு பட்டியலிட்டுப் பார்க்கலாம்.
 

காப்பிய இலக்கணம்

பெரியபுராணத்தில் காப்பிய இலக்கணம்

1) தெய்வ வணக்கம், பாடுபொருள், வாழ்த்து.

1. உலகு எலாம் எனத் தொடங்கும் பெரியபுராண முதல் பாடல் தெய்வ வணக்கம் ஆகும். இப்பாடலிலேயே வாழ்த்தும் அடங்கும். அடியார் பெருமை பாடுபொருள் ஆகும்.
 

2) அறம், பொருள், இன்பம், வீடு.

2. அடியார்கள் வாழ்க்கையில் இந்த நான்கும் வெளிப்பட்டு உள்ளன.
 

3) காப்பியத் தலைவன், தலைவி.

3. சுந்தர மூர்த்தி நாயனார், பரவை நாச்சியார், சங்கிலியார்
 

4) மலை, நாடு, நகரம், காடு, கடல் - வருணனைகள்

4. கயிலைமலை, சோழநாடு, திருவாரூர், காடும் கடலும், கண்ணப்ப நாயனார்,
அதிபத்த நாயனார் புராணத்தில்
வருணிக்கப்பட்டுள்ளன.
 

5) பருவகால வருணனைகள்: காலை, மாலை பொழுது - வருணனைகள்
 

5. திருஞானசம்பந்தர் புராணம் முதலியவற்றில் அமைந்துள்ளன.

6) மணம் முடித்தல், காதல் நிகழ்ச்சிகள்.
 

6. சுந்தரர் புராணத்தில் உள்ளன.

7) முடிசூட்டுதல்

7. கழறிற்றறிவார் புராணம்
 

8) தூது

8. சுந்தரர் புராணம்
 

9) போர், வெற்றி

9. புகழ்ச் சோழ நாயனார் புராணம்
 

10) காப்பியப் பகுப்பு

10. பதின்மூன்று சருக்கங்களாகப்
பகுக்கப்பட்டுள்ளது.

1.4.3. பெரியபுராணத்தில் புதிய காப்பிய மரபு

பெரியபுராணம், காப்பிய இலக்கணங்களுக்கு ஏற்ப அமையவில்லை என்று கூறுவாருக்கு மறுமொழியாக அது ஒரு புதிய காப்பிய மரபு உடையது என்பார் பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன்.

“காப்பிய இலக்கணத்திற்கு ஒத்துவராத உதிரிக் கதைகளை ஒன்று சேர்த்துக் காப்பியம் பாடிவிட்டார். எனவே காப்பிய இலக்கணம் அதில் அமையவில்லை என்று கூறுவது அவரது காப்பியத்தில் புதைந்து கிடக்கும் பேராற்றலைக் காண விரும்பாமல் கண்களை மூடிக் கொள்வதாக அமையும். யாரோ கூறிய காப்பியப் புற அமைப்பு இலக்கணத்தைப் பெரியபுராணத்தில் தேட முயன்று அது கிடைக்காததால் இதனைக் காப்பியமன்று என்று கூறுவது அறியாமை ஆகும். பெரியபுராணமாகிய காப்பியத்திற்கு அதுவே இலக்கணம் ஆகும். அதன் புற அமைப்பு முறை தமிழ்க் காப்பிய உலகில் புதிதாக வடிவமைக்கப்பட்டது ஆகும்” என்பது அவர் தரும் விளக்கமாகும்.